தேடுதல்

புனித வின்சென்சோ ரொமானோ புனித வின்சென்சோ ரொமானோ 

வழிசொல்லும் ஒளிச்சுடர்: ஏழைகளுக்கு பணியாற்றிய புனிதர்கள்

புனித வின்சென்சோ ரொமானோ : கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நேப்பிள்ஸ் பகுதியில் உதவி தேவைப்படும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் அயராது பணியாற்றினார்

மேரி தெரேசா: வத்திக்கான்

நவம்பர் 27, இஞ்ஞாயிறன்று (நவ.27,2022), கிறிஸ்தவர்கள் திருவருகைக் காலத்தைத் தொடங்கியுள்ளனர். திருவருகைக் காலம் என்பது, இயேசு கிறிஸ்து மனிதனாகப் பிறந்ததைக் கொண்டாடுவது, அவரின் இரண்டாம் வருகையை எதிர்நோக்குவது ஆகிய இரு நிகழ்வுகளுக்கும் தயாரிக்கும் காலமாகும். உலகின் மீட்பராம் கிறிஸ்து ஒரு குழந்தையாகப் பிறக்கும் அளவுக்குத் தம்மையே தாழ்த்தி நம் மத்தியில் வாழவந்தார் என்பதை இத்திருவருகைக் காலத்தில் தியானிக்கின்றோம். திருவருகைக் காலம் எதிர்பார்ப்பையும் மகிழ்ச்சியையும் விழிப்புணர்வையும் குறிக்கின்ற காலமாகும். இக்காலம், கிழக்குமரபு வழிபாட்டுத் திருஅவைகளில் (Eastern churches) "கிறிஸ்து பிறப்பு விழா நோன்பு" (Nativity Fast) என்னும் பெயரைக் கொண்டுள்ளது. கி.பி.நான்காம் நூற்றாண்டிலிருந்து திருவருகைக் காலம், நோன்புக் காலமாகக் கடைப்பிடிக்கப்பட்டது. தற்போது நோன்பு கடைப்பிடித்தல் என்பது தவக்கால முயற்சியாக மட்டும் கருதப்படுகிறது. மேலும், கிறிஸ்துவின் பிறப்புப் பெருவிழாவுக்கென்று நடைபெறும் தயாரிப்புக்களில் ஏழைகள் மீது அக்கறை என்பதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

புனித வின்சென்சோ ரொமானோ(3 ஜூன்,1751 – 20 டிச.1831)

புனிதர்கள் பலரும் இயேசு போன்று ஏழைகள்மீது பரிவிரக்கம் கொண்டிருந்தவர்கள். தென் இத்தாலியின் நேப்பிள்ஸ் பகுதியைச் சேர்ந்த புனித வின்சென்சோ ரொமானோ அவர்கள், ஏழைகளுக்கு உதவியவர். மற்றும், நேப்பிள்ஸ் பகுதி மக்கள் அனைவரின் சமூகத் தேவைகள் நிறைவேற்றப்பட தன்னை அர்ப்பணித்திருந்தவர். இவரது எளிய வாழ்வுமுறை, மற்றும், இவர் வறியோர்க்கு ஆற்றிய பணியை, இத்தாலிய சில அரசியல் குழுக்கள் அடக்கி ஒடுக்க முயற்சித்தன. கடும் எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நேப்பிள்ஸ் பகுதியில் உதவி தேவைப்படும் மக்களுக்கும், ஏழைகளுக்கும் பெற்றோரை இழந்த பிள்ளைகளுக்கும் இவர் அயராது பணியாற்றினார். அதனால் Torre del Greco மக்கள், இவரை “தொழிலாளி அருள்பணியாளர்” .என்றே அழைத்தனர். 1794ஆம் ஆண்டில் நேப்பிள்சின் வெசுவியுஸ் எரிமலை வெடித்தபோது ஏற்பட்ட அழிவில் நேப்பிள்ஸ் நகரில் சேதமடைந்த வீடுகளை மீண்டும் அதிக அளவில் கட்டியெழுப்பியதில் இவர் மேற்கொண்ட முயற்சிகள் குறிப்பிடத்தக்கவை. அந்த எரிமலை வெடிப்பின் கழிவுகளை இப்புனிதரே அப்புறப்படுத்தினார். அச்சமயத்தில் மீள்கட்டமைப்புப் பணிகளை இவரே முன்னின்று நடத்தினார். வெசுவியுஸ் எரிமலை, வரலாற்றில் பலமுறை வெடித்துள்ளது. கி.பி.79ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெடிப்பே ஐரோப்பிய வரலாற்றில் அதிக அளவில் உயிர்ச்சேதங்களை ஏற்படுத்திய வெடிப்புக்களில் ஒன்றாகும். அச்சமயத்தில் அவ்வெடிப்பு ஒரு வினாடிக்கு 15 இலட்சம் டன்கள் வெப்பப் புகையை வெளியேற்றியது. ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணுகுண்டுகள் போடப்பட்டபோது வெளியான வெப்ப அலைகளைவிட ஒரு இலட்சம் தடவைகள் அதிகமாக வெப்பத்தை வெளியேற்றியது என பதிவுசெய்யப்பட்டுள்ளது.

