தேடுதல்

உக்ரைன் ஆலயம்  உக்ரைன் ஆலயம்  

உக்ரைன் தலத்திருஅவையில் கருணையின் ஆண்டு

கடுங்குளிர் காலத்தையும், போரின் விளைவுகளையும் அனுபவித்துவரும், அண்டைவாழ் மக்களுக்கு உதவ வேண்டிய கடமையை வலியுறுத்தும், கருணையின் ஆண்டு.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

ஏழைகள், மற்றும் தேவையிலிருப்போர், குறிப்பாக போரால் பாதிக்கப்பட்டு துன்பங்களை அனுபவிப்போருடன் ஒருமைப்பாட்டுணர்வை வெளிப்படுத்துவதற்கு தங்களை அர்ப்பணிக்கும் விதமாக இந்த நவம்பர் இறுதி முதல், 12 மாதங்களுக்கு, கருணையின் ஆண்டை அறிவித்துள்ளது உக்ரைன் தலத்திருஅவை.

2022ஆம் ஆண்டு நவம்பர் 27ஆம் தேதி முதல் 2023ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி வரை, அதாவது வரும் ஆண்டின் கிறிஸ்து அரசர் திருவிழா வரை, கருணையின் ஆண்டை சிறப்பிப்பதாக உக்ரைனின் இலத்தீன் வழிபாட்டுமுறை கத்தோலிக்க, மற்றும் கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை ஆயர்கள் இணைந்து வெளியிட்ட அறிக்கை உரைக்கிறது.

கடுங்குளிர் காலத்தையும், போரின் விளைவுகளையும் அனுபவித்துவரும் தங்கள் அண்டைவாழ் மக்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி அவர்களுக்கு உதவ வேண்டிய கடமையை வலியுறுத்துவதாக இந்த கருணையின் ஆண்டு இருக்கும் என ஆயர்கள் தங்கள் அறிக்கையில் உரைத்துள்ளனர்.

இவ்வாண்டு பிப்ரவரி மாதம் 24ஆம் தேதி உக்ரைனை இரஷ்யா ஆக்ரமிக்கத் துவங்கியதிலிருந்து கடந்த ஒன்பது மாதங்களாக இடம்பெற்றுவரும் இரஷ்ய தாக்குதலில் இதுவரை பல இலட்சக்கணக்கானோர் நாட்டிற்குள்ளேயே குடிபெயர்ந்துள்ளனர், அல்லது அகதிகளாகியுள்ளனர்.

அண்மையில், ஆயுதங்களை வைத்திருந்தார்கள் என்ற பொய்க் குற்றச்சாட்டின்பேரில் இரு கிரேக்க கத்தோலிக்க வழிபாட்டுமுறை உக்ரைன் அருள்பணியாளர்கள் இரஷ்ய துருப்புகளால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

உக்ரைனில் பாதிக்கப்பட்ட மக்களின் அடிப்படைத் தேவைகளைக் கவனிப்பதற்கென ACN பிறரன்பு அமைப்பு, காரித்தாஸ் உட்பட பல்வேறு கத்தோலிக்க அமைப்புக்கள் செயலாற்றிவருகின்றன.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 November 2022, 13:35