தேடுதல்

பாத்திமா அன்னை மரியா பாத்திமா அன்னை மரியா  

வழிசொல்லும் ஒளிச்சுடர்: புனிதத்துவம் என்பது எல்லாருக்கும் உரியது

1917ஆம் ஆண்டு மே 13 முதல் அக்டோபர் 13 வரை, லூசியா தோஸ் சாந்தோஸ், பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ ஆகிய மூன்று சிறாருக்கும் அன்னை மரியா பாத்திமாவில் ஆறு தடவைகள் காட்சியளித்துள்ளார்

மேரி தெரேசா: வத்திக்கான்

பாத்திமா என்ற பெயரைக் கேட்டவுடனே கிறிஸ்தவர்களுக்கு நினைவுக்கு வருகிறவர்கள் போர்த்துக்கல் நாட்டு மூன்று சிறார். 1917ஆம் ஆண்டு மே மாதம் 13ம் தேதியிலிருந்து, அதே ஆண்டு அக்டோபர் 13ம் தேதி வரை, லூசியா தோஸ் சாந்தோஸ், பிரான்சிஸ்கோ மார்த்தோ, ஜசிந்தா மார்த்தோ ஆகிய மூன்று சிறாருக்கும் அன்னை மரியா பாத்திமாவில் ஆறு தடவைகள் காட்சியளித்துள்ளார். அக்காலக்கட்டம், 1914ஆம் ஆண்டு ஜூலை 28ம் தேதி தொடங்கிய முதல் உலகப் போரால் உலகம் துன்புற்றுக்கொண்டிருந்தது. அப்போர், 1918ஆம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி வரை நடந்தது. 1917ஆம் ஆண்டு மே 13ம் தேதி, அன்னை மரியா, இம்மூன்று படிப்பறிவில்லா சிறாருக்கும் முதன்முறையாக காட்சியளித்தபோது, உலகில் இடம்பெறும் போர் முடிவுறவும், அமைதி நிலவவும் தினமும் செபமாலை செபிக்குமாறு கூறினார். இச்சிறார் பாத்திமா நகருக்கு அருகிலுள்ள Aljustrel என்ற குக்கிராமத்தில் வாழ்ந்து வந்தவர்கள். ஆடுகளை மேய்த்துக்கொண்டிருந்த இச்சிறாருக்கு 1916ஆம் ஆண்டில் வானதூதர் முதலில் காட்சியளித்தார். அதற்கு அடுத்த ஆண்டில், அச்சிறார் சுடர்விட்டு ஒளிரும் பெண் ஒருவரைக் காட்சியில் கண்டனர். அப்பெண் பின்னர் “செபமாலையின் அன்னை” என தன்னை அறிமுகப்படுத்தினார். பாத்திமாவுக்கு ஏறத்தாழ ஒன்றரை மைல் தூரத்திலுள்ள Cova da Iria என்ற இடத்தில் லூசியாவின் பெற்றோருக்குரிய சிறிய நிலத்தில், செபமாலை அன்னை மரியா அச்சிறாருக்கு காட்சி அளித்தார். இம்மூன்று சிறாருக்கும் அன்னை மரியா காட்சியளித்தபோது, லூசியாவுக்கு வயது 12. பிரான்சிஸ்கோவுக்கு வயது 9. ஜசிந்தாவுக்கு வயது 7.

