நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டோருக்கு இந்தோனேசிய காரித்தாஸ் உதவி
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
இந்தோனேசியாவின் மேற்கு ஜாவாவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 250க்கும் மேற்பட்டோர் இறந்ததுடன் 7,000-க்கும் அதிகமானோர் இடம்பெயர்ந்துள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதில் அந்நாட்டின் கத்தோலிக்கர்கள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருவதாகத் தெரிவித்துள்ளது அந்நாட்டின் காரிதாஸ் அமைப்பு.
நான்கு மாவட்டங்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி வழங்குவதற்காக மற்ற கத்தோலிக்க அமைப்புகளுடன், போகோர், பாண்டுங் மற்றும் ஜகார்த்தா ஆகிய மூன்று மறைமாவட்டங்களிலுள்ள கத்தோலிக்கத் தொண்டு நிறுவனங்களை இந்தோனேசியாவின் காரித்தாஸ் அமைப்பு ஒருங்கிணைத்து வருகிறது என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்டுள்ள பகுதிகளைத் தொடர்ந்து கண்காணித்து வருவதாகவும், சரியான முறையில் கணக்கெடுத்து மக்களுக்குத் தேவையான அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றுவதில் தலத்திருஅவையுடன் இணைந்து காரித்தாஸ் அமைப்பு பணியாற்றி வருவதாகவும் தெரிவித்துள்ளார் இந்தோனேசியாவின் காரித்தாஸ் நிர்வாக இயக்குனர் Fredy Rante Taruk,
சியாஞ்சூர் மாவட்டத்தின் தென்மேற்கே 10 கிலோமீட்டர் தொலைவில் நவம்பர் 21ஆம் தேதி மதியம் 1:21 மணியளவில் 5.6 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் 250-க்கும் மேற்பட்டோர் இறந்ததுள்ளனர் என்றும் 31 பேரைக் காணவில்லை என்றும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் நிலநடுக்கத்தால் 3,257 வீடுகள் மற்றும் பொதுச் சொத்துக்கள் சேதமடைந்துள்ளதுடன், 7,064 பேர் வீடுகளை விட்டு இடம்பெயர்ந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தகுந்தது. (UCA)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்