அருள்தந்தை ஸ்டான் சாமியின் உருவப்படம் அருள்தந்தை ஸ்டான் சாமியின் உருவப்படம்  

விவிலியத் தேடல்:திருப்பாடல் 35-8 ‘நீதியை நிலைபெறச் செய்வோம்!

நீதியும் அநீதியும் நிலவும் இவ்வுலகில், நாம் எப்போதும் நீதியை மட்டுமே தெரிந்துகொள்ளவேண்டும். காரணம், நீதி கடவுளிடமிருந்தே ஊற்றெடுக்கின்றது.
திருப்பாடல் 35-8

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘அமைதியின் தூதுவர்களாவோம்!’ என்ற தலைப்பில் 35-வது திருப்பாடலில் 19 முதல் 22 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 23 முதல் 26 வரையுள்ள மூன்று இறைவார்த்தைகள் குறித்துத் தியானிப்போம். இப்போது மனம் ஒன்றிய நிலையில் அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம்.

என் கடவுளே, கிளர்ந்தெழும்! என் தலைவரே, விழித்தெழுந்து என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும். என் கடவுளாகிய ஆண்டவரே, உமது நீதிக்கேற்ப என் நேர்மையை நிலைநாட்டும்! அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதேயும்! அவர்கள் தங்கள் உள்ளத்தில் ‛ஆம், நாம் விரும்பினது இதுவே’ எனச் சொல்லாதபடி பாரும்! ‛அவனை விழுங்கிவிட்டோம்’ எனப் பேசிக்கொள்ளாதபடி பாரும்!  எனக்கு நேரிட்ட தீங்கைப் பார்த்து மகிழ்ச்சி அடைவோர் எல்லாரும் கலக்கமுறட்டும்! என்னைவிடத் தம்மைச் சிறந்தோராய்க் கருதுவோர்க்கு வெட்கமும் மானக்கேடும் மேலாடை ஆகட்டும்! (வசனம் 23-26)

2015-ஆம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 7-ஆம் தேதியன்று, புதுதில்லியில் நடைபெற்ற நீதிபதிகள் மாநாட்டில், “சட்ட புத்தகத்தில் உள்ளபடியோ அல்லது முந்தைய தீர்ப்புகளின்படியோ தீர்ப்புகள் வழங்குவது எளிது. தீர்ப்புகள் எந்த அளவுக்கு நியாயமாக இருக்க வேண்டும் என்பது தான் முக்கியம். கருத்து உருவாக்கத்தின் அடிப்படையிலோ அல்லது தகவல்களின் அடிப்படையிலோ தீர்ப்புகள் வழங்காமல், சுய பகுப்பாய்வின் அடிப்படையில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்க வேண்டும். ஏனெனில், நீதிபதிகளை கடவுளுக்கு ஒப்பாகக் கருதுகின்றனர். சுயமாகக் கருத்துக்களை பகுத்தாய்வு செய்யவும் மனத்திறன் வேண்டும். அத்தகைய திறன் எளிதில் கிடைத்து விடாது. எங்களைப் போன்ற அரசியல்வாதிகளை, மக்கள் ஆழ்ந்து கவனித்து வருகின்றனர். தவறிழைக்கிறோம் என்றால், அக்குவேறு ஆணி வேறாகப் பிய்த்து எரிந்து விடுவர். ஆனால், நீதிபதிகள் அப்படியில்லை. நீங்கள் நினைத்தால் 'இவர் குற்றவாளி' எனத் தீர்ப்புக் கூறி, தூக்குத் தண்டனை வழங்க முடியும். நீதித் துறையின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது. நீதித்துறை மீது குற்றம்சாட்ட, மிகக் குறைந்த வாய்ப்பே உள்ளது. இப்போதைய சூழ்நிலையில் நீதிபதிகள் சுயபகுப்பாய்வுக்கான ஒழுங்குமுறையை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். அந்த முறை, அரசு அல்லது அரசியல்வாதிகளிடம் இல்லை. அத்தகைய ஒரு ஒழுங்குமுறை இல்லை என்றால், நீதித்துறை மீதான நம்பிக்கை பாதிக்கப்படும். அது, நாட்டையே பாதித்து விடும். அரசியல்வாதிகளோ அல்லது அரசோ தவறு செய்தால், அது, நீதித்துறையால் திருத்தம் செய்ய முடியும். நீதிபதிகள் தவறு செய்தால், அது, ஒட்டு மொத்த நீதித்துறையையே பாதித்துவிடும். நீங்கள் வேண்டு மென்றே தவறிழைத்தால், எல்லாமே பாழாகிவிடும் (தினமலர் ஏப்ரல் 7, 2015) என்று பேசினார் மோடி.

