தேடுதல்

உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக். உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக்.  

இயேசுவின் நற்செய்தியை அறிவிப்பதே ஒருங்கிணைந்த பயணம்

திருஅவையில் தற்போது இடம்பெற்றுவரும் “ஒருங்கிணைந்த பயணம்” என்ற நடவடிக்கை, அனைவரும் ஒன்றிணைந்து நடப்பதைக் குறிக்கிறது : கர்தினால் மாரியோ கிரெக்.

செல்வராஜ்  சூசைமாணிக்கம் - வத்திக்கான்

அனைவரும் சொல்வதைக் கேட்பது மற்றும் எல்லாரையும் ஒன்றிணைப்பது என்பது, ஒருங்கிணைந்த பயணத்தின் ஒரு பகுதியாகும் என்றும், நான், உயிருள்ள ஒரு திருஅவை அளிக்கும் நற்சான்றைக் கேட்கின்றேன் என்றும் கூறியுள்ளார் உலக ஆயர்கள் மாமன்றத்தின் பொதுச் செயலர் கர்தினால் மாரியோ கிரெக்.

2021-2024-ஆம் ஆண்டிற்கான ஒருங்கிணைந்த பயணம் குறித்த இரண்டாம் கட்டத்தைத் தயாரிப்பதற்கான கண்டங்களின் பேரவைகளின் தலைவர்கள் மற்றும் ஒருங்கிணைப்பாளர்களின் இரண்டு நாள் கலந்துரையாடல் நவம்பர் 29, இச்செவ்வாயன்று நிறைவடைந்ததை ஒட்டி  திருப்பீடச் செய்தித் தொடர்பகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறு கூறியுள்ளார் கர்தினால் கிரேக்.

இந்த நாள்களில் நடைபெற்ற பகிர்வானது, நாம் தொடங்கிய பயணம் ஏற்கனவே நன்றாக நடந்து கொண்டிருக்கிறது என்பதையும், நாம் ஒருவருக்கொருவர் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்பதையும் காட்டுகிறது என்று கூறியுள்ள கர்தினால் கிரேக் அவர்கள், நாம் மேற்கொள்ளும் பணியின் மீது எனக்கு மிகுந்த நம்பிக்கை உள்ளது என்றும் இது, இயேசு கிறிஸ்துவின் நற்செய்தி அறிவிப்புப் பணியை முதன்மையாகக் கொண்டுள்ளது என்றும் இதுதான் திருஅவையின் ஒருங்கிணைந்த பயணம் என்றும் கூறியுள்ளார்.

இக்கூட்டத்தில் தொடக்கவுரை ஆற்றிய இயேசு சபை கர்தினாலும் Luxembourg நாட்டின் ஆயருமான Jean-Claude Hollerich அவர்கள், நாம் உலகளாவிய பரிமாணம் குறித்த அனுபவத்தைப் பெறுகின்றோம் என்றும், கத்தோலிக்கராக இருக்க விரும்புபவருக்குப் புனித பேதுருவின் கரிசனையும் அறிவுரையும் அவசியத் தேவையாக அமைகின்றது என்பதையும் எடுத்துரைத்துள்ளார்.

திருத்தந்தை, தூய ஆவியார், மற்றும் இயேசுவுடன் ஒன்றாக நடப்பது, நமது திருஅவையை சீர்படுத்துவதற்கு அவசியமானது என்பதையும் தனது தொடக்க உரையின் முடிவில் எடுத்துரைத்துள்ளார் கர்தினால் Hollerich.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

30 November 2022, 15:13