தேடுதல்

உக்ரைனின் அமைதிக்காக இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்  உக்ரைனின் அமைதிக்காக இறைவேண்டல் செய்யும் திருத்தந்தை பிரான்சிஸ்  

விவிலியத் தேடல்:திருப்பாடல் 35-7 அமைதியின் தூதுவர்கள் ஆவோம்!

அமைதியைக் குலைக்கும் குரூர எண்ணம் கொள்ளாமல், தாவீது அரசரின் வழியில் அமைதியைக் கட்டியெழுப்பும் தூதுவர்கள் ஆவோம்.
திருப்பாடல் 35-7

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘துன்பமேற்கும் தூய உள்ளம் பெறுவோம்!’ என்ற தலைப்பில் 35-வது திருப்பாடலில் 17,18 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 19 முதல் 22 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை இறை அமைதியில் வாசிப்போம். வஞ்சகரான என் எதிரிகள் என்னைப் பார்த்துக் களிக்க இடமளியாதீர்; காரணமின்றி என்னை வெறுப்போர் கண்சாடை காட்டி இகழவிடாதீர். ஏனெனில், அவர்களது பேச்சு சமாதானத்தைப் பற்றியதன்று; நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக அவர்கள் வஞ்சகமாய்ச் சூழ்ச்சி செய்கின்றனர். எனக்கெதிராக அவர்கள் வாய் திறந்து, ‛ஆ! ஆ! நாங்களே எங்கள் கண்ணால் கண்டோம்’ என்கின்றனர். ஆண்டவரே, நீர் இதைக் கண்டும் மௌனமாய் இராதீர்; என் தலைவரே, என்னைவிட்டுத் தொலையில் போய்விடாதீர் (வசனம் 19-22).

இதற்கு முந்தைய இறைவசனங்களில் தனது எதிரிகளின் கொலைவெறிச் செயல்கள், மற்றும் அவர்களின் குரூர எண்ணங்களை வெளிப்படுத்தி இறைவனிடம் இறைவேண்டல் செய்து வந்தார் தாவீது அரசர் என்று கண்டோம். இன்று நாம் தியானிக்கும் இறைவார்தைகளில், தனது எதிரிகள் அமைதிக்கு எதிரானவர்கள் என்றும், அமைதியைக் குலைப்பவர்கள் என்றும் இறைவனிடம் முறையிடுகின்றார் தாவீது அரசர். ஆகவே, இக்கருத்தினை மையப்படுத்தி நமது தியானச் சிந்தனைகளை விரவுபடுத்துவோம். இன்றைய உலகம் அமைதியை இழந்து தவிக்கின்றது. பெரும்பாலான உலகத் தலைவர்களின் சுயநலப் போக்குகளாலும், பதவியின்மீது கொண்டிருக்கின்ற மோக வெறியினாலும் இவ்வுலகம் அமைதியை இழந்து கண்ணீர் சிந்தி அழுகிறது. உலகில் அமைதியைக் கட்டி எழுப்புவதற்காகத் திருஅவையும், நல்மனம் கொண்டோரும் எவ்வளவுதான் அயராது உழைத்தாலும் கூட, அமைதியை அழித்து நாடுகளைச் சுடுகாடுகளாக்கும் தீயோரின் எண்ணிக்கை நாள்தோறும் அதிகரித்துக்கொண்டேதான் போகின்றது. இந்த உலகம் எப்போதும் அமைதியின்றி ஒரு நெருக்கடியான நிலையில் இருக்கவேண்டும் என்றே உலகத் தலைவர்களில் பலர் விரும்புவதைப் பார்க்கின்றோம்.

யார் அழிந்தால் எனக்கென்ன? எனது நோக்கம் நிறைவேற்றவேண்டும் என்று தான்தோன்றித்தனமாக, பொறுப்பற்ற நிலையில் வாழும் பல தலைவர்களால் இன்று ஆயிரமாயிரம் மக்கள் அமைதி இழந்து துயரத்தின் பிடியில் சிக்கித் தவிக்கின்றனர். அதற்கு மாபெரும் ஓர் உதாரணம், உக்ரைன் மீது இரஷ்யா நிகழ்த்தி வரும் மதியற்ற போர் ஆகும். யார் சொல்லியும் நான் கேட்கமாட்டேன்... நான் நினைத்ததை சாதித்தே தீருவேன் எனக் கங்கணம் கட்டிக்கொண்டு உக்ரைனை அழித்தொழித்து வருகிறார் இரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். இவரின் ஆணவச் செயல்களைத் தட்டிக்கேட்க யாருமே இல்லையா... அல்லது நமக்கென்ன என்று அமெரிக்கா போன்ற பலம்பொருந்திய நாடுகள் ஒதுங்கிக்கொண்டனவா என்றுதான் நம்மைச் சிந்திக்கத் தூண்டுகின்றது. உக்ரைனிலிருந்து பல்வேறு நாடுகளுக்குப் புலம்பெர்ந்து சென்றுள்ள இலட்சக்கணக்கான மக்கள் வாழ்வதற்கு வழியின்றி நிர்கதியாய் நிற்பதை பார்த்து நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அண்மையில் கண்ணீர் சிந்தி அழுததைப் பார்த்து உலகமே கலங்கிப்போய் நிற்கின்றது.