புனித வின்சென்சோ ரொமானோ அவர்கள், 1751ஆம் ஆண்டில் நேப்பிள்ஸ் பகுதியிலுள்ள Torre del Greco நகரில், நிக்கொலா லூக்கா மற்றும், மரிய கிராசியா என்ற ஏழைப் தம்பதியருக்குப் பிறந்தார். தொமேனிக்கோ வின்சென்சோ மிக்கேலே ரொமானோ என்று திருமுழுக்கில் பெயர் சூட்டப்பட்ட இவருக்கு இரு சகோதரர்கள் இருந்தனர். புனித அல்போன்ஸ் மரிய தெ லிகோரியின் கட்டுரைகளை விரும்பி வாசித்த இவர், சிறுவயது முதலே, திருநற்கருணை மீதும் மிகுந்த பக்தியை வளர்த்துக்கொண்டார். இவர் தனது 14வது வயதில் துறவற வாழ்வைத் தெரிவுசெய்வது குறித்து தன் தந்தையிடம் கூறியபோது, அவரோ தனது மகன் பொற்கொல்லனாக வேலைசெய்யவேண்டும் என்று விரும்பினார். ஆனால் இவரது அருள்பணியாளர் அண்ணன் கொடுத்த ஆதரவில் அர்ப்பண வாழ்வுக்காக படிப்பைத் தொடங்கினார். அச்சமயத்தில், கர்தினால் Antonino Sersale அவர்கள், புதிதாக துறவு வாழ்வில் சேர்பவர்களுக்குப் புதிய விதிமுறைகளை அறிவித்ததால், இவருக்கு அவ்வாழ்வுக்கான படிப்பைத் தொடர்வதில் இடையூறு ஏற்பட்டது. இருந்தபோதிலும், ஒருவரின் உதவியால், ரொமானோ அவர்கள் அருள்பணித்துவ வாழ்வுக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டார்.

மறைப்பணி

வின்சென்சோ ரொமானோ அவர்கள், 1775ஆம் ஆண்டு சூன் பத்தாம் தேதி அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார். இவருக்கு, Torre del Grecoவில் மறைப்பணியாற்றும் பொறுப்பு கொடுக்கப்பட்டது. இவரது எளிய தவ வாழ்வும், கைவிடப்பட்ட பிள்ளைகளுக்கும், அருள்பணித்துவப் பயிற்சி மாணவர்களுக்கும் ஆற்றிய பணி அனைவரின் கவனத்தை ஈர்த்தன. 1794ஆம் ஆண்டு சூன் 15ம் தேதி வெசுவியுஸ் எரிமலை வெடித்தபோது, இவர் உதவி பங்குத்தந்தையாகப் பணியாற்றிய புனித திருச்சிலுவை ஆலயமும் சேதமடைந்தது. அவ்வாலயத்தை இவரே மீண்டும் கட்டியெழுப்பினார். அப்பேரிடருக்குப்பின் மீள்கட்டமைப்புப் பணிகளை ஏற்பாடுசெய்ய பலமணிநேரம் தன்னை அர்ப்பணித்தார். தானே அப்பேரிடரின் கழிவுகளில் பெரும்பகுதியை அப்புறப்படுத்தினார். 1827ஆம் ஆண்டில் அவ்வாலயம் அர்ச்சிக்கப்பட்டது. 1799ஆம் ஆண்டில் பங்குத்தந்தை இறந்தபின்னர், இவரே அப்பொறுப்பை ஏற்றார். சிறார் கல்வி, நற்செய்தி அறிவிப்புப்பணி ஆகியவற்றுக்குத் தன்னை அர்ப்பணித்தார் இவர். இவ்வாறு இவர் பணியாற்றிவந்த காலக்கட்டத்தில், இவர் வாழ்ந்த பகுதியை ஆக்ரமித்திருந்த பிரெஞ்சுக்காரர்கள் இவரது பணிகளை நசுக்கினர். ஏற்கனவே பல்வேறு இத்தாலிய அரசியல் குழுக்களின் எதிர்ப்பையும் இவர் சந்தித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இறுதி வாழ்வு

