போதிப்பதை வாழ்ந்து காட்டுவதே பெரிய சவால்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
மனித மாண்பை நிலைநிறுத்துவதற்காக உக்ரைன் போராடிக்கொண்டிருக்கின்றது என்று வத்திகான் வானொலிக்கு அளித்த நேர்காணல் ஒன்றில் பிலடெல்பியாவின் பேராயர் Borys Gudziak அவர்கள் கூறியுள்ளார்.
சமூகத்தொடர்பு திருப்பீடத் துறை நடத்திய ஆண்டு நிறையமர்வுக் கூட்டம் குறித்துத் தொடர்ந்து பேசியபோது இவ்வாறு கூறியுள்ள உக்ரைனின் கிரேக்கக் கத்தோலிக்க வழிபாட்டு முறைப் பேராயர் Gudziak அவர்கள், திருஅவை நற்செய்தி மற்றும் இயேசுவின் படிப்பினைகளைப் பற்றி தெளிவாகப் பேச வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டுள்ளார்.
திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், உரையாடலை மையப்படுத்தியதும் சமூகத் தொடர்பு பணியை நோக்கமாகக் கொண்டுள்ளதுமான திருஅவையை மனதில் கொண்டுள்ளார் என்றும், இது செவிசாய்க்கும் மற்றும் திருஅவையைத் தாண்டி, அதாவது எல்லைகடந்து செல்லத் தயாராக இருக்கும் பணி என்றும் குறிப்பிட்டுள்ளார் பேராயர் Gudziak
தகவல் தொடர்புத் துறையில் புதிய முறைகள் மற்றும் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துவதன் அவசியத்தை அங்கீகரிக்கும்போது, திருஅவையில் பணிக் குருத்துவம் மற்றும் பொதுக் குருத்துவத்தில் ஈடுபட்டுள்ள இருவருக்கும் தாங்கள் போதிப்பதை வாழ்ந்து காட்டுவது மிகப்பெரும் சவாலாக அமையும் என்றும் எடுத்துக்காட்டியுள்ளார் பேராயர் Gudziak
உக்ரைனில் நிகழ்ந்து நடந்து வரும் போரைப் பற்றிய திருஅவையின் தனித்துவமான செய்தியின் ஒரு அம்சமாக அதனின் சமூகக் கோட்பாட்டை முன்னிலைப்படுத்திய பேராயர் Gudziak அவர்கள், உக்ரைனில், கத்தோலிக்க சமூகக் கோட்பாட்டின் நான்கு முக்கியக் கொள்கைகலான மனித மாண்பு, ஒற்றுமை, உடனிருத்தல் மற்றும் பொது நலனை மையப்படுத்தி மக்கள் ஒன்றுதிரண்டு வருகின்றனர் என்றும் கூறியுள்ளார்.
சமூகத்தொடர்பு திருப்பீடத் துறையின் உறுப்பினராகக் கடந்த ஆண்டு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் நியமிக்கப்பட்டார் பேராயர் Gudziak
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்