தேடுதல்

ஜகார்த்தா பேராயர் கர்தினால் இக்னேஷியஸ் சுகார்யோ ஜகார்த்தா பேராயர் கர்தினால் இக்னேஷியஸ் சுகார்யோ  

இந்தோனேசியா: திருஅவை உண்மையான உடன்பிறந்த உணர்வுப் பாதையில்...

கர்தினால் சுகார்யோ : தங்கள் அரசியல் இலாபங்களுக்காகச் சிலர் மதத்தைப் பயன்படுத்துவதால், நாட்டை உடன்பிறந்த உணர்வின் பாதையில் கட்டியெழுப்புவது தடையாக உள்ளது.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்

இந்தோனேசியாவில் உண்மையான உடன்பிறந்த உணர்வின் பாதையில் மற்ற மதத்தினரோடு சேர்ந்து பணியாற்ற கத்தோலிக்கத் திருஅவை திறந்த மனதோடு இருக்கின்றது என்று, ஜகார்த்தா பேராயராகிய கர்தினால் இக்னேஷியஸ் சுகார்யோ அவர்கள் கூறியுள்ளார்.

பல்வேறு மதங்கள், கலாச்சாரங்கள், மொழிகள், அரசியல் சார்புநிலைகள் என பன்மைத்தன்மை கொண்ட இந்நாட்டில், கத்தோலிக்கர் சிறுபான்மையினராக இருந்தாலும்,  அத்தகைய ஒரு பாகுபாடு எந்த நிலையிலும் உணரப்படாமல், கடந்த 20 ஆண்டுகளாக அனைவரும் இந்தோனேசிய குடிமக்கள் என்ற உணர்வுடனேயே ஒன்றிணைந்து செயல்பட்டுவருவதாகவும் குறிப்பிட்டார் கர்தினால் சுகார்யோ

ஒருவரின் மதத்தை இன்னொருவர் மீது திணிப்பதால் ஒரு நாடு வளர்ச்சியையோ வெற்றியையோ காணமுடியாது என்பதை உணர்ந்து செயல்படுவதால்தான், இந்தோனேசியா நாடு, மகிழ்ச்சியின் மக்களைக்கொண்ட நாடாகத் திகழ்கின்றது என மேலும் கூறினார் கர்தினால்.

தங்கள் அரசியல் இலாபங்களுக்காகச் சிலர் மதத்தைப் பயன்படுத்துவதால் பல்வேறு பிரச்சனைகள் கிளம்புகின்றன என்பதைக் குறிப்பிட்ட கர்தினால் சுகார்யோ அவர்கள், உடன்பிறந்த உணர்வின் பாதையில் இந்தோனேசியாவைக் கட்டியெழுப்ப இது தடையாக உள்ளது என்ற கவலையையும் வெளியிட்டார்.

17 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட இந்தோனேசியா, வளமையான பல்லுயிரினங்களைக் கொண்டது. இந்நாட்டில் வாழ்கின்ற 23 கோடிக்கும் மேற்பட்ட மக்கள், பல்வேறு மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள், அரசியல் சார்புநிலை என பன்மைத்தன்மை கொண்டவர்கள்.(AsiaNews)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2022, 12:24