தேடுதல்

சக்கேயுவை இயேசு சந்தித்த காட்சி சக்கேயுவை இயேசு சந்தித்த காட்சி 

பொதுக் காலம் 31ம் ஞாயிறு : இயேசுவைப்போல் எல்லோரையும் ஏற்போம்!

நாம் வாழும் சமுதாயத்தில் பிரிவினைகளை விதைக்காமல், இயேசுவைப்போல வேறுபாடுகள் அகற்றி அனைவரையும் இறைத்தந்தையின் சாயலாக ஏற்போம்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்    I.  சாஞா 11: 22 - 12: 2    II.   2 தெச 1: 11 - 2: 2    III. லூக் 19: 1-10)

பொதுக் காலம் 31ம் ஞாயிறு மறையுரைச் சிந்தனை

வகுப்பறையில் பாடம் நடத்திகொண்டிருந்த ஆசிரியர், “யார்மீதாவது உங்களுக்கு  மன்னிக்க முடியாத கோபம் இருக்கிறதா என்றும், உங்களுக்குச் சந்தர்ப்பம் கிடைத்தால்,  நீங்கள் யாரையேனும் பழி வாங்கத் துடிக்கிறீர்களா,?' என்றும் தன் மாணவர்களிடம் கேட்டார். உடனே மாணவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் 'ஆமாம்... அய்யா' என்றார்கள். ஆசிரியருக்கு மிகுந்த வியப்பு, ஒவ்வொருவராக அழைத்து ''மன்னிக்கவும் மறக்கவும் முடியாத அளவுக்கு எத்தனை கோபங்கள் உள்ளன?'' என்று கேட்டார். ஒவ்வொருவரும் ஐந்து, பத்து என்று அடுக்கிக் கொண்டே சென்றார்கள். அப்போது, பழிவாங்கும் எண்ணம் தவிர்த்து, தவறு செய்பவர்களை எப்படி மன்னித்து ஏற்பது என்ற உண்மையை மாணவர்களுக்குப் புரியவைக்க நினைத்தார் ஆசிரியர். பின்னர் மாணவர்கள் ஒவ்வொரிடமும் ஒரு பையை கொடுத்தார், வகுப்பறைக்கு ஒரு கூடையில் தக்காளி கொண்டுவரப்பட்டது. யார்மீது எத்தனை முறை பழிவாங்கவேண்டும் என்ற எண்ணம் இருக்கிறதோ அத்தனை தக்காளிப்  பழங்களைத் தாங்கள் பையில் எடுத்துகொள்ளுமாறு அறிவுறுத்தினார் ஆசிரியர். இந்தத் தக்காளி பையை எப்போதும் உங்கள் கூடவே வைத்திருக்கவேண்டும் என்றும், தூங்கும் போது கூட அதை உங்கள் அருகிலேயே வைத்திருக்கவேண்டும் என்றும் கண்டிப்பான கட்டளையிட்டார். ஒன்றும் புரியாமல் தலையை ஆட்டினார்கள் மாணவர்கள். ஓரிரு நாள்கள் ஒரு குறையும் இல்லை. ஆனால், அடுத்தடுத்த நாள்களில் தக்காளிப் பழங்கள்  அழுகி நாற்றமெடுக்கத் தொடங்கின. இதனால், நாற்றம் அடிக்கும் பையுடன் வெளியே செல்ல மாணவர்கள் கூச்சப்பட்டனர். ஒரு கட்டத்தில் அவர்கள் ஆசிரியரிடம் சென்று, பைகளைத் தூக்கி எறிய அனுமதி கேட்டனர். மெள்ளப் புன்னகைத்த ஆசிரியர்  ''நாற்றமெடுக்கும் இந்தத் தக்காளிப் பழங்களைப்போலவே, உங்கள் பகைமை உணர்வும் பழி வாங்கும் குணமும் மனதுக்குள் அழுகி நாறிக் கொண்டிருக்கின்றன. ஆகவே, யாரிடம் பகைமையுணர்வுக் கொண்டிருக்கிறீர்களோ, அவர்களை முழுமனதுடன் மன்னித்து ஏற்றுக்கொள்வதாக இருந்தால், தக்காளிப் பழங்கள் உள்ள பையை தூக்கி எறியுங்கள்'' என்றார் ஆசிரியர்! அப்போதுதான் மாணவர்களுக்கு மனத் தெளிவு பிறந்தது. அந்நேரமே தக்காளிப் பைகளைக் குப்பைத் தொட்டியில் வீசிய மாணவர்கள், பகை மறந்து ஒருவரையருவர் ஆரத் தழுவி கொண்டு வகுப்பறைக்குத் திரும்பினர்.

