விவிலியத் தேடல் : திருப்பாடல் 35-9 ‘நற்செயலே நன்மை தரும்’!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘நீதியை நிலைபெறச் செய்வோம்’ என்ற தலைப்பில் 35-வது திருப்பாடலில் 23 முதல் 26 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 27, 28 ஆகிய இரண்டு இறைவார்த்தைகள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொணர்வோம். இப்போது இறையொளியில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். என் நேர்மை நிலைநாட்டப்படுவதை விரும்புவார் ஆரவாரத்துடன் அக்களிக்கட்டும்; ‛ஆண்டவர் எத்துணைப் பெரியவர்! அவர் தம் அடியாரின் நல்வாழ்வைக் காண விரும்புவோர்’ என்று எப்பொழுதும் சொல்லட்டும். அப்பொழுது, என் நா உம் நீதியை எடுத்துரைத்து, நாள் முழுதும் உம் புகழ் பாடும் (வசனம் 27-28).
யூதர்கள் மறதிக்கென்று ஒரு தேவதை இருப்பதாக நம்புகின்றார்கள். அந்தத் தேவதை ஒருவரின் மூக்கில்தான் முத்தமிடுமாம். அப்படி முத்தமிட்டால் அந்த நபருக்கு நினைவாற்றல் போய்விடுமாம். மேலும் இந்தத் தேவதை மறதியை உருவாக்கி நற்செயலை மட்டுமே செய்யும் என்றும் யூதர்கள் நம்புகிறார்கள். அதற்கு எடுத்துக்காட்டாகக் கதை ஒன்று கூறப்படுகின்றது. கொலை குற்றத்திற்காக யூத வணிகர் ஒருவரை அரசு கைது செய்தது. அவர் அப்பாவி. நிரபராதி. யாரோ ஒருவர் செய்த கொலைக்காக அவ்வணிகரைக் கைது செய்து தூக்குத் தண்டனை விதித்துவிட்டது அரசு. தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படுவதற்கு முந்தின நாள் அந்த யூத வணிகரின் குடும்பம் அவரைக் காண வந்திருந்தது. அவர்களிடம் அவர் கண்ணீர்விட்டு அழுது எப்படியாவது தன்னைக் காப்பாற்றுமாறு வேண்டினார். அவரின் குடும்பத்தாருக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அவர்களும் களங்கிப்போய் நின்றார்கள்.
அவர்கள் வீட்டிற்கு வந்ததும் மறதியின் தேவதையிடம் மண்டியிட்டு வணங்கி, அவரைக் காப்பற்றுமாறு கண்ணீர்விட்டுக் கதறி அழுதனர். மறுநாள் காலை அவ்வணிகரைத் தூக்கிலிடுவதற்காகக் கூட்டிக்கொண்டுப் போனார்கள். ஒருவரைத் தூக்கிலிடுவதற்கு முன்பு அவர் எதற்காகத் தூக்கிலிடப்படுகிறார் என்ற காரணத்தை விளக்கும் நீதிபதியின் ஆணையை வாசிப்பது வழக்கம். அன்று அந்த ஆணையைக் காணவில்லை. அச்சிறையின் அதிகாரி மறதியில் அதனை எங்கோ வைத்துவிட்டார். உடனே அதனைக் தேடிக் கண்டுபிடிக்குமாறு அந்தச் சிறை அதிகாரி காவலர்களிடம் உத்தரவிட்டார். ஆனால், அவர்கள் எவ்வளவோ தேடியும் அதனைக் கண்டுபிடிக்க முடியவில்லை. உடனே நீதிபதியிடம் சென்று அவ்வழக்குப் பற்றிக் கூறி புதிய ஆணையைப் பெற்றுவரும்படி சிறை அதிகாரி உத்தரவிட்டார். இரண்டு காவலர்கள் உடனடியாக நீதிபதியின் வீட்டிற்குச் சென்றார்கள். அவருக்கோ அந்த வழக்கைப் பற்றிய விவரங்கள் எதுவும் நினைவில் இல்லை. அவருக்கு எல்லாமே மறந்துபோய்விட்டது. அவர் நீதிமன்றத்தின் பதிவாளரிடம் சென்று விவரங்களைக் வாங்கி வரும்படி கூறினார். உடனே காவலர்கள் பதிவாளரைத் தேடி ஓடினர். அவருக்கும் அது என்ன மாதிரியான வழக்கு, என்ன தீர்ப்பு வழங்கப்பட்டது என்றெல்லாம் மறந்துபோய்விட்டது. முடிவில், அரசு உத்திரவில்லாமல் தண்டிக்க முடியாது என்று கூறி அவ்வணிகரை விடுதலை செய்துவிட்டனர். அவர் வீடு திரும்பியவுடன் இந்த அதிசயம் எவ்வாறு நிகழ்ந்தது என்று தனது மனைவி மக்களிடம் கேட்டார். அப்போது மறதியின் தேவதை அவர்கள்முன் தோன்றி, “ஒரு நிரபராதி தண்டிக்கப்படக் கூடாது என்பதற்காக நான்தான் அவர்கள் மூக்கில் முத்தமிட்டேன்” என்று கூறியது. அப்போது அனைவரும் மகிழ்ச்சியடைந்து அந்த மறதியின் தேவதைக்கு நன்றி கூறினர்.
