தேடுதல்

புனித ஜான் ஹென்றி நியூமன் புனித ஜான் ஹென்றி நியூமன் 

வழிசொல்லும் ஒளிச்சுடர்: கத்தோலிக்கத்திற்கு மாறிய அறிஞர்

புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்கள், The Dream of Gerontius என்ற கவிதையில் அரசராம் கிறிஸ்து, அனைத்து வானதூதர்கள் மற்றும், புனிதர்களோடு கடவுளைப் போற்ற நம்மை அழைக்கிறார்

மேரி தெரேசா: வத்திக்கான்

புனித தாமஸ் அக்குவினாஸ் அவர்கள், ஒருமுறை நேப்பிள்ஸ் நகரில் திருப்பலி நிறைவேற்றிக்கொண்டிருந்தபோது சிலுவையில் இருந்து கிறிஸ்து அவரிடம், “தாமஸ், நீ என்னைப்பற்றி நன்றாக எழுதுகின்றாய். அதற்குப் பதிலாக உனக்கு என்ன வேண்டும்?” என்று கேட்டார். அதற்கு தாமஸ், “ஆண்டவரே உம்மையன்றி வேறு எதுவும் எனக்கு வேண்டாம்” என்று கூறினார் என, அவர் பற்றிய குறிப்புகளில் பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவர், புகழ்பெற்ற மெய்யியல் மற்றும் இறையியல் அறிஞர், ஆழமான இறையியல் கருத்தியல்களைக்கொண்ட நூல்கள் எழுதியிருப்பவர், அரிஸ்டாட்டிலின் பல்வேறு கருத்தியல்களை ஏற்றவர் என பன்முகப் புலமைகொண்டவர். ஆயினும், கிறிஸ்து இயேசுவின்முன் தனது திறமைகள் பூஜ்யமே என உணர்ந்தவர், புனித தாமஸ் அக்குவினாஸ்.  

புனித தாமஸ் அக்குவினாஸ் (Thomas Aquinas,1225–1244), தொமினிக்கன் சபைத் துறவி ஆவார். இவர் இத்தாலியின் லாட்சியோ மாநிலத்தில் அக்குவினோ என்ற நகருக்கருகில் பிரபுக்கள் குடும்பத்தில் பிறந்தவர். இவர் எழுதிய தலைசிறந்த இறைமையியல் நூல்கள், குறிப்பாக ''இறைமையியல் சுருக்கத்திரட்டு'' (Summa Theolagica) என்ற நூல், கத்தோலிக்க இறைமையியல் கோட்பாடுகளை மிகவும் ஆணித்தரமாக எடுத்துரைக்கும் தலைசிறந்த படைப்பாகும். இவர் தன் எழுத்துக்களில் தடம்பதிக்காத துறையே இல்லை என்றுதான் கூறவேண்டும். சமூக நீதி, மரண தண்டனை, அறநெறிக்கோட்பாடுகள், அரசியல் ஒழுங்குமுறை, உளவியல், உடலியல், பொருளாதாரம் எனப் பல்வேறு துறைகள் பற்றி இவர் எழுதியிருக்கிறார்

புனித ஜான் ஹென்றி நியூமன்

13ம் நூற்றாண்டில் வாழ்ந்த புனித தாமஸ் அக்குவினாஸ் உட்பட கத்தோலிக்கத் திருஅவையில் சிறந்த அறிஞர்கள், புகழ்பெற்ற எழுத்தாளர்கள் புனிதர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இத்தகைய புனிதர்கள் குழுவில் ஒருவராக 2019ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி இணைந்திருப்பவர், பிரித்தானிய இறையியல் வல்லுனரான புனித ஜான் ஹென்றி நியூமன் (John Henry Newman). 1801ஆம் ஆண்டு பிப்ரவரி 21ம் தேதி இலண்டனில் பிறந்த இவர், தனது 89வது வயதில் 1890ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 11ம் தேதி பிர்மிங்காமில் இறைவனடி சேர்ந்தார். 19ம் நூற்றாண்டில் வாழ்ந்த இவர், செல்வாக்குமிக்க திருஅவை மனிதராகவும், கட்டுரைகளும், நூல்களும் எழுதிய மனிதராகவும் சொற்பொழிவுகள், மறையுரைகள் ஆற்றுவதில் வல்லவராகவும் விளங்கினார். An Essay in Aid of a Grammar of Assent” “Apologia pro Vita Sua” “Essay on the Development of Christian Doctrine” “Idea of a University” “Lectures on the Prophetical Office of the Church” “Lyra Apostolica” “Parochial and Plain Sermons” “Tracts for the Times” “University Sermons” ஆகிய இவரின் படைப்புக்கள் புகழ்பெற்றவை.

