எங்களின் துறவு இல்லம் பாதிக்கப்பட்டுள்ளோரின் புகலிடம்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தக் கிறிஸ்துமஸ் அனைத்து மக்களுக்கும் திறந்த இல்லமாக இருக்கும் என்றும், தங்களின் துறவு இல்லம் பெத்லேகேமின் குடிலாக அமைந்துள்ளதுடன், இங்கு வரும் அனைவரும் அன்பு மகிழ்ச்சி மற்றும் நம்பிக்கையைக் காண்பர் என்றும் கூறியுள்ளார் உக்ரைனிலுள்ள அருள் சகோதரி Ligy Payyappilly.
உக்ரைனிலுள்ள புனித மார்க்கின் புனித யோசேப்பு சகோதரிகள் துறவு இல்லத்தின் தலைமைச் சகோதரி Ligy Payyappilly அவர்கள் இவ்வாறு கூறியுள்ளதுடன், இந்தக் கிறிஸ்து பிறப்புக் காலங்களில் அவர்களின் துறவு இல்லம் போரால் பாதிக்கப்பட்டுள்ள மக்களின் புகலிடமாக விளங்கும் என்றும் பெருமிதத்துடன் தெரிவித்துள்ளார்.
தங்கள் துறவு இல்லத்தில் எவ்வித குழந்தைகளும் இல்லை என்றும் புலம்பெயர்ந்தோர், உணவின்றி வெவ்வேறு இடங்களில் வாழ்கிறார்கள் என்றும் கூறியுள்ள அருள்சகோதரி Ligy அவர்கள், தேவையில் இருப்போருக்குத் தங்களால் முடித்த அளவிற்கு உணவுப் பொருள்களை வழங்குவதாகவும், தங்களிடம் இருப்பதைப் அவர்களுடன் பகிர்ந்து கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்
தங்களை நன்கு அறிந்துள்ள நன்கொடையாளர்களும் தொண்டுள்ளம் படைத்தோரும் தங்களுக்கு உதவி வருவதாகக் கூறியுள்ள அருள்சகோதரி Ligy, அவர்கள், அண்டை நாடுகளிலிருந்து உணவு, உடைகள், மருந்துகளைச் சேகரித்து மக்களுக்கும் இராணுவ வீரர்களுக்கும் வழங்கி வருவதாகவும் கூறியுள்ளார்.
உக்ரைனில் நிலைமை மிகவும் மோசமாக இருக்கின்றது; இங்கு வாழ்வது மிகவும் ஆபத்தானது என்றும், இரஷ்யா வீசும் ஏவுகணைகளை உக்ரேனிய வீரர்கள் மிகவும் மனவலிமையுடன் எதிர்கொண்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ள அருள்சகோதரி Ligy அவரக்ள், இங்கு மின்சாரம் இல்லாதச் சூழலில் வாழ்க்கை என்பது வெறும் கனவாக உள்ளது என்றும், மக்கள் நிம்மதியற்ற தூக்கத்தைப் பெற்றுள்ளனர் என்றும் வேதனை தெரிவித்துள்ளார்.
கேரளாவில் உள்ள SJSM துறவு சபையின் சான்ஜோ மாநிலத்தைச் சேர்ந்த அருள்சோதரி Ligy அவரக்ள் கடந்த 20 ஆண்டுகளாக உக்ரைனில் பணியாற்றி வருகின்றார். 2021-ஆம் ஆண்டு பிப்ரவரியில் உக்ரைன்மீதான இரஷ்யாவின் போர் தொடங்கியதிலிருந்து, அவரும் அவரது 17 சகோதரிகளும் இங்கேயே தங்கிக்கொண்டு பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வருகின்றனர். (ASIA)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்