மேலும் 2016-ஆம் ஆண்டு புதுதில்லியில் நிகழ்ந்த வருடாந்திர முதல்வர்கள் மற்றும் தலைமை நீதிபதிகள் மாநாட்டில் பிரதமர் மோடி மேடையில் இருக்கும் போதே, நீதித்துறை விவகாரத்தில் மத்திய அரசின் செயலற்ற தன்மையை தலைமை நீதிபதி தீரத் சிங் தாக்கூர் கடுமையாகத் தாக்கிப் பேசினார், இடையிடையே அவர் குரல் உடைந்து நா தழுதழுக்கப் பேசினார். நீதிமன்றங்களில் நீதிபதிகளை அதிகரித்து சாமானிய, ஏழை மக்களுக்கும், விசாரணைக் கைதிகளாக சிறையில் வாடுபவர்களுக்கும் நீதி வழங்க நீதித்துறையின் சுமையைக் குறைத்து நீதித்துறையை காப்பாற்றுங்கள் என்று பிரதமர் மோடியிடம் அவர் கண்ணீர் மல்க உணர்ச்சிகர வேண்டுகோள் விடுத்தார் (இந்து தமிழ் ஏப்ரல் 24, 2016)

நம் பாரதப் பிரதமர் மோடி நீதித்துறைப் பற்றியும் நீதியைப் பற்றியும் இவ்வளவு உயர்வாகப் பேசினாலும் ஸ்டான் சுவாமி விடயத்தில் அவருக்கு மிகப்பெரும் அநீதி இழைக்கப்பட காரணமாகியிருக்கிறார் என்பதுதான் சமூக ஆர்வலர்களும் மனித உரிமையாளர்களும் அவர்மீது முன்வைக்கும் குற்றச்சாட்டாக அமைந்துள்ளது. மேலும், ஸ்டான் சாமிக்கு இழைக்கப்பட்டது மாபெரும் அநீதி என்பது தற்போது உலக அரங்கில் உண்மையாகி இருக்கிறது. அருள்பணியாளர் ஸ்டேன் சுவாமியின் மடிக்கணணியில் ஹேக்கர்களால் (Hackers) திட்டமிட்டு ஜோடிக்கப்பட்ட பல சதி ஆவணங்கள் புகுத்தப்பட்டதாக அண்மையில் ஆதாரப்பூர்வமாக நிரூபித்தது அமெரிக்காவைச் சேர்ந்த தடயவியல் நிறுவனம். இந்தத் தவற்றிற்குப் பதில்கூற முடியாமல் உலக அரங்கில் தலைகுனிந்து நிற்கிறது NIA (National Investigation Agency) என்ற இந்திய புலனாய்வு அமைப்பு. போலியான பொய்ச்சான்றுகளால் ஸ்டான் சாமி குற்றவாளி என்று கருதி மரணம் இழைக்கப்பட்டிருந்தாலும், கடவுளின் பார்வையில் அவர் குற்றமற்றவர் என்பது இன்று உறுதியாகியிருக்கின்றது.   