புனிதர்கள் பிரான்சிஸ்கோ, ஜசிந்தா மார்த்தோ

1918, 1919 ஆகிய இரு ஆண்டுகளில் H1N1 என்ற நுண்கிருமியால் பரவிய இஸ்பானிய காய்ச்சல் என்ற பெருந்தொற்றால் உலக அளவில் ஏறத்தாழ ஐம்பது கோடிப் பேர் தாக்கப்பட்டனர். இவர்களில் அமெரிக்க ஐக்கிய நாட்டில் மட்டும் இறந்த ஏறத்தாழ 6,75,000 பேர் உட்பட உலக அளவில் குறைந்தது ஐந்து கோடிப் பேர் இறந்தனர். இப்பெருந்தொற்றால் ஐந்து வயதுக்கும் குறைவான சிறார் உட்பட இளையோரும் வயதுவந்தோரும் இறந்தனர். பாத்திமாவில் அன்னை மரியாவை காட்சியில் கண்ட பிரான்சிஸ்கோ மார்த்தோவும், ஜசிந்தா மார்த்தோவும் இந்த இஸ்பானிய காய்ச்சல் பெருந்தொற்றுக்குப் பலியானார்கள். அண்ணன் தங்கையான இவ்விருவரின் இறப்பு குறித்துக் கூறிய அவர்களின் தாய் ஒலிம்பியா மார்த்தோ அவர்கள், தனது பிள்ளைகள் இருவருமே தங்களின் இறப்பு குறித்து என்னிடமும், திருப்பயணிகளிடமும் பலமுறை கூறினர் என்று தெரிவித்துள்ளார். இச்சிறார் அன்னை மரியாவை காட்சியில் கண்டபின்னர், திருப்பயணிகள் இவர்கள் கூறுவதை ஆர்வமாக கேட்டுவந்தனர். இவ்விரு சிறாரின் உடல்கள், பாத்திமா திருத்தலத்தில் அடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்விருவரையும், திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இரண்டாயிரமாம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி அருளாளர்களாகவும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 2017ஆம் ஆண்டு மே மாதம் 13ம் தேதி புனிதர்களாகவும் அறிவித்தனர்.  

புனித பிரான்சிஸ்கோ மார்த்தோ

1908ஆம் ஆண்டு ஜூன் 11ம் தேதி, பிரான்சிஸ்கோ மார்த்தோ தனது குடும்பத்தில் ஆறாவது குழந்தையாகப் பிறந்தார். பாசம், நேசம் துணிவு, மற்றும், கனிவுள்ளவராகவும், இயற்கை, மற்றும், விலங்குகளை அன்புகூர்பவராகவும், நகைச்சுவையாகப் பேசி மற்றவரை மகிழ்விப்பவராகவும் விளங்கினார் பிரான்சிஸ்கோ. தனியாக அமர்ந்து சிந்திப்பவராக, அமைதியை ஏற்படுத்துபவராக இவர் திகழ்ந்தார். இவர் மூங்கிலால் வேயப்பட்ட புல்லாங்குழல் வாசிக்கும்போது, ஜசிந்தாவும் லூசியாவும் நடனமாடுவார்களாம். அன்னை மரியா முதல் முறையாக காட்சியளித்தபோது பிரான்சிஸ்கோவுக்கு வயது ஒன்பது. அக்காட்சியில் லூசியாவும் ஜசிந்தாவும் அன்னை மரியாவைப் பார்த்தனர், மற்றும், அவர் பேசுவதைக் கேட்டனர். ஆனால் பிரான்சிஸ்கோ, அன்னை மரியாவைப் பார்த்தார் மற்றும், அவரது இருத்தலை மட்டுமே உணர்ந்தார். அதனால் அன்னை மரியா கூறியதை மற்ற இருவரும் பிரான்சிஸ்கோவுக்குக் கூறினர். இக்காட்சிகள் முடிந்தபின்னர் பிரான்சிஸ்கோ பள்ளிக்கு அனுப்பப்பட்டார். ஆனால் அவர் பலநேரங்களில் வகுப்புக்குச் செல்லவில்லை. மாறாக, தனியாகச் சென்று செபித்தார். அவர் வளர்ந்தபிறகு என்னவாக விரும்புகிறாய் என மக்கள் கேட்டபோது, “நான் எதையும் விரும்பவில்லை, ஆனால் இறந்து விண்ணகம் செல்ல விரும்புகிறேன்” என்று கூறியுள்ளார் பிரான்சிஸ்கோ. 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் இஸ்பானிய காய்ச்சல் பெருந்தொற்றால் தாக்கப்பட்ட பிரான்சிஸ்கோ, மருத்துவமனைக்குச் செல்ல விரும்பவில்லை. 1919ஆம் ஆண்டு ஏப்ரல் 3ம் தேதி திருநற்கருணை வாங்கினார், அதற்கு அடுத்த நாள் தனது பத்தாவது வயதில் இறைவனடி சேர்ந்தார்.