வாழ்வின் ஆரம்பம்

ஆறு பிள்ளைகள்கொண்ட குடும்பத்தில் மூத்தவரான நியூமன், ஆக்ஸ்ஃபோர்டு Trinity கல்லூரியில் படிப்பை முடித்து, 1825ஆம் ஆண்டில் Alban Hallலில் உதவித் தலைவராகவும், 1828ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டு புனித மரியா கல்லூரியில் உதவியாளராகவும் பணியாற்றினார்.  இங்கிலாந்து ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் அருள்ஊழியர்கள் John Keble, Richard Hurrell Froude ஆகியோரின் நல்தாக்கத்தால், அத்திருச்சபையில் உறுதிப்பாட்டுடன் விளங்கிய உயர்வான மனிதராக மாறினார், நியூமன். பழங்கால கிறிஸ்தவ மரபை, குறிப்பாக ஆயர்நிலை, அருள்பணித்துவநிலை, அருளடையாளங்கள் ஆகியவை ஆங்லிக்கன் சபையில் தொடர்ந்து கடைப்பிடிக்கப்படுவதில் உறுதியாய் இருந்தார் நியூமன்.

ஆக்ஸ்ஃபோர்டு இயக்கத்தோடு தொடர்பு

ஆக்ஸ்ஃபோர்டு இயக்கம் தொடங்கப்பட்டபோது, அதற்கு மிக நுண்ணிய சிந்தனைகளை வழங்கும் அறிவாளியாகவும் சிறந்த அமைப்பாளராகவும் இருந்தார் நியூமன். ஆக்ஸ்ஃபோர்டு இயக்கம் என்பது, இங்கிலாந்து ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபைக்குள் செயல்பட்ட ஓர் உயரிய இயக்கமாகும். 1833ஆம் ஆண்டில் ஆக்ஸ்ஃபோர்டில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், ஆங்லிக்கன் கிறிஸ்தவ மரபில், கத்தோலிக்கக் கூறுகளை வலியுறுத்தவும், அச்சபையில் சீர்திருத்தத்தைக் கொணரவுமான நோக்கத்தைக் கொண்டிருந்தது. அவர் அவ்வியக்கத்திற்கு வழங்கிய 24 சிறு ஆய்வுக் கட்டுரைகள், அவரது சொற்பொழிவுகள் மற்றும் நூல்கள் போன்று அவ்வளவாக முக்கியத்துவம் பெறவில்லை. திருஅவையின் இறைவாக்குப் பணி (1837), அதிகாரம் குறித்த கோட்பாட்டு அறிக்கை பற்றிய சொற்பொழிவுகள், பல்கலைக்கழக மறையுரைகள் (1843), மத நம்பிக்கை கோட்பாடு, பங்குத்தளங்களில் ஆற்றிய மறையுரைகள் (1834–42) போன்றவையே, அவ்வியக்கத்தின் கோட்பாடுகள் நாடு முழுவதும் பரவ உதவின.

