தேடுதல்

இறையடியார்கள் கரோலினா சாந்தோகனாலே, மரிய தொமேனிக்கா மாந்தோவானி ஆகியோர் வத்திக்கானில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட நாளில்.... இறையடியார்கள் கரோலினா சாந்தோகனாலே, மரிய தொமேனிக்கா மாந்தோவானி ஆகியோர் வத்திக்கானில் புனிதர்களாக அறிவிக்கப்பட்ட நாளில்.... 

வழிசொல்லும் ஒளிச்சுடர் : எல்லாருக்கும் எல்லாமுமான புனிதர்கள்

மனிதன் கடவுளிடமிருந்து பிரிந்துவிட்டால் நடைபிணமாவான். நம் வாழ்வு அவரை மட்டுமே சார்ந்திருப்பதால் நாம் அவரோடு இணைக்கப்பட்டிருக்கவேண்டும்.

மேரி தெரேசா: வத்திக்கான்

கடவுள் மீனைப் படைக்க நினைத்தபோது கடலிடம் பேசினார். அவர் மரங்களைப் படைக்க நினைத்தபோது பூமியிடம் பேசினார். மனிதனைப் படைக்க அவர் நினைத்தபோது தம்மிடமே திரும்பினார். அப்போது அவர், மானிடரை நம் உருவிலும் நம் சாயலிலும் உண்டாக்குவோம் (தொ.நூ.1,26) என்று சொன்னார். ஒரு மீனை நீரிலிருந்து எடுத்துவிட்டால் அது இறந்துவிடும். ஒரு மரத்தை மண்ணிலிருந்து பெயர்த்தெடுத்துவிட்டால் அதுவும் இறந்துவிடும். அதேபோல், மனிதனும் கடவுளிடமிருந்து பிரிந்துவிட்டால் அவனும் நடைபிணமாவான். கடவுள் நம் இயற்கைச் சுற்றுச்சூழல். நாம் அவரது பிரசன்னத்தில் வாழ படைக்கப்பட்டிருக்கிறோம். நம் வாழ்வு அவரை மட்டுமே சார்ந்திருப்பதால் நாம் அவரோடு இணைக்கப்பட்டிருக்கவேண்டும். எனவே நாம் அவரோடு இணைந்திருப்போம். மேலும், மீன் இல்லாத தண்ணீர், தண்ணீராகவே இருக்கும், ஆனால் தண்ணீர் இல்லாத மீன் ஒன்றுமே இல்லை. ஒரு மரம் இல்லாத மண், மண்ணாகவே இருக்கும். ஆனால் மண் இல்லாத மரம் ஒன்றுமே இல்லை. அதேபோல், மனிதர் இல்லாத கடவுள் கடவுளாகவே இருப்பார், ஆனால், கடவுளோடு இணைந்திராத, மற்றும், அவரைக் கொண்டிராத மனிதர் ஒன்றுமே இல்லை. I Love This Analogy என்ற தலைப்பில் வாட்சப் ஊடகத்தில் ஒருவர் பகிர்ந்துகொண்ட தகவல் இது.