களங்கமின்மைக்கு ஓர் எடுத்துக்காட்டு

புனித ஜசிந்தா மார்த்தோ, தன் சகோதரன் பிரான்சிஸ்கோ பிறந்து ஈராண்டுகள் சென்று, அதாவது, 1910ஆம் ஆண்டு மார்ச் 11ம் தேதி பிறந்தார். ஜசிந்தா, மிகுந்த பாசத்தோடு, சுறுசுறுப்புள்ளவராக, அதேநேரம் அதிகம் பேசுபவராகவும், கவர்ச்சிமிக்கவராகவும் விளங்கினார். ஆடல் பாடல்களிலும், மலர்களைச் சேகரிப்பதிலும் ஆர்வமிக்கவராக இருந்தார். ஜசிந்தா மலர்களைப் பறித்து, அதை லூசியாவின் கழுத்தில் மாலையாகப் போடுவாராம். மிகவும் மகிழ்வானவராக, நிறைய நண்பர்களைக் கொண்டிருந்த ஜசிந்தாவுக்கு, லூசியா நெருங்கிய நண்பராக இருந்தார். லூசியா தனது வீட்டு ஆடுகளை மேய்ப்பதற்குக் கொண்டுசென்றபோதெல்லாம், ஜசிந்தாவும் பிரான்சிஸ்கோவும் சில ஆடுகளோடு அவரோடு சென்றார்கள். ஆடுகளை அதிகம் அன்புகூர்ந்த ஜசிந்தா, அவற்றிற்குப் பெயர் வைத்திருந்ததோடு, குட்டி ஆடுகளை எப்போதும் தூக்கிச் சென்றார். பிரான்சிஸ்கோ மற்றும், லூசியாவோடு நேரம் செலவழிப்பதை அதிகம் விரும்பினார் ஜசிந்தா.

புனித ஜசிந்தா மார்த்தோ

ஏழு வயதான ஜசிந்தாவை அன்னை மரியாவின் காட்சிகள் அதிகம் பாதித்தன. பிரான்சிஸ்கோ மற்றும், லூசியாவிடம் அக்காட்சிகள் குறித்து இரகசியம் காப்பதாக உறுதிகூறிய ஜசிந்தா அதைக் காப்பாற்றவில்லை. அதை தன் குடும்பத்தினரிடமும் கிராமத்தினரிடமும் கூறிவிட்டாள். ஆனால் கிராமத்தினர் அக்காட்சிகள் குறித்து சந்தேகமடைந்ததால், பின்னர் ஜசிந்தா அவை குறித்து மௌனம் காத்தார்.  அன்னை மரியா காட்சியில் கூறிய அடுத்த இரகசியத்தைக் கூறுவதில்லை என்பதில் உறுதியாயிருந்தார், ஜசிந்தா. நரகம் பற்றிய காட்சியைப் பார்த்தபோது, தவம் மற்றும், தியாகம் வழியாகப் பாவிகளைக் காப்பாற்றவேண்டும் என்பதை அவர் உணர்ந்தார். ஜசிந்தா, பிரான்சிஸ்கோ, லூசியா ஆகிய மூன்று சிறாரும் ஆடுகளை மேய்க்கச் சென்றபோது பலநேரங்களில் உணவோ தண்ணீரோ இன்றியே இருந்தனர். அன்னை மரியா கூறிய இரகசியங்களை வெளியிடுமாறு கிராமத்தினர் வலியுறுத்தியபோதெல்லாம் இரகசியம் காப்பது அவர்களுக்குப் பெரும் தவமாக இருந்தது. அன்னை மரியா எனக்கு மட்டும் பலமுறை காட்சி அளித்தார் என ஜசிந்தா இறப்பதற்குமுன் லூசியாவிடம் சொல்லியுள்ளார். 1918ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பிரான்சிஸ்கோவும் ஜசிந்தாவும் இஸ்பானிய காய்ச்சல் பெருந்தொற்றால் தாக்கப்பட்டனர். அதே ஆண்டு அக்டோபரில் ஜசிந்தா, லூசியாவிடம், அன்னை மரியா எனக்குத் தோன்றி, என்னையும், பிரான்சிஸ்கோவையும் விரைவில் விண்ணகத்திற்கு அழைத்துச் செல்வதாக உறுதியளித்தார் என்று கூறினார். லிஸ்பனில் அரசி Stephanie சிறார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ஜசிந்தா, தனது 9வது வயதில், 1920ஆம் ஆண்டு பிப்ரவரி 20ம் தேதி இறைபதம் சேர்ந்தார். மேலும், அன்னை மரியாவைக் காட்சியில் கண்ட லூசியா அவர்கள், பின்னாளில் துறவு வாவ்வைத் தெரிந்தெடுத்து தன் 90வது வயதில் இறைபதம் சேர்ந்தார்.

