தேடுதல்

திருத்தந்தை 2ம் ஜூலியஸ் திருத்தந்தை 2ம் ஜூலியஸ்  

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 2ம் ஜூலியஸ் – பகுதி 1

1503ம் ஆண்டு அக்டோபர் மாதம் கூடிய கர்தினால்கள் அவை, தான் கூடிய ஒரு சில மணி நேரங்களிலேயே திருத்தந்தை 2ம் ஜூலியஸை தேர்வு செய்துவிட்டது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்  

நேயர்களே, வெகு சிறிது காலமே அதாவது ஆட்சியில் அமர்ந்து, ஒரு மாத கால அளவிற்குள்ளேயே இறைபதம் சேர்ந்த திருத்தந்தை 3ஆம் பயஸ் குறித்து கடந்த வாரம் கண்டோம். அடுத்து பதவிக்கு வந்த திருத்தந்தை 2ஆம் ஜூலியஸ் குறித்து இவ்வார திருத்தந்தையர் வரலாற்றில் காண்போம். இதுவரை 215 திருத்தந்தையர்களை நாம் நோக்கியுள்ளோம். இன்றைய திருத்தந்தை 2ஆம் ஜூலியஸை விடுத்தால் நாம் இனி காணவேண்டியது தற்போதைய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களையும் சேர்த்து 51 திருத்தந்தையர்களின் வரலாற்றைத்தான். 

   1443ஆம் வருடம் டிசம்பர் 5ஆம் தேதி இத்தாலியின் Savona நகருக்கு அருகே Albissola எனுமிடத்தில் Giuliano Della Rovere என்பவர் பிறந்தார். இவரே பின்னாளில் 2ம் ஜூலியஸ் என்ற பெயரில் திருத்தந்தையானார். இவரின் தாய் கிரேக்க நாட்டிலிருந்து இத்தாலிக்குள் குடிபெயர்ந்தவர். இவர் தந்தையின் சகோதரர்தான் திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ். இதனால் திருஅவைக்குள் ஜூலியானோவின் அதிகாரம் பலமாக இருந்தது. இவரின் 28ஆம் வயதிலேயே கர்தினாலாக உயர்த்தப்பட்டார். திருஅவையின் முக்கிய மறைமாவட்டங்கள் Carpentras, Lausanne, Catania, Sabina, Bologna, Ostia, Savona, Vercelli ஆகியவை உட்பட பல்வேறு மறைமாவட்டங்களில் ஆயராகப் பணயாற்றியதுடன், 29 ஆண்டுகளுக்கு பிரான்சின் Avignon உயர்மறைமாவட்டத்தின் நிர்வாகப் பொறுப்பையும் கொண்டிருந்தார். இது தவிர, அவர் அங்கத்தினராக இருந்த பிரான்சிஸ்கன் துறவு சபையின் சில துறவுமடங்களின் கௌரவ அதிபராகவும் இருந்தார்.

   பல்வேறு திருஅவை அமைப்புகள், மறைமாவட்டங்கள்வழி இவருக்கு பெரிய அளவில் வருமானம் வந்து கொண்டிருந்தது. ஆனால் ஜூலியானோ அவைகளை வீணடிக்கவில்லை. கலைகளை வளர்க்கவும், பெரிய பெரிய கோட்டைகளையும் அரண்மனைகளையும் திருஅவைக்கென கட்டவும் அப்பணத்தை செலவழித்தார். இருப்பினும் அவரின் ஆரம்ப கால தனிப்பட்ட வாழ்வு கறைபடிந்ததாக இருந்தது என்றே வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவர் திருத்தந்தையாவதற்கு முன்னால், இவருக்கு மூன்று பெண் குழந்தைகள் இருந்ததாக வரலாறு கூறுகிறது. இவர் கலைகளில் ஆர்வமுடையவராக மட்டுமல்ல, இராணுவப் பணிகளிலும் ஈடுபட்டிருந்தார் எனவும் அறியவருகிறோம். இத்தாலியின் Umbria பகுதியில் இராணுவத்திற்கு தலைமைதாங்கி, திருப்பீடத்திற்கு சொந்தமான இடங்களை மீண்டும் கைப்பற்றினார். இது தவிர, பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்திற்கு திருத்தந்தையின் பிரதிநிதியாகச் சென்று, அங்குள்ள பிரச்சனைகளுக்கு தீர்வு கண்டார். இவ்வாறு திருஅவையில் பரவலாக அறியப்பட்டவராக கர்தினால் ஜூலியானோ வந்து கொண்டிருந்த சூழலில் திருத்தந்தை 4ம் சிக்ஸ்துஸ், 1484ஆம் ஆண்டு ஆகஸ்ட் 12ஆம் தேதி காலமானார். ஜூலியானோ திருத்தந்தையாக வருவதற்கு வாய்ப்புகள் குறைவாகவே இருந்தன. இந்த உண்மையை உணர்ந்துகொண்ட கர்தினால் ஜூலியானோ, தன்னால் ஆட்டிப்படைக்கக்கூடிய ஒருவரை திருத்தந்தையாக்குவதில் முயன்று வெற்றியும் கண்டார். அவர்தான் திருத்தந்தை 8ம் இன்னசென்ட். இத்திருத்தந்தை ஆட்சிசெய்த எட்டு ஆண்டுகளும், அவரை பொம்மைபோல் வைத்துக்கொண்டு முழு அதிகாரத்தையும் தன் கையில் வைத்திருந்தார் கர்தினால் ஜூலியானோ. 