ஆங்லிக்கன் திருச்சபையில் நியூமன்

1838 மற்றும், 1839ஆம் ஆண்டுகளில் நியூமன், இங்கிலாந்து ஆங்லிக்கன் சபையில் செல்வாக்குப் பெறத் தொடங்கினார். முற்போக்குச் சிந்தனையுடைய புதிய யுகத்தில் அவர் வலியுறுத்திய திருஅவையின் அதிகாரம் குறித்த கோட்பாடு மிகவும் அவசியமானதாக கருதப்பட்டது. தான் போதித்ததை வாழ்ந்துகாட்டிய மனிதராக அச்சபையில் அவர் பிரபலம் அடைந்தார். அதோடு அவர் பெற்றிருந்த எழுத்துத் திறமை என்னும் கொடை, சிலநேரங்களில் கவர்ச்சிகரமான உரைநடையாகவும் இருந்தது. அது ஆங்லிக்கன் கிறிஸ்தவர்கள் மத்தியில் இவரது செல்வாக்கை அதிகரித்தது.  

இங்கிலாந்து கிறிஸ்தவ திருச்சபை உண்மையான கத்தோலிக்கப்பண்பைக் குறித்து நிற்கின்றது என்றும், இந்தப் பண்பு, பழங்கால திருஅவைத் தந்தையரின் போதனைகளில் வேரூன்றியுள்ளது என்றும் நியூமன் கூறிவந்தார். சீர்திருத்த சபைகளை இவர் குறைத்து மதிப்பிட்டார். இந்த இவரது போக்கு, அக்கிறிஸ்தவ சபையில் மிதவாதிகளிடையே சந்தேகத்தை எழுப்பியது. நியூமன், 1841ஆம் ஆண்டில் வெளியிட்ட ஆய்வுக்கட்டுரை 90, இந்த சந்தேகத்தை வலுப்படுத்தியது. இது நியூமனை, தன்னையே தனிமைப்படுத்திக் கொள்ளவும் செய்தது. ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையின் கத்தோலிக்கப்பண்பு மீதிருந்த நம்பிக்கையையும் பலவீனப்படுத்தியது. மேலும், ஆங்லிக்கன் திருச்சபையும் லூத்தரன் திருச்சபையும் செய்த உடன்படிக்கை இவரின் சந்தேகங்களுக்கு வலுசேர்த்தது. இறுதியில் ஆக்ஸ்ஃபோர்டைவிட்டு வெளியேறி தனது நெருங்கிய சில சீடர்களோடு ஒரு துறவு இல்லம் போன்ற ஓர் இடத்தில் வாழத்தொடங்கினார் நியூமன்.     

புனித ஜான் ஹென்றி நியூமன் அருளாளராக அறிவிக்கப்பட்ட திருப்பலி
புனித ஜான் ஹென்றி நியூமன் அருளாளராக அறிவிக்கப்பட்ட திருப்பலி

உரோமன் கத்தோலிக்கத்திற்கு மனமாற்றம்

1843ஆம் ஆண்டு செப்டம்பர் 18ம் தேதி ஆக்ஸ்ஃபோர்டின் புனித மேரி பல்கலைக்கழக ஆலயத்திலிருந்து விலகினார் நியூமன். அதற்கு ஒரு வாரம் சென்று, Littlemore ஆலயத்தில், “நண்பர்களின் பிரிவு” என்ற தலைப்பில் ஆங்லிக்கன் திருச்சபையில் கடைசி மறையுரையாற்றினார். இவர் கத்தோலிக்கத் திருஅவையில் சேருவதற்கு காலம் தாழ்த்தினார். ஏனெனில் தொடக்ககாலத் திருஅவைக்கும், நவீன உரோமன் கத்தோலிக்கத் திருஅவைக்கும் இடையே வரலாற்று முரண்பாடு இருப்பதாக, அறிவில் சிறந்த இவர் நினைத்தார். உயிரியல் பரிணாமத்தோடு தொடர்புபடுத்தி அதிகமாக விவாதிக்கப்படுகின்ற முன்னேற்றம் குறித்த கருத்தியல் பற்றி தியானித்தார். அதனை கிறிஸ்தவ சமுதாயத்தின் வரலாற்று வளர்ச்சி குறித்த நியமத்திற்கு இணைத்துப் பார்த்தார். தொடக்ககால மற்றும், பிளவுபடாத திருஅவை, நவீன உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில் சரியாக வளர்ந்துள்ளது என்பதையும், கோட்பாடு மற்றும், பக்தியில் ஏற்பட்ட வளர்ச்சியில், ஒரு முறிவை ஏற்படுத்தியதை பிற கிறிஸ்தவ சபைகள் குறித்து நிற்கின்றன என்பதையும் அவர் வெளிப்படுத்த முயற்சி செய்தார். இவ்வாறு அவர் தியானித்ததன் பயனாக, அவரில் ஏற்பட்டிருந்த முரண்பாட்டுத் தடை நீங்கியது. 1845ஆம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி நியூமன் Littlemoreல், உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில் ஏற்றுக்கொள்ளப்பட்டார். இதற்கு சில வாரங்கள் சென்று, கிறிஸ்தவக் கோட்பாட்டு வளர்ச்சி குறித்த கட்டுரையை வெளியிட்டார் நியூமன்.

