உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தைத் தூண்களாக....
மெரினா ராஜ் -வத்திக்கான்
ஆசியத்தன்மைகளுடனும், உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தைத் தூண்களாகவும் கொண்டு ஆசியாவில் தலத்திருஅவையை உருவாக்கத் திருஅவை வலியுறுத்துவதாகப் பேரருள்திரு Indunil J Kodithuwakku அவர்கள் தெரிவித்துள்ளார்.
அக்டோபர் 12 ஆம் தேதி முதல் 30 ஆம் தேதி வரை தாய்லாந்தில் நடைபெற்று வரும் ஆசிய ஆயர் பேரவையை முன்னிட்டு, "வெளிப்படுத்தப்படும் உண்மைகள்" என்ற தலைப்பில் நடைபெற்ற கலந்துரையாடலில் பங்கேற்றுப் பேசியபோது இவ்வாறு தெரிவித்துள்ளார் வத்திக்கானின் பல்சமய உரையாடல் பேராயத்தின் செயலர் பேரருள்திரு Indunil J Kodithuwakku.
பன்முகத்தன்மை கொண்ட ஆசிய கண்டத்தில் அருள்பணியாளர் மற்றும் பொதுமக்களுக்கு இடையில் திறந்த வெளிப்படையான உரையாடல்களை உருவாக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை வலியுறுத்திப் பேசிய பேரருள்திரு Indunil J Kodithuwakku அவர்கள், உரையாடல் மற்றும் நல்லிணக்கத்தைத் தூண்களாகக் கொண்டு ஆசியத்தலத்திருஅவைகள் கட்டியெழுப்பப்பட வேண்டும், மற்றும் ஆசியத்தன்மைகளுடன் திகழவேண்டும் என திருஅவை எதிர்பார்ப்பதும் வலியுறுத்துவதும் இதுவே எனவும் எடுத்துரைத்துள்ளார்.
ஆசிய குடிபெயர்ந்தோர் மற்றும் புலம்பெயர்ந்தோர் நெருக்கடிகள், காலநிலை மாற்றம், அதன் விளைவுகள், ஒருங்கிணைந்த மனித வளர்ச்சி என்பன போன்ற பல கருத்துக்கள் கலந்துரையாடப்பட்டன.
ஆசிய ஆயர் பேரவையின் பொன்விழாவை முன்னிட்டு நடைபெறும் இப்பொதுப்பேரவை, ஆசிய மக்களாக ஒன்றிணைந்து பயணித்தல் என்பதனை தனது கருப்பொருளாகக் கொண்டு நடைபெற்று வருகின்றது.
உரையாடலை மேய்ப்புப்பணியின் முதன்மையாகக் கொண்டு செயல்பட ஆசியத்தலத்திரு அவையினர் ஒவ்வொருவரும் முயற்சிக்கவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளார் பேரருள்திரு Indunil .
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்