என் கடவுளே, கிளர்ந்தெழும்! என் தலைவரே, விழித்தெழுந்து என் வழக்குக்கு நீதி கிடைக்கச் செய்யும். என் கடவுளாகிய ஆண்டவரே, உமது நீதிக்கேற்ப என் நேர்மையை நிலைநாட்டும்! அவர்கள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதேயும்! என்ற தாவீதின் வார்த்தைகள் ஸ்டான் சாமிக்குக் கனகச்சிதமாய்ப் பொருந்தி நிற்கிறன்றது. 45 ஆண்டுகளுக்கும் மேலாக, பூர்வீக இனமக்களின் மேம்பாட்டிற்காக அயராது உழைத்தார் ஸ்டேன் சாமி. ஆனால், அவரை பெரியதொரு மாவோயிஸ்ட் தீவிரவாதியாகக் காட்டி, கைது செய்து சிறையில் தள்ளி, வதைத்தொழித்து கொக்கரித்துக் குதூகளித்தனர் அவரின் எதிரிகள். கைநடுக்க நோய்கொண்ட அவருக்குக் குடிப்பதற்குத் தண்ணீர் குவளைக் கூடக் கொடுக்காமலும், உணவருந்த அடிப்படை வசதிகளை தந்து உதவாமலும் அவரை மரணக் குழியில் தள்ளினர். ஆனால், அவர் குற்றமற்றவர் என்று கடவுள் அளித்துள்ள நீதியான தீர்ப்பால், அவர் சிறைச் செல்ல காரணமான அவரது எதிரிகள் அனைவரும் தற்போது வெட்கக்கேடு அடைந்துள்ளனர். இன்றைய உலகில், பலர் தங்களை நீதியின் காவலர்களாகக் காட்டிக்கொண்டாலும் கடவுளின் பார்வையில் பொய்யர்களாக, அநீதர்களாக, அழிவுக்குரியவர்களாகக் கருதப்படுகின்றனர் என்பதே நிதர்சனமான உண்மை. மேற்கண்ட தாவீதின் வார்த்தைகள் அவருக்கு எந்தளவுக்கு அநீதி இழைக்கப்பட்டிருக்கிறது என்பதை நம்மால் உணர்ந்துகொள்ள முடிகிறது.  

ஆண்டவர் வருகின்றார்; மண்ணுலகிற்கு நீதித் தீர்ப்பு வழங்க வருகின்றார்; நிலவுலகை நீதியுடனும் மக்களினங்களை உண்மையுடனும் அவர் தீர்ப்பிடுவார் (திபா 96:13) என்றும், உயர் வானங்களையும் பூவுலகையும் அவர் அழைத்து, தம் மக்களுக்குத் தீர்ப்பு வழங்குகின்றார் (50:4) என்றும், ஆண்டவர் முன்னிலையில் மகிழ்ந்து பாடுங்கள்; ஏனெனில், அவர் உலகுக்கு நீதி வழங்க வருகின்றார்; பூவுலகை நீதியுடன் ஆண்டிடுவார்; மக்களினங்களை நேர்மையுடன் ஆட்சி செய்வார் (திபா 98:9) என்றும் வேறு சில திருப்பாடல்களிலும் தாவீது அரசர் கடவுள் தரும் நீதித் தீர்ப்புக் குறித்து எடுத்துரைக்கின்றார். மேலும், மண்ணுலகத்திலிருந்து விண்ணுலகம் மிக உயர்ந்து இருப்பதுபோல உங்கள் வழிமுறைகளைவிட என் வழிமுறைகளும், உங்கள் எண்ணங்களைவிட என் எண்ணங்களும் மிக உயர்ந்திருக்கின்றன (எசா 55:9) என்று இறைவாக்கினரான எசாயா வழியாகக் கூறும் கடவுளின் வார்த்தைகள், அவரது சமத்துவம் நிறைந்த நீதிக்கான வழிமுறைகளை எடுத்துரைக்கின்றன.

