தேடுதல்

நோயாளரை அரவணைக்கும் இயேசு நோயாளரை அரவணைக்கும் இயேசு  

விவிலியத்தேடல்: திருப்பாடல் 35-4 ஆண்டவர் தரும் மீட்பில் மகிழ்வோம்

வறியோருக்கும் எளியோருக்கும் ஆண்டவர் தருகின்ற மீட்பை, அவர்களிடம் கொண்டுசேர்க்கும் கருவிகளாக நாம் செயல்படுவோம்.
திருப்பாடல் 35-4

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'செய்தார்க்கே செய்த வினை'! என்ற தலைப்பில் 35-வது திருப்பாடலில் 8-வது இறைவசனம் குறித்துத் தியானித்தோம். இவ்வாரம் அதனைத் தொடர்ந்து வரும் 9, 10 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை இறைபிரசன்னத்தில் வாசிப்போம். என் உள்ளம் ஆண்டவரை முன்னிட்டுக் களிகூரும்; அவர் அளிக்கும் மீட்பில் அகமகிழும். ‟ஆண்டவரே, உமக்கு நிகரானவர் யார்? எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே” என்று என் எலும்புகள் எல்லாம் சொல்லும் (வசனம் 9,10).

மேற்கண்ட இறைவார்த்தைகளில், ‟எளியோரை வலியோரின் கையினின்றும் எளியோரையும் வறியோரையும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுவிப்பவர் நீரே" என்ற இறைவார்த்தையை நமது சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம். இங்கே தாவீது அரசர், தன்னை ஒரு எளியோனாகவும் வறியோனாகவும் ஆண்டவரிடம் எடுத்துக்காட்டுகிறார். அதேவேளையில், சவுல் அரசர் ஆட்சியில் இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் நிகழ்ந்திருக்கவேண்டும், அல்லது கானான் நாட்டை நோக்கிய இஸ்ரயேல் மக்களின் பயணத்தில், எதிரிகளால் நிகழ்ந்த பல்வேறு ஆபத்துக்களினின்று எவ்வாறெல்லாம் அவர்கள் கடவுளால் காப்பாற்றப்பட்டார்கள் என்பதை அறிந்தவராய் இந்த வரிகளை அவர் எழுதியிருக்க வேண்டும். காரணம், ஏழைகள், எளியோர், வறியோர், திக்கற்றவர்கள், கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றவர்கள் என்ற வார்த்தைகளை தாவீது அரசர் தான் எழுதிய திருப்பாடல்களில் பல்வேறு இடங்களில் திரும்பத் திரும்ப பயன்படுத்துகிறார். எடுத்துக்காட்டாக, இரத்தப்பழி வாங்கும் அவர் எளியோரை நினைவில் கொள்கின்றார்; அவர்களின் கதறலை அவர் கேட்க மறவார். பொல்லார் பாதாளத்திற்கே செல்வர்; கடவுளை மறந்திருக்கும் வேற்றினத்தார் யாவரும் அங்கே செல்வர். மாறாக, வறியவர் என்றுமே மறக்கப்படுவதில்லை; எளியோரின் நம்பிக்கை ஒருபோதும் வீண்போகாது.  (திபா 9:12; 17-18) என்றும்,  ஏழைகளைத் தூசியிலிருந்து அவர் தூக்கி நிறுத்துகின்றார்; வறியவரைக் குப்பை மேட்டிலிருந்து கைதூக்கி விடுகின்றார்; உயர்குடி மக்களிடையே – தம் மக்களுள் உயர்குடி மக்களிடையே – அவர்களை அமரச் செய்கின்றார். (திபா 113:7-8), என்றும் தாவீது அரசர் வேறு சில திருப்பாடல்களிலும் இக்கருத்தினை எடுத்துரைக்கின்றார்.
ஆகவே, இதுகுறித்து நாம் ஆழமாகச் சிந்திக்கும்போது, தாவீது தன் தலைவராகிய ஆண்டவர் முன்பு தன்னை ஒரு ஏழையாகவும், எளியவராகவும், வறியவராகவும் தாழ்த்திக்கொண்டு அவரிடத்தில் முழுமையாகச் சரணடைவதைப் பார்க்கின்றோம். மேலும், இறைவாக்கினர்கள் காலத்திலும் சரி, இயேசுவின் காலத்திலும் சரி யூத சமுதாயத்தில் ஏழைகளின் சொத்தையும் உழைப்பையும் சுரண்டிப் பிழைக்கும கூட்டத்தை வலியோர் என்றும், கொள்ளையடிப்போர் என்றும், பொருள்கொள்ளப்பட்டு, அவர்களின் அநியாயச் செயல்கள் அடிக்கடி வன்மையாகக் கண்டிக்கப்பட்டதையும் காண்கின்றோம். குறிப்பாக, இறைவாக்கினரான ஆமோஸ் வழியாக மேற்கொண்டோரின் தீச்செயல்களைக் கடவுள் கண்டிக்கிறார்.

