அரை நூற்றாண்டைக் கடந்த ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு
மெரினா ராஜ் - வத்திக்கான்.
ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் அரை நூற்றாண்டுச் செயல்பாடுகளைச் சீர்தூக்கிப் பார்க்கவும், தலத்திருஅவைகளில் எழும் புதிய சவால்களை அறியவும், இயேசுவின் முகத்தைத் தேடும் மேய்ப்புப்பணிப் பாதைகளைப் புதுப்பிக்கும் நோக்கத்துடனும் பாங்காங்கில், FABC என்னும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு, தன் 50வது ஆண்டு நிறைவு விழாவைத் தொடங்கியுள்ளது.
அக்டோபர் 12, இப்புதன்கிழமை முதல் 30ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை வரை தாய்லாந்தின் தலைநகர் பாங்காங்கில் நடைபெறும் 50வது ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பில் ஆசிய கண்டத்தின் 29 நாடுகளைச் சேர்ந்த ஏறக்குறைய 150 ஆயர்கள், 50க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள், சிறப்பு விருந்தினர்கள், வத்திக்கானின் சில பேராயங்களின் பிரதிநிதிகளும் கலந்துகொள்கிறார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 12, இப்புதன் மாலையில், மியான்மாரின் யாங்கூன் உயர்மறைமாவட்ட பேராயரும் FABC அமைப்பின் தலைவருமான கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்களின் சிறப்புத் திருப்பலியுடன் தொடங்கப்பட்டு, 30ஆம் தேதி காலை பாங்காங்கின் விண்ணேற்புப் பேராலயத்தில் திருப்பீட நற்செய்தி அறிவிப்புப்பணி பேராயத்தின் தலைவரான கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்களின் திருப்பலியுடன் இவ்விழாவானது நிறைவிற்கு வர இருக்கின்றது.
பல்சமய கலந்துரையாடல்கள், மக்களுடன் சந்திப்புக்கள், மற்றும் பொது வழிபாடுகளைக் கொண்ட இப்பேரவையில் இடம்பெறும் பாடல்கள், செபங்கள் அனைத்தும் பேரவை உறுப்பினர்கள் சார்ந்த நாட்டு மொழிகளில் இருக்கும் எனவும், பேரவை யூபிலி பாடல்கள் மற்றும் செபங்கள் பல்வேறு மொழிகளில் வெளியிடப்படும் எனவும் FABC அமைப்பு தெரிவித்துள்ளது.
இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் பலனாக உருவான FABC அமைப்பு, 2020ஆம் ஆண்டில் தன் 50ஆம் ஆண்டைக் கொண்டாடவேண்டிய நிலையில் பெருந்தொற்று பரவல் காரணமாக இவ்வாண்டு அக்டோபர் மாதம் கொண்டாடப்படுகின்றது எனவும், இப்பேரவையில் காணொளிக்காட்சி வழியாக ஆசியாவின் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த 14 பங்குப்பணித் தளங்களைச் சேர்ந்தவர்கள், தங்களது வாழ்வு, மேய்ப்புப்பணி போன்றவற்றை ஆயர்களிடம் பகிர்ந்து கொள்வார்கள் என்றும் தெரிவிக்கப்படுள்ளது.
ஆசியாவின் தெற்கு, தென் கிழக்கு, கிழக்கு மற்றும் மத்திய பகுதிகளின் உள்ள ஆயர்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்தவும் ஈடுபாட்டை அதிகரிக்கவும் மறைந்த கொரிய நாட்டுக் கர்தினால் Stephen Kim Sou-hwan அவர்களின் முயற்சியால், 1970ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இப்பேரவை பாங்காங்கை தலைமைச் செயலகமாகக் கொண்டு செயல்படுகின்றது.
ஆசிய ஆயர்கள் ஒருங்கிணைந்து முடிவுகளை எடுத்துச் செயல்படவேண்டும் என்பதை வலியுறுத்தும் திருத்தந்தை ஆறாம் பவுல் அவர்களும் தன்னுடைய 1970ஆம் ஆண்டு ஆசிய பயணத்தின்போது இப்பேரவையின் முதல் கூட்டத்தில் பங்கேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன் முதல் பொதுப் பேரவை தாய்பேயில் 1974ஆம் ஆண்டு நடைபெற்றது. ( FIDES )
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்