பின்னர் நியூமன், அருள்பணித்துவ வாழ்வுக்குத் திருப்பொழிவு செய்யப்படுவதற்காக, உரோம் நகருக்குச் சென்றார். உரோமன் கத்தோலிக்கத் திருஅவையில் தீவிரமாக  இருந்த அருள்பணியாளர்கள் இவர் மீது சந்தேகத்தை எழுப்பினர். காரணம், இவர் ஏறத்தாழ விடுதலை இறையியல் சிந்தனையில் இருக்கிறார் என்று அவர்கள் யூகித்தனர். நியூமன் அவர்கள் அவ்வாறு இல்லாமல் இருந்தபோதிலும், உரோமன் கத்தோலிக்க அருள்பணியாளராக அவரது தொடக்க வாழ்வு சில அதிருப்திகளைக் கொண்டிருந்தது. 1852ஆம் ஆண்டில் அயர்லாந்து நாட்டின் டப்ளினில் ஆரம்பிக்கப்பட்ட புதிய கத்தோலிக்க பல்கலைக்கழக்த்தின் முதல் தலைவராக நியமிக்கப்பட்டார். ஆயினும் அப்போது நிலவிய சூழ்நிலை காரணமாக, இவர் சொற்பொழிவுகள் ஆற்றுவதற்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டார். கோட்பாடு சார்ந்த காரியங்களில் பொதுநிலையினர் ஆலோசிக்கப்படுவது குறித்த இவரது கட்டுரைகளில் ஒன்று, கத்தோலிக்கத்திற்கு எதிரான கருத்து முரண்பாடு என உரோமைக்குப் புகார் செய்யப்பட்டது. இவர், ஆக்ஸ்ஃபோர்டில் கத்தோலிக்க மாணவர் விடுதி ஒன்றைத் தொடங்குவதற்கு முயற்சித்தார், ஆனால் அது அப்போதைய வெஸ்ட்மின்ஸ்டர் பேராயரின் எதிர்ப்பால் தடைபட்டது.  