புனித கரோலினா சாந்தோகனாலே

கடவுளோடு ஒன்றித்து வாழ்வதன் பயனை அறிந்தவர்கள் புனிதர்கள். வாழ்வில் கடவுள் இல்லையென்றால், நீரிலிருந்து வெளியேற்றப்பட்ட மீன்போல் துடிதுடித்து மடிவோம் என்பதை உணர்ந்தவர்கள் புனிதர்கள். புனித அன்னை தெரேசா கூறியது போல, இறக்கத்தான் பிறந்தோம், இரக்கத்தோடு வாழ்வோம் என்பதற்கேற்ப வாழ்ந்தவர்கள் புனிதர்கள். இவ்வாறு வாழ்ந்தவரில் ஒருவர்தான் கரோலினா சாந்தோகனாலே(Carolina Santocanale). இவரை திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் 2022ஆம் ஆண்டு மே மாதம் 15ம் தேதி, வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் புனிதராக அறிவித்தார். கரோலினா கொன்செத்தா ஆஞ்சலா சாந்தோகனாலே (Carolina Concetta Angela Santocanale) அவர்கள், 1852ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2ம் தேதி இத்தாலியின் பலேர்மோ நகரில் பிரபுத்துவ குடும்பத்தில் பிறந்தவர். இவரது தந்தை ஜூசப்பே ஒரு வழக்கறிஞர். எட்டு வயதில் புதுநன்மை வாங்கிய கரோலினா, இரு அருள்சகோதரிகள் நடத்திய பள்ளியில் ஆரம்பக் கல்வியை முடித்தார். அக்காலக்கட்டத்தில் வேறு இரு ஆசிரியர்கள் இவருக்கு இலக்கியம், இசை மற்றும் பிரெஞ்சு மொழியைக் கற்றுக்கொடுத்தனர். 1861ஆம் ஆண்டில் பள்ளிக்குச் செல்வதை நிறுத்திய கரோலினாவுக்கு, வீட்டிற்கே வந்து பாடம் கற்றுக்கொடுத்த ஆசிரியர்கள், பள்ளிப்பாடம் தவிர வேறு எதனையும் கற்றுக்கொடுக்கவில்லை.

கரோலினாவுக்கு 19 வயது நடக்கையில், இறக்கும்நிலையில் இருந்த அவரது தாத்தா, கரோலினாவை அவரது படுக்கைக்கு அருகில் அழைத்தார். அவர் தாத்தாவின் அருகில் சென்ற சிறிது நேரத்திற்குள் தாத்தா இறைபதம் சேர்ந்தார். ஆயினும் அந்நேரத்தில் கரோலினா சந்தித்த Mauro Venuti என்பவர், அவருக்கு ஆன்ம வழிகாட்டியாக மாறினார். அதேநேரம் இளம் பெண்ணான கரோலினாவுக்கு திருமணத்திற்கும் ஏற்பாடுகள் நடந்தன. ஆயினும், துறவு வாழ்வுக்கு தான் அழைக்கப்படுவதை உணர்ந்தார் கரோலினா. நான்கு சுவர்களுக்குள் எப்போதும் வாழ்கின்ற ஆழ்நிலை தியான சபைக்குச் செல்வதா அல்லது ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் பணியாற்றும் சபையைத் தேர்ந்துகொள்வதா என்பதில் சற்றுத் திணறினார் அவர். இறுதியில் அவர் தனது 21வது வயதில், பலேர்மோவில் புனித அந்தோனியார் பங்குத்தளத்தில் மரியின் புதல்வியர் பக்த சபையின் தலைவராக இருப்பதற்கு இசைவு தெரிவித்தார். அச்சபையின் தலைவராகப் பணியாற்றிய காலக்கட்டத்தில் ஒரு நோயால் தாக்கப்பட்டு, 16 மாதங்கள் அந்நோயினால் கடும் வேதனையை எதிர்கொண்டார். எனினும், 1887ஆம் ஆண்டில் அந்நோயிலிருந்து குணமடைந்த கரோலினா சாந்தோகனாலே அவர்கள், ஆழ்நிலை தியானம், ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் பணியாற்றுதல் ஆகிய இரண்டையும் ஒன்றிணைக்க விரும்பி, பிரான்சிஸ்கன் பொதுநிலை Secular சபையில் சேர்ந்தார். அவ்வாண்டில் அச்சபையை திருத்தந்தை 13ம் லியோ அவர்கள் அங்கீகரித்திருந்ததும் கரோலினா அச்சபையில் சேர்வதற்கு ஒரு காரணம். 1887ஆம் ஆண்டு ஜூன் மாதம் 13ம் தேதி பிரான்சிஸ்கன் சபையின் துறவு உடையைப் பெற்று, "இயேசுவின் மரியா" என்ற புதுப் பெயரையும் அவர் ஏற்றார். 

