நவம்பர் 20, உலக குழந்தைகள் தினத்திற்கான யுனிசெப்பின் செய்தி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
நவம்பர் 20, வரும் ஞாயிறன்று சிறப்பிக்கப்படவுள்ள உலகக் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, இத்தாலிய யுனிசெப் நிறுவனம், குழந்தைகள் மற்றும் இளம்பருவத்தினரின் மனநலம் மற்றும் உளவியல் சமூக நலன் பிரச்சனைக்கு இந்நாளை அர்ப்பணிப்பதாக தெரிவித்துள்ளது.
இவ்வாண்டு உலகக் குழந்தைகள் தினத்தை (20, ஞாயிறு) "மனநலம் மற்றும் உளவியல் சமூக நலன்" என்ற கருப்பொருளில் கொண்டாடவிருப்பதாகக் கூறியுள்ள இத்தாலிய யுனிசெப் நிறுவனம், உலகளவில் 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 7 இளம் பருவத்தினரில் ஒருவர் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளவராக இருக்கிறார் என்பதை நவம்பர் 17, இவ்வியாழனன்று நினைவூட்டியுள்ளது.
உலகளவில் ஒவ்வொரு ஆண்டும் ஏறத்தாழ 46,000 இளம் பருவத்தினர் தற்கொலை செய்துகொள்கின்றனர் என்றும் ஒவ்வொரு 11 நிமிடங்களுக்கும் ஒருவருக்கு மேல் இறக்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டியுள்ள இந்நிறுவனம், இவர்களில் 50 விழுக்காட்டினர் சோகமாகவோ, கவலையாகவோ, அல்லது விரக்தியாகவோ இருப்பதாக உணரமுடிகிறது என்பதையும் எடுத்துக்காட்டியுள்ளது.
கோவிட்-19 பெருந்தொற்றின் விளைவுகள் நிலைமையை இன்னும் மோசமாக்கியுள்ளன என்றும், இத்தாலியில், பெருந்தொற்றுக்கு முன்னர், மனநலப் பிரச்சனைகளின் பாதிப்பு மக்கள் தொகையில் 18 முதல் 20 விழுக்காட்டினரிடம் இருந்தது என்றும் இதன் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது.
2019-ஆம் ஆண்டில், 10 முதல் 19 வயதுக்குட்பட்ட 16.6 விழுக்காட்டு சிறுவர்கள் மற்றும் சிறுமிகள், ஏறத்தாழ 9,56,000 பேர் மனநலப் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்றும், இவர்களில் ஆண்களை விட (16.1 விழுக்காடு பெண்கள் 17.2 விழுக்காடு) பெண்களே அதிகம் என்றும் எடுத்துக்காட்டுகிறது.
குழந்தைகள் மற்றும் இளம் பருவத்தினரின் மனநலம் மற்றும் உளவியல் நல்வாழ்வு என்பது இத்தாலியின் யுனிசெப் நிறுவனத்தால் அடையாளம் காணப்பட்ட முன்னுரிமைகளில் ஒன்றாகும் என்றும், இதில் வறுமை, தரமான கல்வி மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவையும் அடங்கியுள்ளன என்றும், சுட்டிக்காட்டியுள்ள யுனிசெப் நிறுவனம், இத்தாலிய அரசும் அதன் பாராளுமன்றமும் இத்தகைய செயல்களில் தொடர்ந்து கவனம் செலுத்துமாறு வலியுறுத்தியுள்ளது.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்