வெள்ளத்தினால்  சேதமடைந்த வீடு. வெள்ளத்தினால் சேதமடைந்த வீடு.  

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவும் வியட்நாம் தலத்திருஅவை

வெப்ப மண்டல காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வியட்நாமில் உருவான திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மெரினா ராஜ்- வத்திக்கான்

வெப்பமண்டல காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக வியட்நாமில் ஏற்பட்ட, திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவால், அடிப்படை வாழ்வாதாரங்கள் அழிக்கப்பட்டு மக்கள் பெரிதும் துன்புறுகின்றனர் எனவும், பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான உடனடி உதவிகளை வியட்நாம் கத்தோலிக்க தலத்திரு அவைகள் செய்துவருகின்றன எனவும், அருள்பணியாளார்  Dominic Tran Ba Kha  அவர்கள் தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 14 ஆம் தேதி வெள்ளிக்கிழமை முதல், 16 ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை வரை வியட்நாமின் பல பகுதிகளில் ஏற்பட்ட கடுமையான வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகளின் விளைவுகள் குறித்துப் பேசுகையில் இவ்வாறு தெரிவித்துள்ளார் வியட்நாமின் சியா பங்கு அருள்பணியாளர்  Dominic Tran Ba Kha

பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் ஆற்றின் கரைப்பகுதி மற்றும் தாழ்வான நகர்ப்புறப்பகுதிகளில் வாழ்பவர்கள் எனவும், மக்களுக்கு தேவையான அடிப்படை உணவு நீர் போன்றவற்றை தன்னார்வலர்கள் உதவியுடன் கிறிஸ்தவர்கள் செய்துவருவதாகவும் தெரிவித்த அருள்பணியாளர்  Dominic,  வெள்ளத்தால் அதிகமாக சேதமடைந்த வீடுகளில் ஏறக்குறைய 200 வீடுகளை வியட்நாம்  காரித்தாஸ் அமைப்புடன் இணைந்து மீண்டும் கட்டவும், சரிசெய்யவும் திட்டமிட்டுள்ளதாகக் கூறியுள்ளார்.

கிறிஸ்தவர்கள் மட்டுமன்றி பிற சமய மக்களுக்கும் உதவிகளை செய்து வரும் அருள்பணியாளர் தோமினிக், பாதிக்கப்பட்ட மக்கள், அரிசியை உண்டு, மழை நீரைக் குடித்து உயிர்வாழ்கின்றனர் எனவும், தற்காலிகமாக படகுகளில் வசிக்கும் மக்கள் உணவினை சமைக்க எரிபொருளாக தங்கள் உடைகளை எரிக்கின்ற அவல நிலையில் வாழ்கின்றனர் எனவும் கவலை தெரிவித்துள்ளார்

10 பேர் உயிரிழப்பு, 1000 வாகனங்கள் சேதம், 25,000 க்கும் மேற்பட்ட வீடுகள் நீருக்குள் மூழ்கிய சூழல், 14,000 க்கும் மேற்பட்ட மக்கள் புலபெயர்தல், என பல்வேறு பாதிப்புக்களை ஏற்படுத்திய இவ்வெள்ளம், அக்டோபர் 19 மற்றும் 20 ஆம் தேதிகளில் NESAT புயலாக வலுப்பெற்று வியட்நாமில் கரையைக் கடக்கும் என தேசிய வானிலை முன்னறிவிப்பு மையம் தெரிவித்துள்ளது.

இவ்வாண்டில் மட்டும் வியட்நாம் ஏறக்குறைய 6 முறை புயல் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. (UCAN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2022, 13:34