இந்தத் திருப்பாடல் தொடங்கும்போது, ஆண்டவரே, எனக்கெதிராய் வழக்காடுவோருடன் வழக்காடும்; என்மீது போர் தொடுப்போரோடு போர் புரியும் (வசனம் 1) என்ற இறைவசனத்துடன் தான் தொடங்குகிறது. இத்திருப்பாடல் முழுவதும் எதிரிகளின் கொடுஞ்செயல்கள், கோக்குமாக்கு வேலைகள், குழிபறிக்கும் செயல்கள், வஞ்சக எண்ணங்கள், பழிவாங்கும் செயல்கள் ஆகிவற்றைக் குறித்து தாவீது அரசர் புலம்பி அழுது கடவுளிடம் முறையிடுவதைப் பார்த்தோம். அதாவது, எதிரிகளைக் குறித்த வேதனை, வருத்தம், ஏமாற்றம், கைவிடப்படல், இகழ்ந்துரைக்கப்படல், எள்ளிநகையாடப்படல், ஒன்றுமில்லா நிலைக்குத் தள்ளப்படல், நெருக்கடியான நிலையில் சிக்கித் தவித்தல், சாவின் படுகுழி தரும் வேதனையை அனுபவித்தல் என அவநம்பிக்கையான மனநிலையில் தாவீது காணப்பட்டாலும், இறுதியில், என் நா உம் நீதியை எடுத்துரைத்து, நாள் முழுதும் உம் புகழ் பாடும் என ஆண்டவரின் அரும்பெரும் செயல்களுக்காக அவருக்கு நன்றிகூறி முடிக்கின்றார் தாவீது அரசர்.
மேலும், என் கடவுளே! என் எதிரிகளினின்று என்னை விடுவித்தருளும்; என்னை எதிர்த்து எழுவோரிடமிருந்து எனக்குப் பாதுகாப்பளித்தருளும். தீமை செய்வோரிடமிருந்து எனக்கு விடுதலை அளித்தருளும்; கொலைவெறியரிடமிருந்து என்னைக் காத்தருளும். ஏனெனில், அவர்கள் என்னைக் கொல்வதற்காகப் பதுங்கியுள்ளனர்; கொடியவர் என்னைத் தாக்கத் திட்டமிட்டுள்ளனர் (திபா 59:1-3) என்று கூறினாலும், நானோ உமது ஆற்றலைப் புகழ்ந்து பாடுவேன்; காலையில் உமது பேரன்பைப் பற்றி ஆர்ப்பரித்துப் பாடுவேன்; ஏனெனில், நெருக்கடியான வேளையில் நீர் எனக்கு அரணும் அடைக்கலமுமாய் இருந்தீர். என் ஆற்றல் நீரே! உம்மைப் போற்றிப் பாடுவேன்; ஏனெனில், கடவுள் எனக்கு அரண்; கடவுளே எனக்குப் பேரன்பு! (திபா 59:1-3), என்று பாடுகின்றார். அவ்வாறே, தீயோரும் வஞ்சனை செய்வோரும் எனக்கெதிராய்த் தம் வாயைத் திறந்துள்ளனர்; எனக்கெதிராய் அவர்கள் பொய்களைப் பேசியுள்ளனர். பகைவரின் சொற்கள் என்னைச் சூழ்ந்துள்ளன; அவர்கள் காரணமின்றி என்னைத் தாக்குகின்றனர் (திபா 109:16-17) என்று தனது எதிரிகள் குறித்து ஆண்டவரிடம் முறையிடும் தாவீது, என் நாவினால் ஆண்டவரைப் பெரிதும் போற்றிடுவேன்; பெரும் கூட்டத்திடையே அவரைப் புகழ்ந்திடுவேன். ஏனெனில், வறியோரின் வலப்பக்கம் அவர் நிற்கின்றார்; தண்டனைத் தீர்ப்பிடுவோரிடமிருந்து அவர்களது உயிரைக் காக்க நிற்கின்றார் என்று முடிக்கின்றார் (திபா 109: 30-31). அதாவது, அவநம்பிக்கையில் தொடங்கினாலும் நம்பிக்கையில் முடிக்கின்றார்.