இன்று நாம் பொதுக்காலத்தின் 31-ஆம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் அனைத்தும் நமது ஆண்டவர் இயேசுவைப் போல, நாமும் பிறரை ஏற்று, மன்னித்து, அன்பு செய்திடல் வேண்டும் என்ற உயரிய கருத்தை நம் உள்ளத்தில் நிறைக்கின்றன. இப்போது நற்செய்தி வாசகத்தை வாசித்து நமது தியானச் சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். இயேசு எரிகோவுக்குச் சென்று அந்நகர் வழியே போய்க் கொண்டிருந்தார். அங்கு சக்கேயு என்னும் பெயருடைய செல்வர் ஒருவர் இருந்தார். அவர் வரிதண்டுவோருக்குத் தலைவர். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்ததால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். இதைக் கண்ட யாவரும், “பாவியிடம் தங்கப்போயிருக்கிறாரே இவர்” என்று முணுமுணுத்தனர். சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார். இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில், இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

இயேசு கூறும் இந்த உவமைக்குள் செல்வதற்கு முன்பாக, பரிசேயர் மற்றும் வரிதண்டுவோர் குறித்து அறிந்துகொள்வோம். கடந்தவார ஞாயிறு நற்செய்தி வாசகத்தில் பரிசேயரும் வரிதண்டுபவரும் பற்றிய உவமையில், பரிசேயர்களின் போலித்தனமான மத நடவடிக்கைகளை இயேசு, தோலுரித்துக் காட்டினார் என்று கண்டோம். இன்றைய நற்செய்தி வாசகம், வரிதண்டுவோரான சக்கேயுவை இயேசு மன்னித்து ஏற்றுக்கொள்ளும் அவரின் மகத்துவத்தை நமக்குத் படம்பிடித்துக் காட்டுகிறது.  பரிசேயர்கள் மோசேயின் திருச்சட்டங்களைக் கடைப்பிடிப்பதில் உறுதியுடன் செயல்பட்டனர். வரிதண்டுவோர், சமாரியர், பிறஇனத்தவர், விலைமகளிர், நோயாளர்கள் ஆகியோரைப் பாவிகள் என்று பட்டியலிட்டு, அவர்களோடு உறவாடுவதை முற்றிலும் துண்டித்துக்கொண்டனர். மக்கள் அனைவரும் பரிசேயரை ரபி (குரு) என்று உயர்வாக அழைத்தார்கள். திருமுழுக்கு யோவானும், இயேசுவும் இறைவாக்கினர் அல்ல என்றே அதிகமான பரிசேயர்கள் எண்ணினர். இயேசுவின் பணிவாழ்வில் அவருடன் அதிகமான தர்க்கத்தில் ஈடுபட்டவர்கள் பரிசேயர்களே என்பதையும் நம் மனதில் நிறுத்துவோம். இப்போது வரிதண்டுபவர் என்பவர் யார்? என்ற கேள்விக்கு விடை தேடுவோம். இஸ்ரயேல் நாட்டை அடிமைபடுத்திய உரோமை அரசால் மக்களிடம் வரிவசூலிக்க நியமிக்கப்பட்ட யூதர்களே வரிதண்டுவோர் ஆவர். பிற இனத்தாராகிய உரோமையருக்காக வரி வசூலித்ததாலும், கூடுதலாக வசூலித்து மக்களை ஏமாற்றியதாலும், பணஆசை உடைவர்களாக இருந்தபடியாலும், திருச்சட்டங்களைக் கடைபிடிக்காததாலும், இவர்கள் பெரும் பாவிகளாகக் கருதப்பட்டு, யூதர்களால் வெறுத்து ஒதுக்கப்பட்டார்கள்.