“வறியோரை நசுக்கி, நாட்டில் உள்ள ஒடுக்கப்பட்டோரை அழிக்கின்றவர்களே, இதைக் கேளுங்கள்; ‘நாம் தானியங்களை விற்பதற்கு அமாவாசை எப்பொழுது முடியும்? கோதுமையை நல்ல விலைக்கு விற்பதற்கு ஓய்வுநாள் எப்பொழுது முடிவுறும்? மரக்காலைச் சிறியதாக்கி, எடைக்கல்லைக் கனமாக்கி, கள்ளத் தராசினால் மோசடி செய்யலாம்; வெள்ளிக்காசுக்கு ஏழைகளையும் இரு காலணிக்கு வறியோரையும் வாங்கலாம்; கோதுமைப் பதர்களையும் விற்கலாம்’ என்று நீங்கள் திட்டமிடுகிறீர்கள் அல்லவா?’ ஆண்டவர் யாக்கோபின் பெருமைமீது ஆணையிட்டுக் கூறுகின்றார்: “அவர்களுடைய இந்தச் செயல்களுள் ஒன்றையேனும் நான் ஒருபோதும் மறக்கமாட்டேன் (ஆமோ 8:4-7). மேலும் இப்படி வறியோரையும் எளியோரையும் நசுக்கி அவர்களின் வாழ்வைப் பாழ்ப்படுத்திவிட்டு, கடவுளுக்கு காணிக்கைக் கொடுப்பதையும் உண்ணா நோன்பிருப்பதையும் வாடிக்கையாகக் கொண்டிருந்த அவர்களின் வெளிவேடத்தை எடுத்துக்காட்டி, கடவுளுக்குரிய அவர்களின் செயல்பாடுகள் எப்படி இருக்கவேண்டும் என்பதையும் இறைவாக்கினரான எசாயா வழிநின்று எடுத்துக்காட்டுகின்றார் இறைவன்.

ஒருவன் தன்னை ஒடுக்கிக்கொள்ளும் நாளையா நான் உண்ணாநோன்பின் நாளாகத் தெரிந்து கொள்வது? ஒருவன் நாணலைப் போல் தன் தலையைத் தாழ்த்திச் சாக்கு உடையையும் சாம்பலையையும் அணிந்து கொள்வதா எனக்கு ஏற்ற நோன்பு? இதையா நீங்கள் நோன்பு என்றும் ஆண்டவருக்கு உகந்த நாள் என்றும் அழைக்கின்றீர்கள்? கொடுமைத் தளைகளை அவிழ்ப்பதும், நுகத்தின் பிணையல்களை அறுப்பதும் ஒடுக்கப்பட்டோரை விடுதலை செய்து அனுப்புவதும், எவ்வகை நுகத்தையும் உடைப்பதும் அன்றோ நான் தேர்ந்துகொள்ளும் நோன்பு! பசித்தோர்க்கு உங்கள் உணவைப் பகிர்ந்து கொடுப்பதும் தங்க இடமில்லா வறியோரை உங்கள் இல்லத்திற்கு அழைத்து வருவதும், உடையற்றோரைக் காணும்போது அவர்களுக்கு உடுக்கக் கொடுப்பதும் உங்கள் இனத்தாருக்கு உங்களை மறைத்துக் கொள்ளாதிருப்பதும் அன்றோ நான் விரும்பும் நோன்பு! (எசா 58:5-7)

இன்று நம் இந்தியாவில் நடப்பதும் இதே நிலைதான், மத்தியில் எந்த ஆட்சி அமைந்தாலும் அது பணக்காரர்களையும், பெரும் முதலாளிகளையும், தொழிலதிபர்களையும் மேலும் மேலும் பணக்காரர்களாக்கும் அரசாகவே இருக்கின்றது. ஆனால், தற்போதைய பிஜேபி அரசு மற்ற எல்லா ஆட்சியாளர்களைக் காட்டிலும் அதானி, அம்பானி, போன்ற பெரும் பணக்காரர்கள் நாட்டைச் சுரண்டுவதில் உச்சம்தொட உதவியிருக்கிறது என்றும்,  நாட்டிலுள்ள ஏழைகளும், எளியோரும், வறியோரும், விவசாயிகளும், சிறு, குறு தொழிலாளர்களும் நைந்துபோகும் அளவிற்கு அவர்களை இவ்வரசு வாட்டிவதைக்கின்றது என்றும் எதிர்கட்சிகளும் சமூகநலன் விரும்பிகளும் தொடர்ந்து குற்றம் சுமத்தி வருகின்றனர். இதற்கு இரண்டு நிகழ்வுகளை நாம் எடுத்துக்காட்டாகக் கொள்ளலாம்.

