பிலிப்பீன்ஸ் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுங்கள்
மெரினா ராஜ் – வத்திக்கான்
பிலிப்பீன்ஸ் தீவிபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வர வேண்டும் என்றும், பிறரன்புச் செயல்களுக்கு இதயத்தில் இடம்கொடுங்கள் என்றும் செபு பேராயர் ஜோசப் பால்மா அவர்கள் தலத்திரு அவை மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
நவம்பர் 22ஆம் தேதி செவ்வாய்கிழமை இரவு பிலிப்பீன்ஸ் நாட்டின் செபு பகுதியில் திடிரென்று ஏற்பட்ட தீவிபத்தில் பாதிக்கப்பட்டோர்க்கு உதவ தலத்திரு அவைகளைக் கேட்டுக்கொண்ட பேராயர் பால்மா, குழந்தைகளும் அதிகமாக இவ்விபத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் கனிவு நிறைந்த இதயத்துடன் உதவும்படிக் கேட்டுகொண்டார்.
பிலிப்பீன்ஸ் நாட்டின் Mandaue என்னும் கடலோரமக்கள் குடியிருப்புப் பகுதிகளில் ஏற்பட்ட இத்தீவிபத்தினால் 700 குடும்பங்களில் வாழும் மக்களின் வீடுகள் தீக்கிரையானதுடன், 2500 க்கும் மேற்பட்ட மக்கள் தங்க இடமின்றி, தற்காலிகக் கூடாரங்களிலும், விளையாட்டு மைதானங்களிலும் தங்கியுள்ளனர் என்றும் கவலை தெரிவித்துள்ளார் பேராயர் பால்மா.
மீனவ மற்றும் விவசாய மக்களைக் கொண்ட இப்பகுதியில் நள்ளிரவில் ஏற்பட்ட பயங்கரமான தீவிபத்தினால் உயிர்ச்சேதம் எதுவும் இல்லையெனினும், இரண்டு தீயணைப்பு படைவீரகள், மற்றும் பொதுமக்கள் சிலரும் காயமுற்றுள்ளனர் என்று அறியப்படுகின்றது.
இரண்டு மணி நேரப் போராட்டத்திற்குப் பின்னர் தீயணைப்புப் படையினரின் முயற்சியால் இத்தீயானது அணைக்கப்பட்டது எனவும், தனிநபர் ஒருவரின் கவனக் குறைவினால் இத்தீவிபத்து ஏற்பட்டதாகவும் கூறப்படுகின்றது.
பிலிப்பீன்ஸ் காரித்தாஸ் அமைப்பினர் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு நீர் போன்றவற்றை அளித்து அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்து வருவதுடன், உணவுகளை சமைப்பதற்கேற்றவாறு அடுப்புகளையும் அமைத்துக் கொடுத்துள்ளதாகவும், வீடற்ற மக்களுக்கு உதவ பிலிப்பீன்ஸ் நாட்டு மக்களும் முன்வர வேண்டுமென்று செபு மாநில மேயர் Jonas Cortes அவர்கள் கூறியுள்ளார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்