உலகம் எங்களை மறந்துவிட்டது : மியான்மார் மக்கள்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஒட்டுமொத்த உலகமும் மியான்மாரை மறந்துவிட்டது, நாங்கள் மறக்கப்பட்ட மக்களாகிவிட்டோம் என்று மியான்மார் மக்கள் புலம்புவதாகக் கூறியுள்ளார் அருள்பணியாளர் Dominic Nyareh.
Ban Mai Nai Soi பகுதியில் வாழும் மியான்மார் புலம்பெயர்ந்தோரின ஆன்மிகக் காரியங்களைக் கவனித்துக்கொள்ளும் அருள்பணியாளர் Nyareh அவர்கள் இவ்வாறு கூறியுள்ள நிலையில், மியான்மாரை உலகம் நினைவு கூர்வதற்கு உதவிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களுக்குத் தான் மிகவும் நன்றியுடையவனாக இருக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்.
செப். 25ம் தேதியன்று நடைபெற்ற உலகப் புலம்பெயர்ந்தோர் மற்றும் இடம்பெயர்ந்தோர் தினத்திற்கான தனது உரையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மியான்மாரின் புலம்பெயர்ந்தோர் பற்றிக் குறிப்பிட்டபோது அவரது வார்த்தைகள் அனைத்து மதங்களையும் சேர்ந்த மியான்மார் மக்களிடமும் எதிரொலித்தது என்றும் நினைவு கூர்ந்துள்ளார் அருள்பணியாளர் Nyareh.
ஒட்டுமொத்த உலகமும் உக்ரைன் மற்றும் பிற இடங்களில் நிகழ்ந்து வரும் போர் மற்றும் பிரச்சனைகளில் கவனம் செலுத்துகிறது, ஆனால் மியான்மார் மனித உரிமை மீறல்களில் மோசமான நாடுகளில் ஒன்றாகும் என்று கூறியுள்ள அருள்பணியாளர் Nyareh அவர்கள், இனி சட்டத்தின் ஆட்சி என்பது இங்கில்லை என்றும் மக்கள் விரக்தியிலும் மனச்சோர்விலும் வாழ்கின்றனர் என்றும் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மிகவும் அசாதாரணமான சூழ்நிலையில் அருள்பணியாளர்களும் அருள்சகோதரிகளும் இம்மக்களுடன் உடனிருப்பது மக்கள் இயல்பான நிலையில் வாழ்வதற்கான அடையாளமாக அமைந்துள்ளது என்றும், திருஅவையின் பிரசன்னம் இறைவன் அவர்களுடன் உடன் நடக்கிறார் என்பதை எடுத்துக்காட்டுவதாக உள்ளது என்றும், இம்முகாம்களில் இயேசு சபை புலம்பெர்ந்தோர் பணிகளை இயக்கிவரும் ஸ்காட்லாந்தின் இயேசு சபை அருள்பணியாளர் Joe Hampson அவர்கள் கூறியுள்ளார்.
தாய்லாந்து எல்லையில் உள்ள ஒன்பது முகாம்களில் ஏறத்தாழ 90,000 மியான்மார் புலம்பெயர்ந்தோர் வாழ்கின்றனர். 1990-களின் முற்பகுதியில், இடம்பெயர்தல் உச்சம் தொட்டபோது, இம்முகாம்களில் 1,30,000-க்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோர் இருந்தனர். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்