முதலாவதாக, திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த கரும்புளிப்பட்டியைச் சேர்ந்த பன்னீர்செல்வம், கடந்த 2006-ஆம் ஆண்டு குளித்தலையிலுள்ள தேசியமயமாக்கப்பட்ட வங்கியில் டிராக்டர் வாங்குவதற்காக 14 லட்சம் ரூபாய் கடன் வாங்கியுள்ளார். மாதாமாதம் முறையாக தவணை செலுத்திவந்த நிலையில், பொருளாதார நெருக்கடியால் ஏழரை லட்சம் ரூபாய் செலுத்த முடியாமல் தவித்துள்ளார். இதனையடுத்து, நீதிமன்ற உத்தரவுப்படி, விவசாயின் பதினொன்றரை ஏக்கர் நிலம் 58 லட்சம் ரூபாய்க்கு ஏலம் விடப்பட்டது. மேலும், நீதிமன்ற உத்தரவின் பேரில் வங்கி ஊழியர்கள், வழக்கறிஞர்கள், வருவாய்துறை அதிகாரிகள், காவல்துறையினர் உள்ளிட்டோர், நில அளவையருடன் நிலத்தை அளந்தனர். இதற்குப் பன்னீர்செல்வத்தின் குடும்பத்தினர் மற்றும் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாய சங்க தலைவர் திரு. அய்யாக்கண்ணு தலைமையிலான விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும், வீட்டை காலி செய்ய மறுத்த விவசாயி பன்னீர்செல்வம், தீக்குளிக்க முயன்றபோது, போலீசார் தடுத்து நிறுத்தினர். பின்னர், பன்னீர்செல்வம் சகோதரரர்களின் நான்கு வீடுகளிலும் பொருள்கள் அனைத்தையும் வெளியே எடுத்து வைத்துவிட்டு வீட்டை காலிசெய்து பூட்டு போட்டுப் பூட்டியபோது பன்னீர் செல்வம் குடும்பத்தினரும் அவர்களது உறவினர்களும் கதறி அழுதனர். இதில் கொடுமையிலும் கொடுமையாக, ஒரு வீட்டில் சேமித்து வைத்திருந்த விதை நெல்லையும் அதிகாரிகள் வேனில் ஏற்றியது அங்கிருந்த விவசாயிகளை கண்கலங்கச் செய்தது.

இரண்டாவதாக, மேற்கண்ட நிகழ்விற்கு நேர்மாறாக, கொரோனா பெருந்தொற்று தொடங்கிய நேரத்தில் 'நிரவ் மோடி, விஜய் மல்லையா, பாபா ராம்தேவ் உள்ளிட்ட 50 தொழிலதிபர்களின் 68,000 கோடி ரூபாய் கடன் தள்ளுபடி' என்ற ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு வெளியாகி இந்திய தேசத்தையே பெரும் அதிர்ச்சிக்குள்ளாகியது. இந்நேரத்தில்தான், ஊரடங்கினால் வறுமையின் பிடியில் சிக்கித்தவிக்கும் ஏழைகளுக்கு உணவளிக்க 65,000 கோடி ரூபாய் தேவை என்று ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் ரகுராம் ராஜன் கருத்து தெரிவித்திருந்தார். ஏழை எளிய மக்களின் வங்கிக் கடன்களை வசூலிக்க, மிரட்டலில் ஆரம்பித்து சொத்து பறிமுதல் வரையிலாக அதிரடி நடவடிக்கைகளை எடுத்துவரும் வங்கிகள், பெருமுதலாளிகளின் `ஆயிரம் கோடி'களிலான கடன்களை அசால்ட்டாகத் தள்ளுபடி செய்திருப்பது எவ்வளவு அநீதியான செயல்! மேலும் 2014-ஆம் ஆண்டின் கணக்கின்படி, இந்தியாவில் மொத்தம் 1 இலட்சத்து 82,000 பேர் இலட்சாதிபதிகளாக இருந்தனர். ஆனால், 2019-இல் இவர்களின் எண்ணிக்கை 7 இலட்சத்து 59,000 பேர்களாக அதிகரித்திருக்கிறது. அப்படியென்றால், ஏழைகள் தொடர்ந்து ஏழைகளாகவே இருக்கிறார்கள்; பணக்காரர்கள் பெரும் பணக்காரர்களாக அதிகரித்துக்கொண்டே போகிறார்கள்.

இந்த அளவுக்கு இவர்களை மக்களிடமிருந்து சுருட்டவும் கொள்ளையடிக்கவும் உறுதுணையாய் இருந்தது அரசுகளும், அதிலுள்ள இவர்களின் கைக்கூலிகளும்தான் என்பதும் தெள்ளத்தெளிவாகிறது. ஆக, திட்டமிட்டு காலம் காலமாக மக்கள் பணத்தையும் இந்திய சொத்துக்களையும் கொள்ளையடித்துக் கொண்டுள்ளனர் இவர்கள். நாடும் உலகமும் சீரழிந்து கிடப்பதற்கு இவர்களைப் போன்றோர்தான் காரணம். ஆகவே, எளியோர் வலியோரின் கையினின்றும், எளியோரும் வறியோரும் கொள்ளையடிப்போர் கையினின்றும் விடுபட வேண்டுமென நாம் தாவீதின் வழியிலே இறைவனை நோக்கி இறைவேண்டல் செய்வோம். குறிப்பாக, வறியோருக்கும் எளியோருக்கும் ஆண்டவர் தரவிருக்கின்ற மீட்பை அவர்களிடம் கொண்டுசேர்க்கும் கருவிகளாக நாம் செயல்படுவோம். ஆண்டவர் தரும் மீட்பில் அனைவரும் அகமகிழ்வோம்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 November 2022, 13:07