தேடுதல்

திருத்தந்தையுடன் ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவை உறுப்பினர்கள் கோப்புப்படம் 2021 திருத்தந்தையுடன் ஐரோப்பிய ஒன்றிய ஆயர் பேரவை உறுப்பினர்கள் கோப்புப்படம் 2021 

தேவைகளை நிறைவு செய்வதில் ஒருவருக்கொருவர் உதவுங்கள்!

உக்ரைன் போரினால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளவர்களுக்கு உங்கள் உடனிருப்பையும் ஆதரவையும் காட்டுங்கள் : ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவை

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

இந்தக் குளிர்காலம் முழுவதும் போரினால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் அனைவருக்கும் மலிவு விலையில் எரிசக்தியை விநியோகம் செய்வதை உறுதி செய்ய ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்துள்ளது அவ்வொன்றியத்தின் ஆயர்பேரவை.

உக்ரைன் மீதான இரஷ்யாவின் போரினால் உருவான அவசரநிலை, பணவீக்கத்தையும் எரிசக்தி விலையையும் அதிகரித்துள்ள நிலையில் இவ்வாறு கூறியுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவை, இச்சூழலால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களுக்கு உடனிருப்பையும் ஆதரவையும் கோரியுள்ளது.

ஐரோப்பாவில் குளிர்காலம் நெருங்கி வருவதால், சமூக மற்றும் பொருளாதாரப் பாகுபாடுகளால் பாதிக்கப்படக்கூடிய அல்லது பாதிக்கப்பட்ட குடும்பங்கள் மற்றும் நபர்களைக் கைவிட வேண்டாம் என்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர்பேரவை  (COMECE) பொதுமக்கள் பணியில் ஈடுபட்டுள்ள அனைவரையும் கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த இக்கட்டான சூழல் ஐரோப்பாவில் எரிசக்தி பாதுகாப்பின்மையை அதிகரித்துள்ளது மட்டுமல்லாமல், அனைத்து ஐரோப்பிய ஒன்றியச் சமூகங்களிலும் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தி விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்துள்ளது என்றும் கவலை தெரிவித்துள்ள ஐரோப்பிய ஒன்றிய ஆயர்பேரவை, எரிபொருளின் தேவையை நிறைவு செய்வதில் ஒருவருக்கொருவர் பொறுப்புடன் உதவுமாறும் அழைப்புவிடுத்துள்ளது. 

இது சம்பந்தமாக, பொருள்களின் உலகளாவிய இலக்கு; ஏழைகளுக்குச் சிறப்பு முன்னுரிமை; நீதி மற்றும் அமைதி ஆகிய மூன்று நோக்கங்களை மனதில் நிறுத்தி முடிவெடுக்குமாறு ஐரோப்பிய ஒன்றியத்த்திற்கு வழிகாட்டியுள்ளது அவ்வொன்றிய ஆயர் பேரவை

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 November 2022, 13:52