திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 10ம் லியோ
கிறிஸ்டோபர் பிரான்சிஸ் – வத்திக்கான்
1513ம் ஆண்டு பிப்ரவரி மாதம் திருத்தந்தை 2ம் ஜூலியஸ் இறைபதம் சேர்ந்ததைத் தொடர்ந்து பொறுப்பேற்றவர் திருத்தந்தை 10ம் லியோ. இத்தாலியின் பிளாரன்ஸ் நகரின் மிகப்பிரபலமான DE MEDICI என்ற குடும்பத்தில் 1475ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ந்தேதி GIOVANNI DE MEDICI என்ற பெயரைத் தாங்கி பிறந்தார் இவர். இவர் தன் மிக இளவயதிலேயே (7 வயதில்) துறவு வாழ்வைத் தேர்ந்துகொண்டார். எட்டு வயதில் ஒரு துறவு இல்ல அதிபராக்கப்பட்டார் என்றால் நம்புவதற்கு சிரமமாகத்தான் உள்ளது. தன் ஒன்பதாம் வயதில் அதாவது 1484ஆம் ஆண்டில் Passignanoவின் மிகச் செல்வச் சிறப்புடைய துறவு இல்லத்தின் பொறுப்பாளராகவும், 1486ஆம் ஆண்டில், அதாவது அவரின் 11வது வயதில் புகழ்வாய்ந்த Monte Cassino துறவு இல்லப் பொறுப்பாளராகவும் நியமிக்கப்பட்டார் ஜொவான்னி தெ மெதிச்சி.
இவரின் தந்தையான லொரென்சோ மிகவும் புகழ்வாய்ந்தவராகவும், பலம் படைத்தவராகவும் பிளாரன்ஸ் நகரில் கோலோச்சி வந்தார். லொரென்சோவின் விண்ணப்பத்தை ஏற்று திருத்தந்தை எட்டாம் இன்னசென்ட் 1489ம் ஆண்டு, 13 வயது ஜொவான்னி தெ மெதிச்சியை கர்தினாலாக அறிவித்தார். ஆனால், அடுத்த 3 ஆண்டுகளுக்கு, அதாவது அவர் 16 வயது நிரம்பும்வரை, கர்தினாலுக்குரிய அதிகாரத்தையும், பொறுப்புக்களையும் செயல்படுத்தக்கூடாது என்ற கட்டளையையும் பிறப்பித்தார் திருத்தந்தை. கர்தினாலாக அறிவிக்கப்பட்ட பின்னரே இவர் மெய்யியலும் திருஅவைச் சட்டமும் இத்தாலியின் Pisa நகரில் பயின்றார். 1492ஆம் ஆண்டு மார்ச் மாதம் 22ஆம் தேதி இவர் கர்தினாலுக்குரிய முத்திரை அதிகாரத்துடன் முழுப்பொறுப்புடைய கர்தினாலாக உயர்த்தப்பட்டார். அவரின் காலத்தில் வாழ்ந்த வயது முதிர்ந்த கர்தினால்களைவிட இந்த இளைய கர்தினால் பல விடயங்களில் முதிர்ச்சியுடையவராக, அறிவாளியாக இருந்தார் என உரைக்கின்றனர் சிலர்.
திருத்தந்தை 6ஆம் அலெக்ஸாண்டர் திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட கர்தினால்கள் அவைக் கூட்டத்தில் இந்த இளம் கர்தினால் ஜொவான்னி தெ மெதிச்சியும் கலந்துகொண்டார். இவரின் விருப்பத்திற்கு எதிராகவே அந்த தேர்தல் இடம்பெற்றது. ஆகவே இவர் 1492ஆம் ஆண்டு ஆகஸ்டிலிருந்து பிளாரன்ஸ் நகரிலேயே தங்கியிருந்தார். அங்கிருந்து தெ மெதிச்சி குடும்பம் 1494ஆம் ஆண்டில் வெளியேற்றப்பட்டதால், இவரும் பிரான்சிஸ்கன் துறவியின் உடையில் தப்பியோட வேண்டியதாகியது. இவர் 1512ஆம் ஆண்டு இத்தாலியின் ரவென்னாவில் பிரெஞ்சு துருப்புக்களால் சிறைப்பிடிக்கப்பட்டார். பிளாரன்ஸ்க்கு எடுத்துச் செல்லும் வழியில் தப்பினார். 1512ஆம் ஆண்டு செப்டம்பரில் தெ மெதிச்சி குடும்பம் மீண்டும் பிளாரன்ஸ் நகரில் அதிகாரத்தைக் கைப்பற்றியது.
