தேடுதல்

அருள்பணி ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டு பேரணி அருள்பணி ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு நீதி கேட்டு பேரணி 

2022, இந்திய கத்தோலிக்கருக்கு மறைச்சாட்சிகளின் ஆண்டு

அருள்பணி ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு அரசும், தேசிய புலனாய்வு அமைப்பும் முழுப்பொறுப்பை ஏற்கவேண்டும் - இந்திய கத்தோலிக்கர்

மேரி தெரேசா: வத்திக்கான்

2022ஆம் ஆண்டில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இந்தியாவின் முதல் பொதுநிலை மறைச்சாட்சி தேவசகாயம் அவர்களைப் புனிதராக அறிவித்துள்ளது குறித்து மகிழும் அதேநேரம், கைதியாக இருந்தபோதே உயிர்நீத்த மனித உரிமைப் போராளியான இயேசு சபை அருள்பணி ஸ்டான் சுவாமி அவர்களுக்கு நீதி வேண்டும் என அரசை விண்ணப்பித்து வருகின்றனர் இந்திய கத்தோலிக்கர்.

இந்திய மண்ணில் மறைச்சாட்சி மகுடத்தை வென்ற முதல் இந்தியர் என புனித தேவசகாயம் அவர்களை நாம் ஏற்கின்றோம் என, இந்திய இலத்தீன் வழிபாட்டுமுறை ஆயர் பேரவையின் தலைவரும், கோவா மற்றும், டாமன் பேராயருமான கர்தினால் பிலிப்நேரி ஃபெராவோ அவர்கள் கூறியுள்ளார்.  

இந்தியக் கிறிஸ்தவர்களில் ஏறத்தாழ அறுபது விழுக்காட்டினரைக்கொண்ட பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஹைதராபாத் பேராயர் அந்தோனி பூலா அவர்களும் இதே 2022ஆம் ஆண்டில் கர்தினாலாக அறிவிக்கப்பட்டார் எனக் கூறியுள்ள யூக்கா செய்தி நிறுவனம், இவ்வாண்டில் நாடு முழுவதும் பரவலாக கிறிஸ்தவர்களுக்கு எதிரான வன்முறைகள் இடம்பெற்றுள்ளதையும் குறிப்பிட்டுள்ளது.

மேலும், 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5ம் தேதி தடுப்புக்காவலில் உயிரிழந்த 84 வயது நிரம்பிய இயேசு சபை அருள்பணியாளரும், பூர்வீக இன மக்களின் உரிமைகளுக்காகப் போராடியவருமான ஸ்டான் சுவாமி மீது பொய்க் குற்றச்சாட்டுகளைச் சுமத்தியதற்காக இந்திய அரசு மன்னிப்பு கேட்கவேண்டும் எனவும் கத்தோலிக்கர் விண்ணப்பித்து வருகின்றனர்.

ஸ்டான் சுவாமியின் கனணியில் அத்துமீறி நுழைந்து பொய்யான தகவல்கள் இணைக்கப்பட்டுள்ளதை, அமெரிக்க ஐக்கிய நாட்டு டிஜிட்டல் ஆய்வு நிறுவனம் ஒன்று கண்டுபிடித்து வெளியிட்டுள்ளதையடுத்து அருள்பணி ஸ்டான் சுவாமியின் மரணத்திற்கு அரசும், தேசிய புலனாய்வு அமைப்பும் முழுப்பொறுப்பை ஏற்கவேண்டும் என்று இந்திய கத்தோலிக்கர் வலியுறுத்தி வருகின்றனர்.   

இன்னும், இந்தியாவின் சட்டங்கள், சிறுபான்மை கிறிஸ்தவர்கள், மற்றும் முஸ்லிம்களை நசுக்கும் நோக்கத்தில் கொண்டுவரப்படுகின்றன என கிறிஸ்தவத் தலைவர்களும் அரசை குறைகூறியுள்ளனர் என யூக்கா செய்தி பதிவுசெய்துள்ளது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

23 December 2022, 12:38