இந்தோனேசியா தீவில் பணியாற்றும் போலந்து மறைபணியாளர்
செல்வராஜ் சூசைமாணிக்கம் - செல்வராஜ்
மதம் அல்லது நாடு என்பதைக் கடந்து அனைவருமே ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தை ஊக்குவிக்க முடியும் என்று இந்தோனேசியாவில் பணியாற்றும் போலந்து நாட்டைச் சேர்ந்த மறைபணியாளர் அருள்தந்தை Marcin Schmidt அவர்கள் கூறியுள்ளார்.
இந்தோனேசியாவின் லோம்போக் தீவில் வாழும் மக்களிடையே சூழலியல் மற்றும் கல்வியில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காகப் பணியாற்றி வரும் அருள்பணியாளர் Schmidt அவர்கள், 2018 ஆம் ஆண்டில் நிலநடுக்கம் ஏற்பட்டு இத்தீவில் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டபோது, காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து இம்மக்களுக்காகப் பணியாற்ற வந்தவர்.
நிலநடுக்க மீட்புப் பணியின்போது உள்ளூர் அதிகாரிகளுடன் நல்லுறவை ஏற்படுத்திக்கொண்டு அங்குள்ள இளையோருடன் பணியாற்றத் தொடங்கியதாகவும், லோம்போக் தீவின் ஆளுநருடனும் போலந்து நாட்டு அரசுடனும் நல்லதொரு ஒத்துழைப்பைப் பெற்று இந்தோனேசிய மாணவர்களுக்குக் கல்வி உதவித் தொகை பெற்றுக்கொடுத்துள்ளாகவும் கூறியுள்ள அருள்பணியாளர் Schmidt அவர்கள், இதுவரையிலும் 150 மாணவர்கள் இக்கல்வி உதவித்தொகை வழியாகப் பயன் பெற்றுள்ளதாகவும் கூறியுள்ளார்.
நவம்பர் 13, 14, அதாவது, ஞாயிறு, திங்கள் இந்தோனேசியாவின் பாலியில் நடைபெற்ற G20 உச்சிமாநாட்டையொட்டி, போலந்து நாட்டிலிருந்து செல்வாக்குமிக்க பிரமுகர்கள் குழுவை கெங்கலாங் கிராமத்திற்கு அழைத்து வந்து, அவர்களின் பெரும் உதவியுடன் அம்மக்களின் வாழ்வாதார மேம்பாட்டிற்கு உதவியுள்ளதாகக் கூறியுள்ளார் அருள்பணியாளர் Schmidt.
உள்ளூர் மக்களின் வாழ்வில் நேர்மறையான மாற்றங்களை ஏற்படுத்துவதற்குத் திருஅவை பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்று கூறியுள்ள அருள்பணியாளர் Schmidt அவர்கள், ஒருங்கிணைந்த மனித முன்னேற்றத்தைக் கொண்டு வருவதற்கு மதத்தையும் நாட்டையும் கடந்து ஒன்றிணைந்து பணியாற்றவேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தியுள்ளார்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்