1513ஆம் ஆண்டு பிப்ரவரி 21ஆம் தேதி திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மார்ச் மாதம் 11ஆம் தேதி கர்தினால் ஜொவான்னி தெ மெடிச்சி, திருத்தந்தையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது அவருக்கு வயது 38 தான். இவர் நல்ல பல சீர்திருத்தங்களைக் கொணர்வார் என நம்பித்தான் கர்தினால்கள் இவரைத் தேர்வுசெய்தனர். ஆனால் இவரோ கலைக்குத்தான் தன் பாப்பிறைப் பதவிக் காலத்தில் முக்கியத்துவம் வழங்கினார். தெ மெதிச்சி என்ற பிரபுத்துவக் குடும்பத்தின் உலகாயுதப் போக்குகள் அனைத்தும் இவரிலும் காணப்பட்டன. தன் சொந்த நகரான Florence மக்களுக்கும், தான் சார்ந்திருந்த de' Medici குடும்பத்திற்கும் அதிகச் சலுகைகள் வழங்கினார். உலக இன்பங்களில் அதிலும் குறிப்பாக கலைகளில், இசையில், நாடகங்களில், கவிதைகளில் அதிக ஆர்வம் காட்டி, திருப்பீடத்தின் கருவூலத்தை இரண்டே ஆண்டுகளில்(1515) காலி செய்துவிட்டார் திருத்தந்தை 10ம் லியோ. ஆனால் சிறந்த எழுத்தாளராகவும், பேச்சாளராகவும், பக்திமானாகவும் திகழ்ந்தார் என்பதையும் நாம் குறிப்பிட்டேயாக வேண்டும். இலக்கியத்தை, அறிவியலை, ஓவியத்தை மிகவும் ஆதரித்து ஊக்கமளித்தார். பல கலைப்பொருட்கள் சேகரிப்பதில் ஆர்வம் காட்டினார். தன் குடுமபம் சேகரித்து வைத்திருந்த அரிய வகை புத்தகங்கள் அனைத்தையும் உரோம் நகருக்குக் கொணரவைத்து, வத்திக்கான் நூலகத்தை வளப்படுத்தினார். குழந்தைகளுக்கு மறைக்கல்வி வழங்குவதை கிறிஸ்தவக் கடமையாக அறிவித்தார் இத்திருத்தந்தை. ஆனால், அரசியல் விவகாரங்களில் ஒரு நிலையான முடிவுகளை எடுக்க முடியாமல் சூழ்நிலைகளுக்கு ஏற்ப அரசர்களை ஆதரித்தார் என சில வரலாற்று ஆசிரியர்கள் இவரைக் குறைகூறுகின்றனர். இதனால் சில மன்னர்கள் இவரை நம்பத் தயங்கினர். இவர் தன் உறவினர்களுக்கும் பிளாரன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்களுக்கும் அரசுப் பதவிகளை வழங்கியதும் இதற்கு ஒரு காரணம். இதற்கிடையில் கர்தினால்கள் சிலரும் இவருக்கு எதிராக எழும்பினர். அதில் தலைமை தாங்கிய கர்தினால் Petrucciக்கு மரணதண்டனை நிறைவேற்றினார். ஏனைய கர்தினால்கள் Sauli, Riario, Soderini, மற்றும் Castellesiக்கு தண்டனைத் தீர்ப்பாக அபராதங்களை விதித்தார்.
துருக்கியருக்கு எதிராக சிலுவைப் போர் நடத்தவேண்டும் என்ற திருத்தந்தையின் அறைகூவலுக்கு எவரும் செவிமடுக்கவில்லை. ஏனெனில் “போர்” என்ற பெயரில் திருத்தந்தை பணம் திரட்டப் பார்க்கிறார் என பலர் சந்தேகப்பட்டனர். திருஅவையின் பல்வேறு செயல்படுகள் குறித்த கேள்விகளை எழுப்பிய மார்ட்டின் லூத்தரை 1521ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் தேதி திருஅவையிலிருந்து விலக்கி வைத்தது இத்திருத்தந்தை 10ஆம் லியோ அவர்களே. 1521ஆம் ஆண்டு திடீரென மலேரியா நோயால் தாக்கப்பட்ட திருத்தந்தை 10ம் லியோ, டிசம்பர் மாதம் முதல் தேதி இறைபதம் சேர்ந்தார். இத்திருத்தந்தை திருஅவையில் ஏற்படுத்திய சீர்திருத்தங்களைவிட கலை மேம்பாட்டிற்கு அளித்த ஆதரவு அதிகம் என இவர் வாழ்விலிருந்து அறிய முடிகிறது.
1521ஆம் ஆண்டுக்குப்பின் திருச்சபையை வழிநடத்திய திருத்தந்தை குறித்து அடுத்த வாரம் காண்போம்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்