தேடுதல்

அடிப்படைத் தேவைகளுக்காகக் காத்திருக்கும் இலங்கை மக்கள் அடிப்படைத் தேவைகளுக்காகக் காத்திருக்கும் இலங்கை மக்கள்  

தேவையில் இருக்கும் மக்களுக்கு உணர்வுப்பூர்வ உதவி

கிறிஸ்து பிறப்பு என்பது ஏழைகள், துன்புறுவோர், மற்றும் தேவையில் இருப்போரைக் குணப்படுத்தும் அருளின் நேரமாக மாற கத்தோலிக்கர் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும்.

மெரினா ராஜ் - வத்திக்கான்

இலங்கையில் தேவையில் இருப்போர், துன்புறுவோர், மற்றும் ஏழைகளுக்கு உணர்வுப்பூர்வமாக உதவிகளைச் செய்யக் கத்தோலிக்க மக்களை வலியுறுத்தி இலங்கை ஆயர் பேரவை அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

அக்டோபர் 28 வெள்ளிக்கிழமை இலங்கை கத்தோலிக்க ஆயர் பேரவையின் தலைவர் ஆயர் Harold Anthony Perera, மற்றும் செயலர் ஆயர் J.D. Anthony Jayakody அவர்கள் கையெழுத்திட்டு வெளியிட்டுள்ள அறிக்கையில் இவ்வாறுக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மக்களுக்கான உணவு, குழந்தைகளுக்கான பால் பொருட்கள், ஏழைகள் மற்றும் தேவையில் இருப்போருக்கு மருத்துவ உதவிகள் அளிக்கப்பட போதுமான நிதி ஒதுக்கப்பட வேண்டும் எனவும், கொண்டாடவிருக்கும் கிறிஸ்து பிறப்பு விழாவின்போது வெளிப்புறக் கொண்டாட்டங்களுக்கு செலவிடுவதைத் தவிர்த்து தேவையில் இருக்கும் மக்களின் உணர்வுடன் ஒன்றித்து ஒருவருக்கொருவர் உதவிகள் செய்யவேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது அவ்வறிக்கை.

1948 ஆம் ஆண்டு சுதந்திரம் அடைந்த இலங்கை தற்போது அதிகமானப் பொருளாதர நெருக்கடியைச் சந்தித்து வருகின்றது எனவும், அதிலும் கடந்த ஜூன் மாதம் முதல், மருந்துத்தட்டுப்பாட்டையும் சந்தித்து  வருகின்றது எனவும் குறிப்பிடப்பட்டுள்ள அவ்வறிக்கையில், கிறிஸ்து பிறப்பு என்பது  ஏழைகள், துன்புறுவோர், மற்றும் தேவையில் இருப்போரைக் குணப்படுத்தும் அருளின் நேரமாக  மாற கத்தோலிக்கர்கள் அனைவரும் இணைந்து முயற்சிக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

ஐக்கிய நாடுகளின் உலக உணவுத்திட்டம் மற்றும் உணவு வேளான் அமைப்புக்கள்  இலங்கையில் 63 இலட்சம் மக்கள் கடுமையான உணவுப் பற்றாக்குறையை சந்திக்க நேரிடும் என்றும் எச்சரித்துள்ளதாகவும், பல வருட பொருளாதார நெருக்கடி, தவறான நிர்வாகம், கோவிட் தொற்றுநோயின் தாக்கம், மற்றும் அந்நிய செலாவணி நெருக்கடி ஆகியவற்றால், எரிபொருள், உணவு, மருந்துகள் உள்ளிட்ட அத்தியாவசிய இறக்குமதிகளுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும்  குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் பொருளாதாரம் வீழ்ச்சியடைந்துள்ளதுடன், அத்தியாவசியப் பொருட்களை இறக்குமதி செய்வதற்கு தேவையான பணமில்லாமல் தவித்துள்ளதாக உலக உணவுத் திட்டத்தின் இலங்கைக்கான இயக்குனர் அப்துர் ரஹீம் அவர்கள் தெரிவித்துள்ளார். (ucan )

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2022, 13:32