புனிதத்துவம் என்பது, சிறார் உட்பட அனைவருக்கும் உரியது, அனைவரும் புனிதர்களாக வாழ அழைக்கப்பட்டுள்ளோம் என்பதை, பாத்திமாவில் அன்னை மரியாவைக் காட்சியில் கண்ட இம்மூன்று சிறாரும் நமக்கு நினைவுறுத்துகின்றனர். “நம்பிக்கை இழக்காதீர்கள், உங்களை நான் ஒருபோதும் கைவிடமாட்டேன், எனது களங்கமற்ற அமல இதயம் உங்களின் அடைக்கலமாவும், கடவுளிடம் உங்களை இட்டுச்செல்லும் பாதையாகவும் இருக்கும்” என்று பாத்திமா அன்னை மரியா நம் எல்லாரிடமும் கூறுகிறார்.

புனித Manuel Míguez González, திருநாள் மார்ச் 08

புனித மனுவேல் மிகெஸ் கொன்சாலெஸ் (Manuel Míguez González) அவர்கள், 1831ஆம் ஆண்டு மார்ச் மாதம் 24ஆம் தேதி இஸ்பெயின் நாட்டின் Ourense மாநிலத்தில் பிறந்தார். இவர் அவரது குடும்பத்தில் நான்காவது மற்றும், கடைசிப் பிள்ளையுமாவார். இவர் சிறுவனாக இருக்கும்போதே மரங்களை அதிகம் அன்புகூர்ந்தார். அவர் அவற்றைப் பார்ப்பதில் வெகுநேரம் செலவழித்தார். Ourenseல் கல்வி கற்றபோது இலத்தீன் மொழியையும், மானுடவியலையும் கற்றார். அக்காலக்கட்டத்தில், இவர் தன் இறையழைத்தலை உணர்ந்தபோது இவருடைய சகோதரர் அந்தோனியோ, அருள்பணித்துவ வாழ்வுக்காக திருஅவை சார்ந்த கல்வியை கற்றுவந்தார். மேலும், இவருடைய மற்றொரு சகோதரர் ஜோசும் அருள்பணியாளராக விரும்பினார். ஆனால் அவர்களது தந்தையோ, ஜோஸ் வீட்டிலே இருந்து வேளாண்மையைப் பார்த்துக்கொள்ளட்டும், அந்தோனியோவும், மனுவேலும் அருள்பணித்துவ வாழ்வைத் தெரிந்துகொள்ளட்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார்.

அதற்குப்பின்னர், 1850ஆம் ஆண்டில் மனுவேல், மத்ரித் நகரில் புனித ஃபெர்டினான்ட் இல்லத்தில் Piarist அருள்பணியாளர் சபையில் சேர்ந்தார். இதே ஆண்டு டிசம்பர் 5ம் தேதி அச்சபையில் முதல் வார்த்தைப்பாடுகளைக் கொடுத்து, "மனுஉருஎடுத்தலின் பவுஸ்தீனோ" என்ற பெயரைத் தெரிவுசெய்தார். 1853ஆம் ஆண்டு சனவரி 16ம் தேதி அச்சபையில் நிரந்தர வார்த்தைப்பாடுகளைக் கொடுத்தார். இவர் தனது மெய்யியல் மற்றும், இறையியல் படிப்பின்போது இயற்கை அறிவியல் பற்றியும் கற்றார். 1856ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி, மத்ரித் நகரின் புனித மாற்கு பங்குத்தளத்தில் அருள்பணியாளராக, இவர் திருப்பொழிவுசெய்யப்பட்டார். புதிய அருள்பணியாளர் பவுஸ்தீனோ, இஸ்பெயினின் Monforte de Lemos போன்ற சில பகுதிகளுக்கு மறைப்பணியாற்ற அனுப்பப்பட்டார். பின்னர் 1860ஆம் ஆண்டு மார்ச் மாதம் 3ம் தேதி கியூபா நாட்டின் Guanabacoaவுக்கு அனுப்பப்பட்ட இவர், உடல்நலம் குன்றியதால் மீண்டும் இஸ்பெயினுக்குத் திரும்பிவிட்டார். மீண்டும் இவர் 1857ஆம் ஆண்டு நவம்பர் 3ம் தேதி கியூபாவுக்குச் சென்றார். அச்சமயத்தில் படித்தாலும், அருள்பணியாளருக்குரிய கடமைகளில் ஒன்றான ஒப்புரவு அருளடையாளத்தை நிறைவேற்றுவதில் நீண்டநேரம் செலவழித்தார். அதில் அவர் காட்டிய பொறுமை மற்றும், ஞானமுள்ள அறிவுரை குறிப்பிடும்படியானது. 