இவ்வாறு பல்வேறு எதிர்ப்புக்களையும் தடைகளையும் எதிர்கொண்ட நியூமன், கோட்பாட்டில் நம்பிக்கையுடையவராக இருந்தாலும், திருத்தந்தையரின் தவறாவரம் குறித்த விளக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தார். 1879ஆம் ஆண்டில் திருத்தந்தை 13ம் லியோ அவர்கள், இவரை, உரோம் நகரிலுள்ள Velabroவின் புனித ஜார்ஜ் ஆலயத்தின் கர்தினால் தியோக்கோனாக நியமித்தார். இந்த ஆலயம் உரோம் வரலாறு தொடங்கிய இடத்தில் கட்டப்பட்டதாகச் சொல்லப்படுகிறது. கர்தினால் நியூமன், 1890ஆம் ஆண்டில் பிர்மிங்காமில் தன் 89ஆம் வயதில் இறைபதம் சேர்ந்தார். இறை ஊழியர் ஜான் ஹென்றி நியூமன் அவர்களிடம் வேண்டியதன் பலனாக புதுமைகள் நடைபெற்றதால், அவர், 2010ஆம் ஆண்டு செப்டம்பர் 19ம் தேதி அருளாளராகவும், 2019ஆம் ஆண்டு அக்டோபர் 13ம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் நிறைவேற்றிய திருப்பலியில் புனிதராகவும் அறிவிக்கப்பட்டார். இவரது திருநாள் அக்டோபர் 9ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது. இவர் புனிதராக அறிவிக்கப்பட்ட அதே திருப்பலியில் Mariam Thresia Chiramel Mankidiyan, Bartolomeu Fernandes dos Mártires, , Giuseppina Vannini, Dulce Lopes Pontes, Marguerite Bays ஆகியோரையும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் புனிதர்களாக அறிவித்தார்.

புனித ஜான் ஹென்றி நியூமன், சிறந்த கவிஞர்

புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்களைப் பற்றிய குறிப்புகள், அவரது மனநிலை மற்றும், பண்புகள் குறித்து எடுத்துரைக்கின்றன. இவர் மிகச் சிறந்த கவிஞர். ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையில் இவர் இருந்தபோது மிகவும் புகழ்பெற்ற கவிதைகளை எழுதியுள்ளார்.  1833ஆம் ஆண்டில் இவர் எழுதிய “Lead, kindly light” என்ற கவிதை மிகவும் புகழ்பெற்றது. இதனை அவர் Sardinia மற்றும், Corsicaவுக்கு இடையேயுள்ள கால்வாயில், அதாவது  Bonifacio கால்வாயில் காற்றின்றி அமைதியாக இருந்த சூழலில் எழுதியுள்ளார். 1865ஆம் ஆண்டில் எழுதிய The Dream of Gerontius இரங்கல் பாடலும் புகழ்பெற்ற பாடல்களில் ஒன்று. பக்தியுள்ள ஒருவரின் ஆன்மா, மரணப்படுக்கையிலிருந்து கடவுளின் இறுதித்தீர்ப்புக்குச் செல்லும் பயணத்தைப் பற்றியதாகும் இது. மேலும், “Praise to the holiest in the height” , “Firmly I believe and truly”  உட்பட இவர் எழுதிய சில பாடல்களும் புகழ்பெற்றவை. உரைநடை எழுதுவதில் தனது வரையறைகள் குறித்தும், உவமை மற்றும், ஒப்புவுவமையின் தேவை குறித்தும் இவர் உணர்ந்தே இருந்தார் எனச் சொல்லப்பட்டுள்ளது. இவரது மனம், அரிஸ்டாட்டில், டேவிட் ஹூயூம், ஆயர் ஜோசப் பட்லர் போன்றோரின் கருத்தியல்களின் தாக்கத்தைக் கொண்டிருந்தது எனச் சொல்லப்படுகிறது. இவரது கருத்தியல் சிந்தனைகளால் இவருக்குச் சிலரே நெருங்கிய நண்பர்களாக இருந்தனர். ஆயினும், புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்கள், இங்கிலாந்து ஆங்லிக்கன் கிறிஸ்தவ சபையிலும், உரோமன் கத்தோலிக்கத் திருஅவையிலும் மிகவும் செல்வாக்குமிக்கவராக விளங்குகிறார்.