இவ்வாண்டு டிசம்பர் 08-ஆம் தேதி, வியாழனன்று, உரோமையிலுள்ள இஸ்பானிய வளாகத்திற்குச் சென்ற திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், போரினால் பெருந்துன்பங்களை எதிர்கொள்ளும் உக்ரைனின் அமைதிக்காக அன்னை மரியாவிடம் சிறப்பாக இறைவேண்டல் செய்தார். அப்போது அவர், “அன்னை மரியே, அமலோற்பவத் தாயே, ஈராண்டுகளுக்குப்பின் மீண்டும் இவ்விடத்திற்கு வந்துள்ள நான், அருகிலும் தொலைவிலுமுள்ள உம் பிள்ளைகளின் நன்றி மற்றும், வேண்டுதல்களை உம்மிடம் கொண்டுவந்துள்ளேன்” என்று கூறினார். அப்போது இடையில் இறைவேண்டலை நிறுத்தி, துன்புறும் அந்நாட்டை நினைத்து கண்ணீர் சிந்தி அழுதார்.

கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் தமிழகத்தைச் சேர்ந்த இயக்குநர் மணிரத்தினம், நடிகை ரேவதி, எழுத்தாளர் ராமச்சந்திர குஹா உள்ளிட்ட இந்தியாவின் 49 பிரபலங்கள் பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியதற்காக அவர்கள் மீது தேசத்துரோக வழக்குப் பதிவு செய்யப்பட்டது. பிரதமர் மோடியிடம் நாடாளுமன்றத்தில் மதரீதியான கும்பல்கள் ஏற்படுத்தும் வன்முறையை எதிர்க்கும் அதேநேரத்தில், வன்முறையில் ஈடுபட்டவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கேட்டும், இஸ்லாமியர்கள், தலித்துகள் மற்றும் சிறுபான்மையினர்மீது மோசமான வன்முறை நிகழ்த்தப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தக்கோரியும் அவர்கள் கடிதம் எழுதியிருந்தனர். இந்தக் கடிதம் பிரிவினைவாதத்தை ஊக்குவிப்பதாகவும், பிரதமர் மோடியின் பணிகளை குறைத்து மதிப்பிடுவதாகவும், நாட்டின் நற்பெயரைக் கெடுப்பதாகவும் உள்ளது என்றும் கூறி, கடிதம் எழுதியவர்கள் மீது வழக்கு போடவேண்டும் என்று கோரி பிகார் மாநிலத்தில் முசாபர்பூர் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பவர் பொதுநல வழக்கு ஒன்றைப் பதிவு செய்தார். இந்த வழக்கை விசாரித்த மாவட்டத் தலைமை குற்றவியல் நடுவர் சூரியகாந்த் திவாரி அவர்கள், 49 பேர் மீதும் வழக்குப் பதிய உத்தரவிட்டதை அடுத்து, பிரிவினைவாதத்தை தூண்டுவது, பொது அமைதியை குலைப்பது, தேசத்துரோகம் மற்றும் மத நம்பிக்கையை காயப்படுத்துவது போன்ற பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. மதத்தின் பெயரால் இந்தியா முழுவதிலும் அமைதி சிதைக்கப்படுகிறது என்றும், இந்தியா முழுவதும் அமைதி நிலவவேண்டும், சிறுபான்மை மக்கள் மீதான தாக்குதல்கள் நிறுத்தப்படவேண்டும் என்றும் வேண்டி நல்லெண்ணத்துடன் எழுதப்பட்ட இந்தக் கடிதத்திற்காகத் தேசத்துரோக வழக்குப் பதிவுசெய்யப்பட்டது என்றால், இந்தியா எங்கே போய்க்கொண்டிருக்கிறது என்று நாம் கேள்வி எழுப்பவேண்டியுள்ளது. அதுமட்டுமன்றி, 49 பேர்மீதும் பதிவுசெய்யப்பட்ட இந்தத் தேசத்துரோக வழக்கிற்காக இந்தியா முழுவதிலுமுள்ள சமூகஆர்வலர்கள், திரைத்துறையினர், அரசியல் கட்சித் தலைவர்கள் பலரும் மத்திய அரசின் இச்செயலைக் கடுமையாகக் கண்டித்தனர். மேலும் ''பிரதமருக்குக் கடிதம் எழுதியவர்கள் மதரீதியான வன்முறை தடுக்கப்படவேண்டும் எனவும் தாக்குதலுக்கு ஆளான மக்களுக்கு நீதிவேண்டும், தாக்குதல் நடத்தியவர்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றுதான் கேள்வி எழுப்பியுள்ளார்கள். இதில் மதநம்பிக்கையை காயப்படுத்தும் வகையிலோ, அமைதியை குலைக்கும் வகையிலோ எதுவும் இல்லை,'' என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி ஹரிபரந்தாமன் அவர்களும் இதுகுறித்துக் கருத்துத் தெரிவித்திருந்தார். இதன் காரணமாகவே, இந்த வழக்குப் பின்னர் திரும்பப் பெறப்பட்டது.