     1492ஆம் ஆண்டு திருத்தந்தை எட்டாம் இன்னசென்ட் மரணமடைந்தபோது, திருத்தந்தையாக மீண்டும் முயற்சி எடுத்தார் கர்தினால் ஜூலியானோ. ஆனால், இவர் திருத்தந்தை எட்டாம் இன்னசென்ட்டை கைபொம்மைபோல் நடத்தியதாலும், பிரான்ஸ் அரசருக்கு ஆதரவாகச் செயல்பட்டதாலும் கோபமுற்றிருந்த கர்தினால்கள், இவர் திருத்தந்தையாவதை விரும்பவில்லை. தனக்கு வழி இல்லை என்பதைப் புரிந்துகொண்ட கர்தினால் ஜூலியானோ, இப்பதவி கர்தினால் Rodrigo Borgiaவுக்கு போய்விடக்கூடாது என்பதில் குறியாக இருந்தார். ஏனெனில், போர்ஜியா குடும்பத்திற்கும் இவருக்கும் தனிப்பட்ட முறையில் பகை இருந்தது. இவர் எவ்வளவோ தடைகளை முன்வைத்தபோதும் கர்தினால் Rodrigo Borgiaதான் திருத்தந்தையாகத் தேர்வுசெய்யப்பட்டார். அவரும் 6ம் அலெக்ஸாண்டர் என்ற பெயரை எடுத்துக்கொண்டார். உரோம் நகரில் இருந்தால் தனக்கு ஆபத்து என்பதை உணர்ந்த கர்தினால் ஜூலியானோ, பிரான்சுக்கு பயணம் மேற்கொண்டு மன்னர் எட்டாம் சார்லஸின் அரசவையில் அடைக்கலம் தேடினார். திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டரை பதவியிறக்கம் செய்ய, மன்னரோடு இணைந்து உரோம் நகருக்கு வந்தார். ஆனால், மன்னர் திருத்தந்தையோடு சமாதானமாகப் போனதால், கர்தினால் ஜூலியானோவின் எந்த திட்டமும் பலிக்கவில்லை. இருப்பினும், ஜூலியானோவின் பாதுகாப்பு குறித்த உறுதியை திருத்தந்தையிடமிருந்து பெற்றுக்கொண்டார் மன்னர். எத்தனை உறுதிமொழிகள் வழங்கப்பட்டாலும் கர்தினால் ஜூலியானோ திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டரை நம்பத் தயாராக இல்லை. ஆகவே பிரான்சிலும் வட இத்தாலியிலும் மாறி மாறி வாழ்ந்துவந்தார்.

   1503ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி திருத்தந்தை 6ஆம் அலெக்ஸாண்டர் மரணமடைய, அடுத்த திருத்தந்தைக்கான வாக்குப்பதிவில் கலந்துகொள்ள செப்டம்பர் 3ஆம் தேதி உரோம் நகர் வந்தார், கர்தினால் ஜூலியானோ.  திருத்தந்தையாக வேண்டும் என்ற இவரின் ஆசை அப்போதும் நிறைவேறவில்லை. ஏனெனில், வயதான கர்தினால் Francesco Piccolomini அவர்கள் மூன்றாம் பயஸ் என்ற பெயரில் திருத்தந்தையாகத் தேர்வுசெய்யப்பட்டார். ஒருமாத காலத்திற்குள் அத்திருத்தந்தையும் இறந்துவிட, கர்தினால் ஜூலியானோவுக்கு வாய்ப்புகள் அதிகமாகின. தன்னை திருத்தந்தையாகத் தேர்வு செய்தால் பல்வேறு சலுகைகளை வழங்குவேன், நடவடிக்கைகளை மேற்கொள்வேன் என வாக்குறுதிகளை அள்ளி வீசினார். அவற்றுள் முக்கியமானவைகளைக் குறிப்பிடலாம். துருக்கியர்களுக்கு எதிரான போரைத் தொடர்வது, திருஅவைக்குள் ஒழுங்கு முறையைப் புகுத்துவது, இரண்டாண்டிற்குள் பொதுப் பேரவையைக் கூட்டுவது, கர்தினால்கள் அவையின் முன்றில் இருபகுதி ஆதரவின்றி எந்த நாட்டோடும் போர் தொடுக்கக்கூடாது, புதிய கர்தினால்களை உருவாக்கும்போது கர்தினால்கள் அவையுடன் கலந்தாலோசிக்கப்படவேண்டும், மூன்றில் இருபகுதி கர்தினால்களே அடுத்த பேரவைக்கான இடம் குறித்து முடிவு செய்யவேண்டும், என பல வாக்குறுதிகளை வழங்கி திருஅவையின் தலைமைப் பதவியைப் பெற்றுக் கொண்டார் கர்தினால் ஜூலியானோ. 1503ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கூடிய கர்தினால்கள் அவை, ஒரு சில மணி நேரங்களிலேயே திருத்தந்தையை தேர்வு செய்துவிட்டது. இவர் எடுத்துக்கொண்ட பெயர்தான் இரண்டாம் ஜூலியஸ்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

02 November 2022, 13:36