உரையாடலின்வழி வாழக் கற்றுக்கொள்ளவேண்டும் : கர்தினால் Hollerich
செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்
ஐரோப்பிய கத்தோலிக்கர் சிறுபான்மையினராக மாறிவரும் நிலையில், சிறிய சமூகங்களாக இருந்தாலும் ஒரு தனித்துவமான கிறிஸ்தவ அடையாளத்தைத் தொடர்வதற்கான வழிகளை ஆசியக் கத்தோலிக்கர்களிடமிருந்து கற்றுக்கொள்ளலாம் என்று, இயேசு சபை கர்தினால் Jean-Claude Hollerich அவர்கள் கூறியுள்ளார்.
அக்டோபர் 12-ஆம் தேதியிலிருந்து பாங்காக்கில் நடைபெற்றுவரும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் (FABC) பொதுப் பேரவையில் பங்கேற்றுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான Luxembourg நாட்டின் கர்தினால் Hollerich அவர்கள் நேர்காணல் ஒன்றில் இவ்வாறு கூறியுள்ளார்.
கலாச்சார ரீதியாக வேறுபட்ட சமூகத்துடன் இணக்கமாக வாழ வேண்டியதன் அவசியத்தைப் பற்றி மக்கள் பேசும்போது, ஆசியத் தலத்திருஅவையிலிருந்து திருஅவை கற்றுக்கொள்ள முடியும் என்று கூறியுள்ள கர்தினால் Hollerich அவர்கள், ஆசியத் தலத்திருஅவையினர் உரையாடலில் தெளிவான கிறிஸ்தவ அடையாளத்தை வெளிப்படுத்தி வாழ்கிறார்கள் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும், இன்று மக்கள் நல்லிணக்கத்தைப் பற்றி பேசும்போது, கலாச்சார மற்றும் மத வேறுபாடுகளுக்கு மத்தியில், கிறிஸ்தவ அடையாளத்தை எவ்வாறு தெளிவாக வாழ்வது என்பதை ஆசியத் திருஅவையிலிருந்து நாம் கற்றுக்கொள்ளலாம் என்றும் எடுத்துரைத்துள்ளார், கர்தினால் Hollerich.
ஐரோப்பாவில் உள்ள தலத்திருஅவையினரும், மதச்சார்பற்ற சூழலில் சிறுபான்மையினர் என்று சுட்டிக்காட்டியுள்ள கர்தினால் Hollerich அவர்கள், தங்களைச் சுற்றியுள்ள மதச்சார்பற்ற சமூகத்துடன் அவர்கள் உரையாலின் வழி வாழக் கற்றுக்கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார். (UCAN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்