தாவீது அரசரிடம் மட்டுமல்ல, இறைவாக்கினரான எரேமியாவிடமும் இதே மனநிலையைத்தான் பார்க்கின்றோம். வெட்டுவதற்குக் கொண்டு செல்லப்படும் சாந்தமான செம்மறிபோல் இருந்தேன்; அவர்கள் எனக்கு எதிராய், “மரத்தைப் பழத்தோடு அழிப்போம்; வாழ்வோரின் நாட்டிலிருந்து அவனை அகற்றிவிடுவோம்; அவன் பெயர் மறக்கப்படட்டும்” என்று சொல்லிச் சதித் திட்டம் தீட்டியதை நான் அறியாதிருந்தேன் என்று தனது எதிரிகள் குறித்து ஆண்டவரிடம் முறையிட்டாலும், படைகளின் ஆண்டவரே, நீர் நேர்மையோடு தீர்ப்பிடுபவர்; உள்ளுணர்வுகளையும் இதயச் சிந்தனைகளையும் சோதித்தறிபவர்; நீர் அவர்களைப் பழிவாங்குவதை நான் காணவேண்டும். ஏனெனில், என் வழக்கை உம்மிடம் எடுத்துரைத்துள்ளேன் என்று ஆண்டவரிடம் சரணடைகின்றார். (எரே 11:19-20). ஆக, கடவுளிடம் முழு நம்பிக்கைக் கொண்டுள்ள எந்தவொரு இறையடியாரிடமும் இதே மனநிலைதான் காணப்படும்.
பொதுவாக, தீயவர்கள் நன்மையை வெறுத்து தீமையை மட்டுமே குறிக்கோளாகக் கொள்கின்றனர். ஆனால், நல்லவர்கள் தீமையை வெறுத்து நன்மையை மட்டுமே தங்களின் குறிக்கோளாக வைத்துக் கொள்கின்றனர். இதில் கொடுமையானது என்னவென்றால் தீயவர்கள் தங்களிடம் உள்ள வேண்டாத ஒன்றை நல்லது என்று நம்ப வைத்து நல்லவர்களிடம் உள்ள நன்மைகளையும் எடுத்து கொள்வதுதான். நல்லவர்களும் வேறு வழியே இல்லாமல் அதனை ஏற்றுக்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகின்றனர். இன்றைய இந்தியாவின் நிலையும் இதுதான். உலக அரங்கில் இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்கின்றோம் என்பதன் பெயரில் பெரும் பணக்காரர்கள் ஆளும் வர்க்கத்தினரின் துணையோடு நாட்டின் வளங்களைக் கொள்ளையடித்து வருகின்றனர். இதன் காரணமாகவே ஏழைகளுக்கும் பணக்காரர்களுக்கும் இடையே நிலவும் இடைவெளிகள் தொடர்ந்து அதிகரித்துக்கொண்டே போகின்றன. ஏதாவது ஒரு வகையில், ஆளும் வர்க்கமும் அதிகார வர்க்கமும் தங்களின் செல்வாக்கையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி, ஏழை, எளியவர்களை நசுக்கிக் கொண்டிருக்கிறன. ஏழைகளும் மீள முடியாமல் இந்த அடிமைத்தனத்தை சகித்துக்கொண்டு, தாங்கள் மீண்டு எழுவதற்கு ஏதாவதொரு வாய்ப்பு கிடைத்துவிடாதா? என்ற நம்பிக்கையில் காலத்தைக் கழித்து வருகின்றனர். ஆனாலும், இவர்களில் சிலர் மட்டுமே, இறுதிவரை உறுதியாகத் தீமைக்கு எதிராகப் போராடி வருகின்றனர்.
தாவீதை பொறுத்தமட்டில், சவுல் விரித்த சதி வலையில் சிக்கிக்கொள்ளாமல் அவர் ஏற்படுத்த விரும்பிய தீமையின் விளைவுகளைக் கண்டுத் தப்பித்துக்கொள்ளும் பொருட்டு கடவுளிடம் மட்டுமே சரணடைகின்றார். இதன் காரணமாகவே, தொடக்கத்தில் அவர் விரக்தி நிலைக்குத் தள்ளப்பட்டாலும் இறுதியில் கடவுளிடம் தான் கொண்டிருக்கும் ஆழமான இறைநம்பிக்கையால் மீட்புப் பெறுகின்றார். அத்துடன் அவருக்குத் தீமை விளைவிக்க விரும்பிய அவர்தம் எதிரிகளின் பேரழிவினையும் காண்கின்றார். ஆகவே, நமக்குத் தீமை விளைவிப்பவர்களைப் பழிவாங்க வேண்டும் என்பதைக் காட்டிலும், அவர்களைக் கடவுளின் கரங்களில் விட்டுவிட்டு அவர் காட்டும் நேரியப் பாதையில் நமது பயணத்தைத் தொடர்வோம். அதற்கான அருள்வரங்களை இறைவனிடம் இந்நாளில் இறைஞ்சி மன்றாடுவோம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்