2022 ஆம் ஆண்டு நவம்பர் 20, இஞ்ஞாயிறன்று திருஅவை, கிறிஸ்து அரசர் பெருவிழாவைச் சிறப்பித்தது. புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்கள் எழுதிய மிகச்சிறந்த படைப்புக்களில் ஒன்றான The Dream of Gerontius என்ற கவிதை, கிறிஸ்து அரசர் பற்றிச் சிந்திக்க உதவுகின்றது. இப்பெருவிழா ஞாயிறன்று, கிறிஸ்துவை இப்பிரபஞ்சத்தின் அரசராகப் போற்றும் திருஅவை, மற்ற உலக அரசர்கள் போல் இன்றி இயேசு உண்மையிலேயே நீதியும், பரிவிரக்கமும், வாக்குமாறாத என்றென்றும் நிலைத்திருக்கும் அன்பும் உள்ள அரசராக நமக்குக் காட்டுகின்றது. இறைத்தந்தையின் திருமகனாகிய கிறிஸ்து, உலகளாவிய அரசராக, எல்லா மக்களையும் நாடுகளையும் தீர்ப்பிடுவதற்கு மீண்டும் மகிமையில் வருவார்.  அதற்கு முன்னதாக, மரணவேளையில், அவர் ஒவ்வோர் ஆன்மாவையும் தீர்ப்பிடுவார், அவர்களின் இவ்வுலக வாழ்விற்கு ஏற்றவாறு வெகுமதியையோ அல்லது தண்டனையையோ தருவார் என திருஅவை நமக்குப் போதிக்கிறது. இந்த முதல் தீர்வைக்கு முன்நிகழ்வாக அல்லது, உலகளாவிய தீர்வைக்குத் ஒத்திகைபோன்று நியூமன் இந்தக் கவிதையை படைத்துள்ளார் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

புனித ஜான் ஹென்றி நியூமன்
புனித ஜான் ஹென்றி நியூமன்

The Dream of Gerontius என்ற கவிதையில், Gerontius என்பவர் இறக்கும்நிலையில் இருப்பதில் தொடங்கி, உடனடியாக, அவரது ஆன்மா அவரது காவல்தூதரோடு உரையாடுவதாக உள்ளது. இந்த உரையாடல், அவரது ஆன்மாவின் தீர்வை நேரத்தின் முன்நிகழ்வாக அமைந்துள்ளது. கிறிஸ்து, நீதியுள்ள மற்றும், இரக்கமுள்ள நீதிபதியாக இருக்கின்றபோதிலும், இறக்குமுன் இடம்பெறும் இந்த இறுதி தீர்வை குறித்து ஆன்மா, அச்சமுறுவது இயல்பு. எனினும், Gerontius ஓர் அமைதியை உணர்கிறார், அதனை அவரால் விவரிக்க முடியாது, மற்றும், அவரது காவல்தூதர் அதற்குரிய காரணத்தை அவரிடம் கூறுவார் என அக்கவிதை கூறுகிறது.

ஒருவர் இறக்கும்வேளையில் அவரது ஆன்மா, நம்பிக்கையின்மை மற்றும், அச்சமுறுமாறு சாத்தான் சோதிக்கும், ஆயினும், Gerontius என்பவர், தீயால் தூய்மைப்படுத்தப்படுவதை, அதாவது உத்தரிக்கிற நிலையை மகிழ்வோடு ஏற்கிறார்.  அந்நேரத்தில் ஐந்து வானதூதர் பாடகர் குழு கிறிஸ்து அரசரைப் போற்றிப் பாடுவது போன்று அவரது ஆன்மா உணர்ச்சி மிகுதியால் பாடும் என்று, அக்கவிதையில் கூறப்பட்டுள்ளது. விண்ணகத்தை முழுவதுமாக விவரிக்க இயலாதது போல், புனித பவுலடிகளார் மற்றும், இத்தாலிய கவிஞர் தாந்தே அல்கியெரி ஆகியோர் கூறியிருக்கின்றனர். ஆனால், நியூமன் இக்கவிதையில் விண்ணக அரியணைக்கு இன்னும் ஒரு படி உயர்வாகவே நம்மை அழைத்துச் செல்கிறார். அதாவது, Gerontiusன் ஆன்மா, ஓர் அன்புள்ள நீதிபதியாக கிறிஸ்துவின்முன் தோன்றுகிறது என்பதை கற்பனையாக கவிதையில் கூறியிருக்கிறார் நியூமன்.

