தேடுதல்

கர்தினால் Fridolin Ambongo கர்தினால் Fridolin Ambongo 

காங்கோவில் தொடரும் கொலைகள் குறித்து தலத்திருஅவை கவலை

காங்கோ சனநாயக குடியரசில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இடம்பெற்றுவரும் வன்முறைக்கு, ஆயுதம் ஏந்திய குழுக்களின் இரத்த தாகமே காரணம் - கர்தினால் Ambongo.

மேரி தெரேசா: வத்திக்கான்

2023ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் காங்கோ சனநாயக குடியரசுக்குத் திருத்தூதுப் பயணம் மேற்கொள்ளவுள்ளவேளை, அந்நாட்டில் தொடர்ந்து இடம்பெற்றுவரும் வன்முறையைத் தடுத்து நிறுத்துவதற்கு உலகளாவிய சமுதாயம் நடவடிக்கை எடுக்காமல் இருப்பது குறித்து தன் கவலையை வெளியிட்டுள்ளார், அந்நாட்டு கர்தினால் Fridolin Ambongo.

இவ்வாரத்தில் வத்திக்கானில் நடைபெற்ற சி-6 கர்தினால்கள் அவையில் கலந்துகொண்ட கர்தினால் Ambongo அவர்கள் வத்திக்கான் செய்திகளுக்கு அளித்த பேட்டியில், காங்கோ சனநாயக குடியரசில் இடம்பெற்றுவரும் கொலைகள் எவ்வளவு காலத்திற்கு நீடிக்கும் என்ற கேள்வியை மிகுந்த வேதனையோடு எழுப்பியுள்ளார்.

அந்நாட்டின் கிழக்குப் பகுதியில் அண்மை நாள்களில் வன்முறைகள் மீண்டும் வெடித்துள்ளவேளை, தலைநகர் கின்ஷாசா பேராயர் கர்தினால் Ambongo அவர்கள், அந்நாட்டிற்கு உதவுவதற்கு உலகளாவிய சமுதாயம் தவறியுள்ளது என்றும், அதேநேரம், அந்நாட்டு ஆயர்கள் தேசிய ஒற்றுமைக்காகப் பணியாற்றி வருகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.

வன்முறையின் வரலாறு

அந்நாட்டில் ஏறத்தாழ முப்பது ஆண்டுகளாக இடம்பெறும் வன்முறைக்கு, ஆயுதம் ஏந்திய குழுக்களின் இரத்த தாகமே காரணம் என்றும், தனக்கு கிடைத்த தகவலின்படி, ருவாண்டா மற்றும் உகாண்டா அரசுகள், புரட்சிக் குழுக்களுக்கு உதவுகின்றன என்றும் கூறியுள்ளார் கர்தினால் Ambongo.

காங்கோவின் மேற்குப் பகுதியின் நிலைமை மோசமடைந்து வருவது குறித்தும் தன் பேட்டியில் விவரித்த கர்தினால் Ambongo அவர்கள், அரசு செயல்படாதபோது மற்ற சக்திகள், அதிகாரத்தைக் கையில் எடுக்கின்றன எனவும், குற்றக்கும்பல்கள், அரசின் செயலற்றதன்மையை தங்களுக்குச் சாதகமாகப் பயன்டுத்தி, தற்போது அப்பகுதியில் மரணத்தையும் வறட்சியையும் விதைக்கின்றன எனவும் கூறியுள்ளார்.

அந்நாட்டில் MONUSCO எனப்படும் ஐ.நா.வின் அமைதி காக்கும் படைகள், M23 புரட்சிக் குழுக்களிடம் சக்தியற்று இருப்பதையும் குறிப்பிட்டுள்ள கர்தினால், தற்போது அப்புரட்சிக் குழுக்களிடம் நவீனமயமாக்கப்பட்ட ஆயுதங்கள் அதிகம் இருப்பதே இதற்கு காரணம் என்றும் தெரிவித்துள்ளார்.

 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2022, 14:38