அமைதியை அழித்தொழிக்கும் எதிரிகளின் செயல்பாடுகள் காரணமாகவே, எதிரிகளின் பேச்சு சமாதானத்தைப் பற்றியதன்று; நாட்டில் அமைதியை நாடுவோர்க்கு எதிராக அவர்கள் வஞ்சகமாய்ச் சூழ்ச்சி செய்கின்றனர் என்று கூறுகின்றார் தாவீது அரசர். பொல்லாரோடு என்னை ஒழித்து விடாதேயும்! தீயவரோடு என்னை அழித்து விடாதேயும்! அவர்கள் தமக்கு அடுத்திருப்பாரோடு பேசுவதோ சமாதானம்; அவர்களது உள்ளத்தில் உள்ளதோ நயவஞ்சகம் (திபா 28:3) என்றும், அவர்கள் தம் மனத்தில்  தீயனவற்றை திட்டமிடுகின்றனர்; நாள்தோறும் சச்சரவுகளைக் கிளப்பி விடுகின்றனர் (திபா 140:2) என்றும், சமாதானத்தைக் குலைப்பவர்களோடு, நான் நெடுநாள் வாழ வேண்டியதாயிற்று. நான் சமாதானத்தை நாடுவேன்; அதைப் பற்றியே பேசுவேன்; ஆனால், அவர்களுக்கோ போர் ஒன்றில்தான் நாட்டம்! (திபா 120:6-7) என்றும், அமைதியை குலைக்கும் தனது எதிரிகள் பற்றி தாவீது அரசர் வேறு சில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார். அதேவேளையில், தனது எதிரிகள் உள்ளத்திலும் நாட்டிலும் அமைதியைக் குலைக்க விரும்பி சதித்திட்டங்களை வகுத்தாலும், தான் என்றும் அமைதியை விரும்புபவன் என்பதை தனது நற்செயல்களால் எடுத்துக்காட்டுகின்றார் தாவீது அரசர்.  

தென்னாப்பிரிக்கவின் அமைதிப் போராளி பேராயர் டெஸ்மான்ட் டுட்டு அவர்கள், அமைதி குறித்து இவ்வாறு கூறுகின்றார். எங்கே நீதி இல்லையோ அங்கே அமைதி இருக்காது. இந்த அழகிய பூமியில் வசிப்பவர்கள் அனைவரும் சமநீதியை அனுபவிக்க முடியாவிட்டால் அங்கே உண்மையான அமைதியும் பாதுகாப்பும் இருக்காது. நீதி இல்லாத அமைதி இருக்கவே முடியாது என்பதையே திருவிவிலியமும் வலியுறுத்துகிறது. அதனால்தான் "அமைதி, அமைதி, அமைதி" என்று அது கதறுகிறது. கடவுளின் ஷாலோம், அதாவது, அமைதி என்பது தவிர்க்க முடியாத  நீதி, நேர்மை, முழுமை, தீர்மானம் எடுப்பதில் பங்கேற்பு, நல்மனம், நகைச்சுவை, மகிழ்ச்சி, பரிவிரக்கம், பகிர்தல், நல்லிணக்கம் ஆகியவற்றைக் குறிக்கின்றது. கடவுளின் உருவிலும் சாயலிலும் படைக்கப்பட்டவர்கள் என்ற நிலையில் மனித உயிர்கள் எல்லையற்ற மதிப்பு கொண்டவை என்பதை நாம் எப்போது கற்றுக்கொள்ளப் போகின்றோம். சகமனிதர்களை மதிப்புக் குறைவாக நடத்துவது என்பது மத நிந்தனை ஆகும். அவர்களைக் கீழ்மைப்படுத்துவதன் வழியாக அதைச் செய்பவர்கள் கீழான நிலையை அடைகின்றனர். நாம் மற்றவர்களோடு உடன்பிறந்த உறவு நிலையில் இணக்கமாக வாழ்ந்தால் மட்டுமே நல்மனம் கொண்ட மனிதர்களாக அமைதியுடன் ஒன்றிணைந்து பயணிக்க முடியும்.

ஆகவே, அமைதியைக் குலைக்கும் குரூர எண்ணம் கொள்ளாமல், தாவீது அரசரின் வழியில் அமைதியை கட்டியெழுப்பும் தூதுவர்கள் ஆவோம். அதற்கான இறையருளை இந்நாளில் இறைவனிடம் இறைஞ்சி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

13 December 2022, 13:17