இப்படிப்பட்ட நிலையில், யூதர்களின் தவறுகளை எடுத்துக்காட்டி, அவர்களை மீட்பதற்காகவே  இயேசு புதிய உடன்படிக்கையை அவர்களிடம் அறிவித்தார். ஆனால், யூதர்களோ, தாம் ஏற்கனவே மீட்கப்பட்டவர்கள் என்று எண்ணி, திருச்சட்டத்தின் சட்டங்களையும், சடங்குகளையும் ஆழமாகப் பற்றிக்கொண்டு வெளிவேடதாரிகளாக வாழ்ந்தார்கள். தங்கள் பாவங்களை அறியாமல், மற்றவர்களிடமும், இயேசுவிடமும் குற்றம் கண்டுபிடித்தார்கள். தங்களின் தற்பெருமையால், இயேசுவின் தாழ்மையில் தடுக்கி விழுந்தார்கள். அவர்கள் மனமாறவோ, இயேசுவின் மன்னிப்பைப் பெறவோ விரும்பி முன்வரவில்லை. ஆனால், வரிதண்டுபவர்கள் தங்கள் பாவங்களை அறிந்து, அவைகளை ஏற்றுக்கொண்டு இறைவனிடம் மன்னிப்பை வேண்டினர். இயேசுவின் மன்னிப்பைப் பெற்று, கடவுளுக்கு ஏற்புடையவராயினர்.

இதைத்தான் இயேசு மத்தேயுவை அழைத்த நிகழ்விலும் காண்கின்றோம். இயேசு அங்கிருந்து சென்ற போது மத்தேயு என்பவர் சுங்கச்சாவடியில் அமர்ந்திருந்ததைக் கண்டார்; அவரிடம், “என்னைப் பின்பற்றி வா” என்றார். அவரும் எழுந்து இயேசுவைப் பின்பற்றிச் சென்றார். பின்பு, அவருடைய வீட்டில் பந்தியில் அமர்ந்திருந்தபோது வரி தண்டுபவர்கள், பாவிகள் ஆகிய பலர் வந்து இயேசுவோடும் அவருடைய சீடரோடும் விருந்துண்டனர். இதைக் கண்ட பரிசேயர் அவருடைய சீடரிடம், “உங்கள் போதகர் வரிதண்டுபவர்களோடும் பாவிகளோடும் சேர்ந்து உண்பது ஏன்?” என்று கேட்டனர். இயேசு இதைக் கேட்டவுடன், “நோயற்றவர்க்கு அல்ல, நோயுற்றவர்க்கே மருத்துவர் தேவை. ‘பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்’ என்பதன் கருத்தை நீங்கள் போய்க் கற்றுக் கொள்ளுங்கள்; ஏனெனில், நேர்மையாளரை அல்ல, பாவிகளையே அழைக்க வந்தேன்” என்றார்.

இன்றைய நற்செய்தி வாசகத்தில் வரும், சக்கேயு இயேசுவைச் சந்திக்கும் நிகழ்வில் நான்கு படிநிலைகளைக் காண்கின்றோம். கடவுளுக்கு எதிரான தனது குற்றங்களை நினைவு கூறும் ஒரு பாவி அவரை அடைவதற்கான முயற்சியின் படிகளாக இவை அமைகின்றன. இங்கே சக்கேயுவின் சந்திப்பு முயற்சி, மகிழ்ச்சி, தன்னிலை ஏற்றல், இறையாசீர் பெறுதல் ஆகிய நான்கு நிலைகளில் இடம்பெறுவதைப் பார்க்கின்றோம். முதலாவதாக, இயேசுவை எப்படியாவது காணவேண்டும் என்று சக்கேயு ஆவல் கொள்கின்றார். இயேசு யார் என்று அவர் பார்க்க விரும்பினார்; மக்கள் திரளாய்க் கூடியிருந்தால் அவரைப் பார்க்க முடியவில்லை. ஏனெனில், சக்கேயு குட்டையாய் இருந்தார். அவர் முன்னே ஓடிப்போய், அவரைப் பார்ப்பதற்காக ஒரு காட்டு அத்தி மரத்தில் ஏறிக் கொண்டார். இயேசு அவ்வழியேதான் வரவிருந்தார். (வசனம் 3-4). இரண்டாவதாக சக்கேயுவிடம் வெளிப்படுவது மகிழ்ச்சி. இயேசு அந்த இடத்திற்கு வந்தவுடன், அண்ணாந்து பார்த்து அவரிடம், “சக்கேயு, விரைவாய் இறங்கிவாரும்; இன்று உமது வீட்டில் நான் தங்க வேண்டும்” என்றார். அவர் விரைவாய் இறங்கி வந்து மகிழ்ச்சியோடு அவரை வரவேற்றார். மூன்றாவதாக, தன்னிலை ஏற்றல். சக்கேயுவின் முயற்சியின் பயனாக இயேசு அவரோடு சென்று உணவருந்துகிறார். அப்போது சக்கேயு தன்னை ஏற்றுக்கொள்கிறார். சக்கேயு எழுந்து நின்று, “ஆண்டவரே, என் உடைமைகளில் பாதியை ஏழைகளுக்குக் கொடுத்துவிடுகிறேன்; எவர் மீதாவது பொய்க் குற்றம் சுமத்தி எதையாவது கவர்ந்திருந்தால் நான் அதை நான்கு மடங்காகத் திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று அவரிடம் கூறினார். நான்காவதாக, இறையாசீர் பெறுதல். இயேசு அவரை நோக்கி, “இன்று இந்த வீட்டிற்கு மீட்பு உண்டாயிற்று; ஏனெனில், இவரும் ஆபிரகாமின் மகனே! இழந்து போனதைத் தேடி மீட்கவே மானிடமகன் வந்திருக்கிறார்” என்று சொன்னார்.