1825ஆம் ஆண்டு சனவரி முதல் நாள் இவர் கீழே விழுந்ததில் இவரது இடது தொடை எலும்பு முறிந்தது. அதிலிருந்து இவரது உடல்நிலையும் மோசமடைந்தது. நீண்டகாலம் நோயினால் துன்புற்ற அருள்பணி வின்சென்சோ ரொமானோ அவர்கள் இறுதியில், 1831ஆம் ஆண்டு டிசம்பர் 20ம் தேதி இறைபதம் சேர்ந்தார். இவரது அழியாத உடல் புனித திருச்சிலுவை ஆலயத்தில் வைக்கப்பட்டுள்ளது. 1990ஆம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள் நேப்பிள்ஸ்க்கு மேய்ப்புப்பணி பயணம் மேற்கொண்டபோது, இவரது கல்லறையை தரிசித்துள்ளார். அருள்பணி வின்சென்சோ ரொமானோ அவர்களை புனிதராக அறிவிக்கும் படிநிலைகளைத் தொடங்குவதற்காக 1856ஆம் ஆண்டு நவம்பர் 24ம் தேதியும், பின்னர் 1927ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதியும், பின்னர் மூன்றாவது முறையாக, 1963ஆம் ஆண்டு செப்டம்பர் 7ம் தேதியும் இவரது உடல் கல்லறையிலிருந்து வெளியே எடுக்கப்பட்டது. அச்சமயத்தில் இவரது உடல் ஒரு கண்ணாடி பெட்டியில் வைக்கப்பட்டது. மீண்டும் 1982ஆம் ஆண்டில் இவரது உடல் வெளியே எடுக்கப்பட்டு மருத்துவப் பரிசோதனை செய்யப்பட்டபின்னர், பொது மக்களின் வணக்கத்திற்கு வைக்கப்பட்டது.

அருள்பணி ரொமானோ அவர்கள், கிறிஸ்தவ வாழ்வின் வீரத்துவமான நற்பண்புகளுக்கு ஓர் எடுத்துக்காட்டு என்றுரைத்து, 1895ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25ம் தேதி, திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், அவரை இறைஊழியர் என்று அறிவித்தார். இவரது பரிந்துரையால் நடைபெற்ற இரு புதுமைகளால், 1963ஆம் ஆண்டு நவம்பர் 17ம் தேதி திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களால் அருளாளராகவும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராகவும் அறிவிக்கப்பட்டார். புனித வின்சென்சோ ரொமானோ அவர்கள், 1964ஆம் ஆண்டு செப்டம்பர் 2ம் தேதி, நேப்பிளஸ் நகர்ப்பகுதி அருளாளர்களின் பாதுகாவலர் என அறிவிக்கப்பட்டார். மேலும் இப்புனிதர், Torre del Greco நகர், தொண்டை புற்றுநோயாளர்கள், கைவிடப்பட்டோர், மற்றும், மாலுமிகளின் பாதுகாவலரும் ஆவார்.     

