மியான்மர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட வீடுகள் மியான்மர் தாக்குதல்களில் பாதிக்கப்பட்ட வீடுகள்  

மியான்மர் தாக்குதல்களுக்குக் கவலை தெரிவிக்கும் WCC, மற்றும் CCA

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் வரை 92 புனிதத் தலங்கள், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கச்சின், கயா மற்றும் சின் மாநிலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

ஆலயங்கள் மற்றும் அது தொடர்புடைய நிறுவனங்கள் மீதான தாக்குதல்கள், மியான்மரில் மனிதாபிமானம், மனித உரிமை, அரசியல் நிலைமை போன்றவைகள் மோசமடைந்து வருவதை அடையாளப்படுத்துகின்றன என்று கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்புக்கள் அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளன.

மியான்மரில் உள்ள கச்சின் மற்றும் கயா மாநிலங்களில் உள்ள இறையியல் குருமடம் உட்பட பல தலத்திருஅவைகள் மீது நடத்தப்பட்ட தாக்குதல்கள் குறித்து WCC என்னும் உலக கிறிஸ்தவ சபைகளின் பேரவை மற்றும் CCA  என்னும் ஆசிய கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு இணைந்து வெளியிட்ட அறிக்கையில் இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் ஆயுத மோதல்கள் மற்றும் தாக்குதல்கள் இப்போது நடைபெற்று வருவதாகவும், இராணுவப் படைகளின் கடுமையான தாக்குதல்களுக்குப் பின்னர் மியான்மரில் வறுமைக்கோட்டின் விழுக்காடு 50ஆக உயர்ந்துள்ளது என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாலியல் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறை, பாதுகாப்புப் படைகளின் மனிதாபிமானமற் தாக்குதல்கள் என மியான்மரில் தற்போது நடந்து கொண்டிருக்கும் வன்முறைகள் பற்றிய கவலைகளை மீண்டும் வலியுறுத்தியுள்ள தலைவர்கள், நாட்டின் கட்டுப்பாட்டை சட்டவிரோதமாகக் கைப்பற்றியவர்கள் அதனைத் திரும்ப ஒப்படைக்க வேண்டும் எனவும், எதிர்ப்பாளர்களுக்கு எதிராக அதிகப்படியான வன்முறையைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளனர்.

மியான்மர் முழுவதும் உள்ள மக்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாகியுள்ள நிலையில் அமைதியான ஒன்றுகூடல் மற்றும் கருத்துச் சுதந்திரத்திற்கான உரிமைகளை நாட்டின் தலைவர்கள் மதிக்க வேண்டும் எனவும், தனிப்பட்ட விதத்தில் கைது செய்யப்பட்ட அனைவரையும் விடுவிக்க வேண்டும் என்றும் அவ்வறிக்கையில் குறிப்பிட்டுள்ளனர். மியான்மர் மக்களுடனான ஒற்றுமை, மற்றும் மனிதாபிமான ஆதரவு, நீதி, அமைதி, ஜனநாயகத்தை மீட்டெடுப்பதற்கான ஆதரவு மற்றும் ஈடுபாட்டை இரட்டிப்பாக்க வேண்டுமென்று சர்வதேச சமூகத்தின் அனைத்து உறுப்பினர்களுக்கும் இவ்வறிக்கையின் வழியாக இக்கூட்டமைப்புக்களின் தலைவர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் 2022 ஆம் ஆண்டு மே மாதம் வரை 92 புனிதத் தலங்கள், கிறிஸ்தவர்கள் அதிகம் வசிக்கும் கச்சின், கயா மற்றும் சின் மாநிலங்கள் சேதப்படுத்தப்பட்டுள்ளன என்று கூறும் சர்வதேச நீதிபதிகள் ஆணையத்தின் அறிக்கை குறிப்பிடத்தக்கது.

சின் இன ஆயுதக் குழுவால் வெளியிடப்பட்ட ஆவணங்கள் மற்றும் உள்ளூர் ஊடக அறிக்கைகளின்படி, மேற்கு சின் மாநிலத்தில் உள்ள ஆலயங்கள், மருத்துவமனைகள் மற்றும் பள்ளிகள் இராணுவ இலக்குகளின் பட்டியலில் உள்ளதாகவும், வன்முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க உலக மதத் தலைவர்கள் விடுத்த வேண்டுகோளை புறக்கணித்து, பல கிராமங்கள், வீடுகள் மக்களின் உடைமைகள் எரித்தும், அழிவுக்குள்ளாக்கியும்,  பொதுமக்களைக் கொன்று குவித்தும் மியான்மர் அதன் பயங்கரவாத இராணுவ ஆட்சி முடுக்கிவிட்டுள்ளது என்றும் தெரியவருகின்றது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2022, 12:41