மத்தேயுவை அழைத்தபோதும் சரி, சகேயுவை அழைத்தபோதும் சரி, இயேசு அவர்கள் வீட்டிற்குச் சென்று அவர்களோடு உணவருந்துவதைப் பார்க்கிறோம். குறிப்பாக மத்தேயுவுடன் இயேசு உணவருந்தும்போது மேலும் பல வரி தண்டுபவர்களும், பாவிகளும் அவரோடு பந்தியில் அமர்கின்றனர். அவ்வாறே காணாமல் போன மகன் உவமையிலும் பந்தி விருந்து பற்றி குறிப்பிடப்படுகிறது. ஆக, பாவிகளை ஏற்றுக்கொள்வது மகிழ்வின் விருந்துக்கு அடையாளமாக அமைகின்றது. இப்படிப்பட்டவர்களை வெறுத்ததின் காரணமாகவே பரிசேயர் பாவிகளுடனான இயேசுவின் மேசை உறவை கேள்விக்கு உட்படுத்துகின்றனர். ஆனால் இயேசு இதுகுறித்து சிறிதும் கவலைப்படாமல் அவர்களுடன் தனது அன்புறவை வலுப்படுத்துகின்றார். இதன் வழியாக அவர்களும் இறையாட்சியின் ஒரு அங்கம் என்பதை எடுத்துக்காட்டுகின்றார்.

இயேசு தனது பணிவாழ்வு முழுவதும் இப்படிப்பட்ட பாவிகளோடும் புறந்தள்ளப்பட்டரோடும் தனது உடனிருப்பை அதிகம் வெளிப்படுத்தினார் என்பதை மத்தேயுவை விட லூக்கா சற்று அதிகமாகவே வலியுறுத்தியுள்ளார். சிறப்பாக லூக்கா கூறும் காணாமல் போன மகன், பரிசேயரும், வரிதண்டுபவரும், நல்ல சமாரியர் ஆகிய உவமைகள் வழியாகவும், சக்கேயுவை சந்தித்தல் மற்றும் 10 தொழுநோயாளர்கள் நிகழ்வு வழியாகவும் எடுத்துக்காட்டுகிறார். இறைத்தந்தை இரக்கம் நிறைந்தவர் என்பதையும், நாம் எவ்வளவு பாவிகளாக இருந்தாலும் நம்மைத் தேடிவந்து வாஞ்சையோடு நம்மை வாரி அனைத்துக்கொள்ளக் கூடியவர் என்பதையும் எடுத்துக்காட்டுகின்றார். எனவேதான் உங்கள் விண்ணகத் தந்தை நிறைவுள்ளவராய் இருப்பது போல நீங்களும் நிறைவுள்ளவர்களாய் இருங்கள் (மத் 5:48) என்று மத்தேயு கூறினாலும், உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள் (லூக் 6:36) என்று லூக்கா இறைத்தந்தையின் இயல்பை கூடுதலாகக் காட்டுகின்றார்

ஆகவே, நாம் வாழும் சமுதாயத்தில் பிரிவினைகளை விதைக்காமல், இயேசுவைப்போல வேறுபாடுகள் அகற்றி அனைவரையும் இறைத்தந்தையின் சாயலாக ஏற்போம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2022, 09:19