புனித பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி

புனித பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி
புனித பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி

1853ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி இத்தாலியின் மிலான் நகரில் பிறந்த புனித பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி (Francesco Spinelli) அவர்கள், சிறுவனாக இருந்தபோதே, மிலான் நகரில் தேவையில் இருப்போர் மற்றும், ஏழைகளை தன் தாயோடு சேர்ந்து சந்தித்து அவர்களுக்கு உதவி வந்தார். இவர், பொம்மலாட்டங்கள் வைத்து சிறாரை ஆனந்தப்படுத்தி வந்தார். சிறார் தங்களின் திறமைகளின் பெயர்களைச் சொல்லச்சொல்லி அவற்றில் அவர்கள் வளரவும், அவற்றை வைத்து மற்ற சிறாரை மகிழ்ச்சிப்படுத்தவும் செய்தார்.  இவர் 1990ஆம் ஆண்டு மார்ச் 3ம் தேதி இறை ஊழியராகவும், 1992ஆம் ஆண்டு ஜூன் 21ம் தேதி அருளாளராகவும், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி புனிதராகவும் அறிவிக்கப்பட்டார்.

இத்தாலியின் பெர்கமோவில் அருள்பணித்துவ வாழ்வுக்குப் பயிற்சிபெற்று, 1875ஆம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார் இவர். 1875ஆம் ஆண்டில் பெண்கள், எப்பொழுதும் திருநற்கருணை ஆராதனை செய்வதைக் காட்சியில் கண்டார். தன் அருள்பணித்துவ மறைப்பணிக்குப் பிரமாணிக்கமாக இருந்த இவர், பகலில் குருத்துவக் கல்லூரியில் ஆசிரியப் பணியாற்றினார். இரவில் ஏழைகளுக்கு மாலைநேர வகுப்புகளை எடுத்தார். 1882ஆம் ஆண்டில் திருநற்கருணைக்கு முழுவதும் தங்களை அர்ப்பணிக்கும் ஒரு துறவு சபை தொடங்கப்பட இவர் உதவினார். ஆனால் இம்முயற்சி வெற்றியடையவில்லை. அதனால் மிகவும் கவலையடைந்து, பெர்கமோவைவிட்டு கிரேமோனாவுக்குச் சென்றார், அருள்பணி பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி. இவர் பின்னர் 1892ஆம் ஆண்டில் திருநற்கருணை ஆராதனை அருள்சகோதரிகள் சபையை ஆரம்பித்தார். 1897ஆம் ஆண்டில் இச்சபைக்கு மறைமாவட்ட அங்கீகாரம் கிடைத்தது. இச்சபை உலகெங்கும் திருநற்கருணை ஆராதனை செய்யும் மறைப்பணியைத் தொடர்ந்து நடத்தியது. இவர் 1913ஆம் ஆண்டு பிப்ரவரி 6ம் தேதி இறைபதம் சேர்ந்தார்.

பிரான்செஸ்கோ ஸ்பிநெல்லி, வின்சென்சோ ரொமானோ ஆகிய இருவர் தவிர, 2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், திருத்தந்தை ஆறாம் பவுல், பேராயர் ஆஸ்கர் ரொமேரோ, மரிய கத்ரீனா காஸ்பர், இஞ்ஞாசியோ நசாரியா மார்ஷ் மெசால், நூன்சியோ சுல்பிரிசியோ ஆகிய ஏழு அருளாளர்களைப் புனிதர்களாக அறிவித்தார்.

புனித ஆஸ்கர் ரொமேரோ

புனித ஆஸ்கர் ரொமேரோ
புனித ஆஸ்கர் ரொமேரோ

1917ஆம் ஆண்டு பிறந்த ஆஸ்கர் அர்னுல்ஃபோ ரொமேரோ அவர்கள், தன் 25வது வயதில் அருள்பணியாளராகவும், 53வது வயதில் ஆயராகவும் அருள்பொழிவு பெற்றவர். 1970ம் ஆண்டு, அருள்பணி ரொமேரோ அவர்களை ஆயராக நியமனம் செய்த திருத்தந்தை 6ம் பவுல் அவர்கள், ஏழு ஆண்டுகள் சென்று, அவரை, சான் சால்வதோரின் பேராயராகவும் நியமனம் செய்தார்.  1977ஆம் ஆண்டு, ரொமேரோ அவர்கள், தன் 60வது வயதில், சான் சால்வதோர் உயர்மறைமாவட்டத்தின் பேராயராக நியமனம் பெற்றபோது, அவர், கோவில், சார்ந்த பணிகளை மட்டுமே ஆற்றுவார், சமுதாயப் பிரச்சனைகளில் தலையிடமாட்டார் என்று அந்நகரின் செல்வந்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். அதேவேளையில், சான் சால்வதோர் நகரில், மத்திய அமெரிக்கப் பல்கலைக்கழகத்தை நடத்திவந்த இயேசு சபையினர் மனம் உடைந்துபோயினர். அவர்களைப் பொருத்தவரை, பேராயர் ரொமேரோ அவர்கள், நாட்டில் நிலவும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கமாட்டார் என்று எண்ணியதால், இந்த மனநிலை அவர்களுக்கு உருவானது.