எனவே புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்கள், இக்கவிதையில், அரசராம் கிறிஸ்து, அனைத்து வானதூதர்கள் மற்றும், புனிதர்களோடு கடவுளைப் போற்ற நம்மை அழைக்கிறார், நாம் அனைத்திலும் அவரது அன்பால் ஈர்க்கப்பட்டு, அனைத்திலும் அவருக்குப் பணிந்து நடக்கவேண்டும். உலக முடிவில் ஒவ்வொருவரையும் நடுத்தீர்க்க வருகின்ற, மிகவும் அன்புள்ள மற்றும்,   நீதியுள்ள அரசராக அவரை நோக்கவேண்டும். இதுவே நம் அரசரும், நீதிபதியும், அன்புள்ள மீட்பருமான இயேசுவை பற்றி நாம் கொண்டிருக்கும் எண்ணமாக இருக்கவேண்டும் எனச் சொல்லியுள்ளார். நாம் இந்த நவம்பர் மாதத்தில் இறந்த அனைவரையும் நினைத்து அவர்களுக்காகச் செபிக்கின்றோம். நம் இறப்பையும் நினைத்து வாழ்வைத் திருத்திக்கொள்ள முயற்சிக்கிறோம். கிறிஸ்து அரசர், இருளின் மத்தியில் ஒளிக்கு நம்மை இட்டுச்செல்வாராக.   

"The Pillar of the Cloud" என்று தலைப்பிடப்பட்ட தனது கவிதையிலும் புனித ஜான் ஹென்றி நியூமன் அவர்கள் இவ்வாறே ஆண்டவரிடம் இறைவேண்டல் செய்கிறார். இருளின் மத்தியில் ஒளிக்கு இட்டுச்செல், நீ என்னை வழிநடத்து! இரவு இருளாக உள்ளது, நான் வீட்டிலிருந்து வெகுதொலைவில் உள்ளேன், நீ என்னை வழிநடத்து!

கவியரசர் இரவீந்திரநாத் தாகூர், கீதாஞ்சலியில் என் வாழ்வில் கட்டுப்பாடு என்ற தலைப்பில் எழுதிய பாடல் இதோ...

இது என் வாழ்வின் வாழ்வைப் பற்றிய வரலாறு.

என் அங்கம் அனைத்தையும் புத்துயிர் அளிக்கும்,

உன்னுயிர்க் கரங்கள் தொடுவதை என்னிதயம் உணர்வதால்

ஓயாமல் முயல்கிறேன் எப்போதும்

என் உடம்பைத் தூயதாய் வைத்திருக்க!

ஆதி மூலக் காரணியான நித்திய ஒளியை எனது நெஞ்சில் தூண்டி விடும்

சத்திய நெறியே நீயென்று முக்தி பெற்ற நான்

உண்மைக்குப் புறம்பட்ட அனைத்தையும் எண்ணாமல் இருக்க எந்நாளும் முயல்வேன்.

இதயக் கோயிலின் உட்புறச் சன்னிதியில், நீ திருப்பீடம் அமைத்து ஆசனத்தில் இருப்பிடம் கொண்டுள்ளது நினைவில் இருப்பதால், உள்ளத்தைக் களங்கப்படுத்தும் தீவினை எல்லாம்

நெஞ்சத்தை நெருங்கவிடாமல் நீக்க முயல்வேன்,

பூக்கள் மேல் கொண்டுள்ள என் மோகத்தைக் குன்றாமல் வைத்துக்கொண்டு!

உனது பேராற்றல் இதுவரை எனக்கு ஊட்டியுள்ள மன உறுதியே

எப்போதும் என்னை இயக்கும் என்பது தென்பட்டு வருவதால்,

நன்னெறி முறைகளைக் கடைப்பிடித்துச் சிரமப்பட்டு முயல்வேன்,

நடத்தையின் மூலம் என்னை உனக்கு எடுத்துக்காட்ட!

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 நவம்பர் 2022, 17:54