''நல்லதைப் படைத்த கடவுள் தானே கெட்டதையும் படைத்துள்ளார். அதனால், நல்லதை மட்டும் ஏற்பதுபோல கெட்டதையும் ஏற்றுக்கொண்டால் என்ன?'' என்று ஒரு சீடர் தன் குருவிடம் கேட்டார், குரு சிரித்துக் கொண்டே, ''அது அவரவர் விருப்பம்,'' என்றார். மதிய உணவு நேரம் வந்தது. அந்தச் சீடர் தனக்கு அளிக்கப்பட்ட உணவைப் பார்த்து அதிர்ந்து விட்டார். காரணம், ஒரு கிண்ணத்தில் பசு மாட்டு சாணம் மட்டும் வைக்கப்பட்டு அவரிடம் உண்ணக் கொடுக்கப்பட்டது. ஒன்றும் புரியாமல் அச்சீடர் விழித்தார். அப்போது குரு புன்முறுவலுடன் அவரிடம் சொன்னார், ''பால், சாணம் இரண்டுமே பசு மாட்டிடம் இருந்து தானே வருகிறது. அப்படியென்றால், பாலை ஏற்றுக் கொள்ளும்போது சாணியை ஏற்றுக் கொள்ளக் கூடாதா?'' அப்போதுதான் அச்சீடர் உண்மையை உணர்ந்துகொண்டார்.  

இன்றைய உலகில் அநீதியோடு சமரசம் செய்துகொள்வோர்தான் அதிகம் உள்ளனர். அதாவது, ‘ஊரோடு ஒத்துப்போய்விடுவோம், நமக்கென்ன வந்தது. நான் ஒருவன் மட்டும் நீதி நேர்மையோடு நடந்துகொண்டால் இந்த உலகம் திருந்திவிடுமா’ என்று அநீதியோடு ஒன்றாகக் கரம் கோர்த்துக்கொண்டு வாழ்கின்றனர் பலர். மேற்கண்ட கதை கூறுவதுபோல, நாம் உண்பதற்கு ஒரு தட்டில் பாலும் மறுத்தட்டில் சாணமும் வைக்கப்படும்போது, நாம் பாலை மட்டுமே தெரிந்து கொள்கின்றோம். அவ்வாறே நம்மைச் சுற்றி நீதியான செயல்களும் அநீதியான செயல்களும் ஒருங்கே காணப்படும் நிலையில், நாம் நீதியான செயல்களை மட்டுமே தெரிந்துகொள்ள வேண்டும். காரணம், நீதியான செயல்கள் அனைத்துமே கடவுளிடமிருந்தே வருகின்றன.

தாவீதுக்கு எதிராக சவுல் அரசர் எண்ணற்ற அநீதியான காரியங்களைச் செய்தபோதிலும் அதையொத்த அநீதியான செயல்களை சவுலுக்கு எதிராகப் புரிந்திடாமல், நீதியான காரியங்களை மட்டுமே செய்து வந்தார் தாவீது அரசர். அதேவேளையில், அநீதியான செயல்களை அரங்கேற்றும் தனது எதிரிகளுக்குத் தண்டனை அளிக்கவும், தனக்கு நீதி வழங்கவும், இப்பூவுலகில் நீதியை நிலைநிறுத்துமாறும் கடவுளிடம் முறையிடுகின்றார் தாவீது. ஆகவே, நாம் வாழும் இவ்வுலகில், நம்மைச் சுற்றி எத்தனை அநீதியான செயல்கள் நிகழ்ந்திடினும், மனம் தளர்ந்துவிடாமல் தாவீதைப் போன்று அவற்றையெல்லாம் கடவுளிடம் ஒப்புக்கொடுத்து முறையிடுவோம். நீதியின் கடவுள் நம்முடன் இருந்து நமக்கு என்றும் உதவுவார். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் ஆண்டவரிடம் கேட்டு மன்றாடுவோம். 

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 December 2022, 13:39