அதே பல்கலைக்கழகத்தில் பணியாற்றி, பின்னர், வறுமைப்பட்ட விவசாயிகள் நடுவில் உழைத்துவந்த இயேசு சபை அருள் பணியாளர், ருத்தீலியோ கிராந்தே கார்சியா (Rutilio Grande García) அவர்கள், பேராயர் ரொமேரோ அவர்களின் நெருங்கிய நண்பர். சமுதாய நீதி குறித்து இருவருக்கும் காரசாரமான கருத்துப் பரிமாற்றங்கள் நிகழ்வதுண்டு. 1977ம் ஆண்டு பிப்ரவரி 23ம் தேதி ரொமேரோ அவர்கள், பேராயர் பொறுப்பை ஏற்ற இரு வாரங்கள் சென்று, மார்ச் 12ம் தேதி, அருள்பணி ருத்திலியோ கிராந்தே அவர்கள் கொல்லப்பட்டார். கொலையுண்டு கிடந்த நண்பர் கிராந்தேயின் சடலத்திற்குமுன், பேராயர் ரொமேரோ அவர்கள் முக்கியமானதொரு முடிவெடுத்தார். தன் நண்பர் கிராந்தேயின் அடக்கச்சடங்கில் பேராயர் ஆற்றிய மறையுரை, எல் சால்வதோர் நாட்டின் அதிகார வர்க்கத்தை அதிர்ச்சியடையச் செய்தது. வறியோரும் அந்த மறையுரையைக் கேட்டு, அதிர்ச்சி அடைந்தனர். ஆனால், அது ஆனந்த அதிர்ச்சி. அருள்பணி கிராந்தே அவர்களுக்குப் பதிலாக, தங்கள் சார்பில் போராட, பேராயர் ரொமேரோ அவர்கள் கிடைத்ததை எண்ணி, வறியோர், ஆனந்தம் அடைந்தனர்.

சமூக நீதிக்கான போராட்டம்

புனித ஆஸ்கர் ரொமேரோ
புனித ஆஸ்கர் ரொமேரோ

பேராயர் ரொமேரோ அவர்களிடம் ஏற்பட்ட மாற்றங்கள், வத்திக்கானிலும் அதிர்வலைகளை உருவாக்கின. அவரைக் குறித்து வத்திக்கானில் நிலவிய வதந்திகளை பொருட்படுத்தாது, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், பேராயர் மீது தனி மதிப்பு வைத்திருந்தார் என்று, வரலாற்றுப் பேராசியர் ரொபெர்த்தோ மொரோஸோ அவர்கள் கூறியுள்ளார். அருள்பணி கிராந்தே அவர்கள் கொலை செய்யப்பட்ட சில நாள்களில், அதாவது, 1977ஆம் ஆண்டு, மார்ச் 26ம் தேதி, பேராயர் ரொமேரோ அவர்கள் வத்திக்கானுக்குச் சென்று, திருத்தந்தை 6ம் பவுல் அவர்களைச் சந்தித்தார். இதற்குப்பின், அடுத்த ஆண்டே மீண்டும் இவ்விருவரும் இரண்டாம் முறையாகச் சந்தித்தபோது, தன்னை உற்சாகப்படுத்தி, திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள் கூறிய சொற்களை, பேராயர் ரொமேரோ அவர்கள், மீண்டும் தன் நாள் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார். "நீங்கள் ஆற்றும் பணி மிகக்கடுமையானது என்பது எனக்குத் தெரியும். பலர் உங்கள் செயல்களைச் சரிவரப் புரிந்துகொள்ளாமல் போகலாம். எல்லாரும் உங்களைப்போல் சிந்திப்பதும் இல்லை. உங்கள் நாட்டில் தற்போது நிலவும் சூழலில், அனைவரும் ஒருமித்த எண்ணம் கொண்டிருப்பது இயலாது. இருப்பினும், நீங்கள் நம்பிக்கையுடனும், பொறுமையுடனும், துணிவுடனும் முன்னேறிச் செல்லுங்கள்" என்று திருத்தந்தை தன்னிடம் கூறியச் சொற்களை, பேராயர் ரொமேரோ அவர்கள், தன் மறையுரையிலும் குறிப்பிட்டுள்ளார். திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்களின் ஆதரவையும், ஆசிரையும் பெற்றிருந்த, பேராயர் ரொமேரோ அவர்கள், இன்னும் தீவிரமாக தன் நீதிப்பணியில் ஈடுபட்டார்.

