புறக்கணிக்கப்பட்டோரின் குரல்களுக்குப் பதிலளிக்கவேண்டிய சவால்கள்
மேரி தெரேசா: வத்திக்கான்
வறியோர், பூமி, பெண்கள், இளையோர், துன்புறும் குடும்பங்கள் ஆகியோரின் குரல்களுக்குப் பதிலளிக்கவேண்டிய சவால்களை, நாங்கள் எதிர்கொள்கின்றோம் என்று, ஆசிய ஆயர்கள் வெளியிட்டுள்ள செய்தி ஒன்றில் கூறியுள்ளனர்.
FABC என்னும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு, தாய்லாந்தின் பாங்காக்கில் நடத்திய இரண்டரை வார பொதுப் பேரவையை அக்டோபர் 30, இஞ்ஞாயிறன்று நிறைவுசெய்து வெளியிட்ட செய்தியில், அப்பகுதியில் மேய்ப்புப்பணிக்குத் தேவையான புதிய வழிமுறைகளை ஆயர்கள் வகுத்துள்ளனர்.
பன்முகத்தன்மைகொண்ட ஆசியக் கண்டத்தில் உதவிக்காகவும் நீதிக்காகவும் பல்வேறு குரல்கள் எழுப்பிய வேதனைக்குப் பதிலளிக்கவேண்டிய சவாலைச் சந்தித்துள்ளோம் என்று தங்களின் இறுதி அறிக்கையில் கூறியுள்ள ஆயர்கள், ஆசியாவின் சில பகுதிகளில் திருஅவை துன்புறுவது, தீவிரவாதம் வளர்ந்துவருவது, வன்முறை, மற்றும், ஆயுதமோதல்களின் பரவிவருவது போன்றவை குறித்த தங்கள் கவலையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மனித வாழ்வு மீது மதிப்பு அதிகரிக்கப்படவேண்டியுள்ளது, மற்றும், டிஜிட்டல் பரிணாமம், நல்ல, அதேநேரம் நல்லதற்ற தாக்கங்களை ஏற்படுத்தி வருவதில் கவனம் செலுத்தப்படவேண்டியுள்ளது எனவும் ஆயர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நற்செய்தி, மற்றும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் போதனைகளால் தூண்டப்பட்டு மேய்ப்புப்பணிக்குப் புதிய வழிகளை வகுத்துள்ள ஆசிய ஆயர்கள், இப்பூமிக்கோளமும், ஏழைகளும் எழுப்பும் அழுகுரலுக்குப் பதிலளிப்பதற்கு, மேய்ப்புப்பணி மற்றும், சூழலியல் சார்ந்த மனமாற்றம் தேவைப்படுகின்றது என்றும் கூறியுள்ளனர்.
இந்நிறைவு நிகழ்வில் திருத்தந்தையின் பிரதிநிதியாகப் பங்குகொண்ட கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள் பேசுகையில், நாம் எல்லாரும் எத்தகைய ஒன்றிணைந்த பயணத்தை மேற்கொள்ளவுள்ளோம்? நம் இறுதி இலக்கு எது? என்ற கேள்வியை எழுப்பியதோடு அது இயேசுவோடு மேற்கொள்ளும், இரக்கம் மற்றும் பரிவிரக்கப் பயணமாக இருக்கவேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார்.
FABC கூட்டமைப்பின் கர்தினால்கள் சார்லஸ் மாங் போ, ஆசுவால்டு கிரேசியஸ், Francis Xavier Kriengsak Kovithavanij, அதன் பொதுச் செயலர் பேராயர் Tarcisio Isao Kikuchi ஆகியோர் இறுதி அறிக்கையில் கையெழுத்திட்டுள்ளனர்.
FABC, ஆசியாவின் 17 ஆயர் பேரவைகள், சீரோ-மலபார், சீரோ-மலங்கார ஆகிய கத்தோலிக்கத் திருஅவைகளின் பேரவைகள் ஆகியவற்றின் கூட்டமைப்பாகும்.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்