தேடுதல்

ஆசிய ஆயர் பேரவை தாய்லாந்து ஆசிய ஆயர் பேரவை தாய்லாந்து 

ஆசிய ஆயர் பேரவை இரண்டாம் வார நிறைவு

ஆசிய ஆயர் பேரவை நிறையமர்வுக் கூட்டத்தின் இரண்டாம் வார நிறைவு நிகழ்வுகள் அக்டோபர் 21 இவ்வெள்ளிக்கிழமை இடம்பெற்றன.

மெரினா ராஜ் - வத்திக்கான்

திருஅவையின் ஆயர்பேரவை என்பது மக்கள் ஆலோசனைகளை இதயமாகவும், இயேசுவை, அவருடைய பணிகளை முதன்மையாகவும் கொண்டு செயல்படுவது என்று கூறியுள்ளார் கர்தினால்  Jean-Claude Hollerich.

அக்டோபர் 12 ஆம் தேதி தொடங்கப்பட்டு 30 ஆம் தேதி  வரை தாய்லாந்தில் நடைபெறும் ஆசிய ஆயர் பேரவை நிறையமர்வுக் கூட்டத்தின் இரண்டாம் வார நிறைவு நிகழ்வுகள் அக்டோபர் 21 இவ்வெள்ளிக்கிழமை நடைபெற்ற வேளையில் ஆயர்பேரவை மற்றும் அதன் பணிகள் பற்றி எடுத்துரைத்தபோது இவ்வாறு குறிப்பிட்டுள்ளார் இயேசு சபையைச் சேர்ந்தவரும்,16வது பொது ஆயர்பேரவையின் தலைவருமான கர்தினால் Jean-Claude  Hollerich.

ஒருங்கிணைந்த பயணத்தில் ஆயர்பேரவையின் பணி, தொடர் வளர்ச்சிக்கான தீர்மானங்கள் எடுக்கப்பட்ட  முறை, மற்றும் ஆயர்பேரவையில் அவர் ஆற்றும் பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார் கர்தினால் Hollerich.

இரண்டாம் வார கருப்பொருளான, காலத்தின் அறிகுறிகளைப் படித்தல் என்பதன் அடிப்படியில் நடைபெற்ற கலந்துரையாடல்களின் சுருக்கத்தை எடுத்துரைத்த அருள்பணியாளர் Clarence Devadass, வெற்றிகளைக் கொண்டாடுதல், தலைமுறை இடைவெளிகளை ஏற்றுக் கொள்ளுதல், புதிய பாதைகளைத் தேடுவதன் வழியாக வாய்ப்புக்களை அடையாளம் காணுதல் என்னும் மூன்றின் அடிப்படையில் அதனைத் தெளிவுபடுத்தினார். 

கிழக்கு ஆசியாவின் பிலிப்பீன்ஸ் மறைப்பணி நிறுவனத்தின் தலைமைத்துவம் மற்றும் நிர்வாகவியல்துறை   பேராசிரியர் Christina Kheng, ஒருங்கிணைந்த பயணிக்கும் திருஅவையில்  தலைமைத்துவம் மற்றும் நிர்வாகத்தின் புதிய வடிவங்கள், அவற்றை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் பற்றி எடுத்துரைத்தார்.

பிலிப்பீன்ஸ் கத்தோலிக்க ஆயர் பேரவை தலைவரான ஆயர் Pablo Virgilio Siongco David, தலைமைத்துவத்தின் புதிய வடிவங்கள் எவ்வாறு ஊக்குவிக்கப்படவேண்டும் என்பதை புனித பேதுருவின் வாழ்வு, பணி, வரலாறு போன்றவற்றின் வழியாக எடுத்துரைத்து, காலத்தின் அறிகுறிகளுக்கு பதிலளிக்கும் வகையில் விவிலியத்தில் வேரூன்றிய திருஅவையாக வாழ ஒவ்வொருவரும் முயற்சிக்க வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

மேலும்  திருத்தந்தையின் ஒருங்கிணைந்துப் பயணிக்கும் திருஅவை பற்றிய கருத்துக்கள் ஒரு சிறந்த பாதையை முன்னெடுப்பதற்கான வழிமுறைகளைத் தருகின்றன என்றும் எடுத்துரைத்து இரண்டாம் வார நிகழ்வுகளை நிறைவு செய்தனர் ஆயர்கள்.  

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

22 October 2022, 15:13