அருள்பணி பவுஸ்தீனா அவர்கள், தனது குருத்துவ வாழ்வின் ஆரம்பத்தில் இயற்கை மருத்துவத்தில் ஆர்வம்கொண்டு தாவரங்கள் இறைவனின் கொடைகள் என அவற்றைப் பார்த்து அவை நோயாளிகள் குணமடைய உதவும் வழிகளைக் கண்டறிந்தார். தாவரங்களிலிருந்து மருந்துகளைத் தயாரித்தார். அதனால் அதிகத் தேவையில் இருந்த நோயாளிகள் பலர் இவரை அணுகினர். இவர் இயற்கை மருந்துகளால் அவர்களுக்கு உதவிவந்தார். தான் சந்தித்த மக்களிடம் கல்வி மற்றும், அறிவியல் குறித்து எடுத்துரைத்து வந்தார். ஒரு கட்டத்தில் இவர், இஸ்பெயினின் தென்பகுதியிலுள்ள Sanlúcar de Barramedaவுக்கு அனுப்பப்பட்டார். அங்கே பாலியலால் புறக்கணிக்கப்பட்ட படிப்பறிவற்ற பெண்களை இவர் சந்தித்தார். பெண்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட அநீதிகளைக் கண்ணுற்ற இவர், இதற்கு ஒரு தீர்வு காணத் தீர்மானித்தார். அதற்காகச் செபித்தார், மற்றும், கடவுளின் வழிகாட்டுதலை நாடினார். அதன்விளைவாக 1885ஆம் ஆண்டில் பெண் கல்விக்கென்று இறைமேய்ப்பர்கள் புதல்வியர் என்ற புதிய ஒரு சபையை உருவாக்கினார்.

Calasanzian சபை எனவும் அழைக்கப்படும் இத்துறவு சபை, சிறுமிகள், மற்றும் பெண்களின் வாழ்வு மேம்படவும், அவர்களுக்கு கல்வியறிவு புகட்டவும் முழுவீச்சுடன் செயல்பட்டது. அருள்பணி பவுஸ்தீனா தொடங்கிய இச்சபை, 1889ஆம் ஆண்டில் செவில்லே பேராயரின் அனுமதியைப் பெற்றது. பின்னர் 1912ஆம் ஆண்டில் திருத்தந்தை பத்தாம் பயஸ் அவர்களின் அங்கீகாரத்தைப் பெற்றது. தன்னைச் சுற்றி வாழ்வோரின் தேவைகள் எல்லாவற்றையும் இவர் நிறைவேற்றி வந்தார். அருள்பணி பவுஸ்தீனோ அவர்கள், 1925ஆம் ஆண்டு மார்ச் மாதம் 8ம் தேதி இறைவனடி சேர்ந்தார். 2006ஆம் ஆண்டில் வெளியான புள்ளிவிவரங்களின்படி, ஈக்குவதோர், இந்தியா உட்பட பல நாடுகளில் 43 துறவுக் குழுமங்கள் உள்ளன. இவரை 2017ஆம் ஆண்டு அக்டோபர் 15ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதராக அறிவித்தார்.    

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 December 2022, 15:42