கேரள கிறிஸ்தவர்கள்மீது சுமத்தப்படும் பொய்க்குற்றச்சாட்டுகள்!
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
எங்கள் கரங்கள் தூய்மையாக உள்ளன, எங்கள் எதிர்ப்பு வெளிப்படையானது. எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகளை எந்த நிறுவனமும் விசாரிக்கலாம் என்று கேரளாவின் திருவனந்தபுரம் மறைமாவட்டத்தைச் சேர்ந்த அருள்பணியாளர் Theodacious D’Cruz அவர்கள் கூறியுள்ளார்.
பல தொலைக்காட்சி நிறுவனங்கள் மற்றும் அம்மாநிலத்தின் ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) ஊதுகுழலாக அறியப்படும் ஒரு செய்தித்தாள், எதிர்ப்பாளர்கள் வெளிநாட்டு சக்திகளுடன் கைகோர்க்க 25 கோடி வரை (1.3-3.1 மில்லியன் அமெரிக்க டாலர்) பணம் பெற்றதாகக் குற்றம் சாட்டியுள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ளார் அருள்பணியாளர் D’Cruz.
இந்தக் குற்றச்சாட்டை நிரூபிக்குமாறு அச்செய்தி நிறுவனத்திற்குத் தான் சவால் விடுவதாகவும், சம்மந்தப்பட்ட செய்தி நிறுவனம் ஆதாரத்துடன் இந்தக் குற்றச்சாட்டை நிரூபித்தால், தனது குருத்துவப் பணியை விட்டுவிலகுவதாகவும், எந்தத் தண்டனையையும் சந்திக்கத் தான் தயாராக இருப்பதாகவும் UCA செய்தி நிறுவனத்திற்குத் தெரிவித்துள்ளார் அருள்பணியாளர் D’Cruz.
மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் இந்தத் திட்டத்திற்கு எதிராக அனைத்து மக்களின் ஆதரவைப் பெற்றுப் போராடும் நிலையில், இதனை ஒடுக்கவேண்டும் என்பதை இத்தகைய குற்றச்சாட்டுகள் நோக்கமாகக் கொண்டுள்ளன என்றும் உறுதிபடக் கூறியுள்ளார் அருள்பணியாளர் D’Cruz.
இந்தப் போலிச் செய்தியை வெளியிட்ட ஊடகங்களில் ஒரு பகுதியினர் தொடக்கத்திலிருந்தே தனியார் நிறுவனத்தை ஆதரித்து வருகின்றனர் என்றும், இப்போது தங்களுக்கு எதிராக மக்களைக் குழப்ப முயற்சிக்கின்றனர் என்றும் கூறியுள்ள அருள்பணியாளர் D’Cruz அவர்கள், இத்தகையச் செயல்கள் தங்கள் போராட்டங்களிலிருந்து தங்களைப் ஒருபோதும் பின்வாங்கச் செய்யாது என்றும், தங்களின் கோரிக்கைகளை அரசு ஏற்றுக்கொண்டால் மட்டுமே போராட்டத்தை தாங்கள் முடிவுக்குக் கொண்டு வருவோம் என்றும் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.
இந்தியாவின் கேரள மாநிலத்தில் கோடிக்கணக்கான டாலர் செலவில் அமைக்கப்பட்டுவரும் அதானி துறைமுகத் திட்டம், ஆயிரக்கணக்கான மீனவர்களின் வருங்காலத்திற்குப் பெரும் அச்சுறுத்தலாக உள்ளது என்று கூறி மக்கள் தொடர்ந்து எதிர்ப்புப் போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றனர். (UCA)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்