எல் சால்வதோர் நாட்டில், தொடர்ந்து நடந்துவந்த கொலைகளையடுத்து, பேராயர் ரொமேரோ அவர்கள், இரு முக்கியமான முடிவுகளை எடுத்தார். அரசாலும், செல்வந்தராலும் வேட்டையாடப்பட்ட வறியோருக்குப் பாதுகாப்புத்தரும் புகலிடமாக, மறைமாவட்டத்தின் குருமாணவர் இல்லத்தின் கதவுகளைத் திறந்துவைத்தார். நூற்றுக்கணக்கான வறியோர் அங்கே தஞ்சம் அடைந்தனர். சான் சால்வதோரில் எழுப்பப்பட்டு வந்த புதிய பேராலயத்தின் பணிகளை உடனடியாக நிறுத்தச் சொன்னார். ‘உள்நாட்டுப் போர் முடியட்டும், ஏழைகளின் வயிறு நிறையட்டும், குழந்தைகள் நல்ல கல்வி பெறட்டும்... பின்னர்  நமது பேராலயத்தைக் கட்டுவோம்’ என்று பேராயர் ரொமேரோ அவர்கள் தெளிவாகக் கூறினார். அவர் எடுத்த இந்த இரு முடிவுகளும் தலத்திருஅவையின் புரட்சியை இன்னும் ஆழப்படுத்தின.

பேராயர் ஆஸ்கர் ரொமேரோ அவர்கள், 1980ம் ஆண்டு, திருப்பலியாற்றிய வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார். இவரின் பரிந்துரையால், கருவுற்றிருந்த ஒரு பெண்ணுக்கு, கருப்பையில் ஏற்பட்ட பிரச்சனைகள் தீர்ந்து, தாயும், சேயும் புதுமையான வழியில் உயிர் பிழைத்துள்ளனர் என்று கூறப்படுகிறது. 2015ஆம் ஆண்டு, மே மாதம் 23ம் தேதி அருளாளராக உயர்த்தப்பட்ட பேராயர் ரொமேரோ அவர்கள், 2018ஆம் ஆண்டு அக்டோபர் 14ம் தேதி திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் புனிதராக அறிவிக்கப்பட்டார். அதே நாளில் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களும் புனிதராக அறிவிக்கப்பட்டார்.

"நாம் இறைவனின் கருவிகளேயன்றி வேறெதுவும் இல்லை என்பதைப் புரிந்து, ஏற்றுக்கொள்ளும் அத்தருணம், மிக அழகானது. நாம் எவ்வளவு காலம் வாழவேண்டுமென்று இறைவன் நினைக்கிறாரோ, அவ்வளவு காலம் மட்டுமே நாம் வாழ்கிறோம். நாம் எவ்வளவு செய்யமுடியும் என்று இறைவன் நினைக்கிறாரோ, அவ்வளவு மட்டுமே நம்மால் செய்யமுடியும்" என்றுரைத்தவர் புனித பேராயர் ஆஸ்கர் ரொமேரோ.

‘நாம் தொட்டுவிடக்கூடியக்கூடிய தூரத்தில்தான் புனிதம் உள்ளது’ என்று கூறியவர் திருத்தந்தை புனித 6ம் பவுல்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 November 2022, 18:01