இயேசுவின் மரியா என்ற துறவறப் பெயரை ஏற்ற அருள்சகோதரி கரோலினா, பலேர்மோ நகரெங்கும் வீடு வீடாய்ச் சென்று ஏழைகளுக்கும் நோயாளிகளுக்கும் உதவினார், மற்றும், பொருளுதவிகளும் செய்தார். இதே பணிக்காக பிரான்சிஸ்கன் சபையில் ஒரு கிளை சபையைத் தொடங்க விரும்பினார் அவர். 1909ஆம் ஆண்டு டிசம்பர் 8ம் தேதியன்று, லூர்தின் அமலமரி கப்புச்சின் அருள்சகோதரிகள் என்ற ஒரு சபையை உருவாக்கினார், கரோலினா. இத்துறவு சபை, 1923ஆம் ஆண்டு சனவரி மாதம் 24ம் தேதி மறைமாவட்ட உரிமை பெற்ற ஒரு சபையாக, பலேர்மோ பேராயர் Alessandro Lualdi அவர்களால் அங்கீகரிக்கப்பட்டது. இச்சபை இவ்வாறு அங்கீகரிக்கப்பட்ட ஒரு வாரத்திற்குள்ளாகவே கரோலினா சாந்தோகனாலே அவர்கள் இறைவனடி சேர்ந்தார். 1947ஆம் ஆண்டில் இச்சபை திருத்தந்தை 12ம் பயஸ் அவர்களால், பாப்பிறையின் ஒப்புதல் பெற்ற சபையாக மாறியது. 1968ஆம் ஆண்டில் திருத்தந்தை புனித 6ம் பவுல் அவர்கள், இச்சபையின் பணிகளைப் பாராட்டி ஆணை ஒன்றையும் வெளியிட்டார். புனித கரோலினா சாந்தோகனாலே அவர்களின் பரிந்துரையால் நடைபெற்ற புதுமைகளால் அவர் முதலில் அருளாளராகவும், பின்னர் புனிதராகவும் அறிவிக்கப்பட்டுள்ளார்.    

புனித மரிய தொமேனிக்கா மாந்தோவானி (Maria Domenica Mantovani)

“எல்லாருக்கும் எல்லாமுமாக” இருந்த ஓர் அன்னை எனப் போற்றப்படும் புனித மரிய தொமேனிக்கா மாந்தோவானி அவர்கள், இத்தாலியின் வெரோனாப் பகுதியின் புகழுக்குரிய மகள், நாசரேத்து திருக்குடும்பத்தின் ஆன்மிகத்தால் உள்தூண்டுதல் பெற்றவர், மற்றும், ஏழைகளின் தேவைகள் மீது மிக அதிகமாக அக்கறை காட்டியவர். எல்லாச் சூழல்களிலும் கடவுளின் திட்டத்திற்குப் பணிந்து நடந்தவர், இவர் தனது புனிதத்துவத்தால் ஒவ்வொரு கிறிஸ்தவர்க்கும் எத்துணை சிறப்பான முன்மாதிரிகையாய் விளங்குகிறார்

இவ்வாறு திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், அன்னை மரிய தொமேனிக்கா மாந்தோவானி அவர்களை அருளாளராக அறிவித்த திருப்பலியில் அவ்வன்னை பற்றிக் கூறியுள்ளார். இவ்வன்னை, இறைவேண்டல் மற்றும், அமல அன்னை மீதுள்ள அன்பில் வளர்ந்தவர். இவர், 1862ஆம் ஆண்டு நவம்பர் 12ம் தேதி இத்தாலியில் ஒரு சிறிய ஊரில் பிறந்தார். இளம் வயதிலேயே செபத்திலும் பக்தியிலும் வளர்ந்த இவர், மறைக்கல்விப் போதனை, நோயாளிகள் சந்திப்பு ஆகியவற்றால் மற்றவருக்குப் பணியாற்றியவர். புனித கன்னி மரியா, இவரது வாழ்வு முழுவதும் நிரம்பியிருந்தார். மரியாவின் தாய்மைப் பண்பை அனைவருக்கும் எடுத்துச்சொல்வதில் ஆர்வம் கொண்டிருந்த இவர், 1886ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 8ம் தேதி அமல அன்னையின் திருவுருவத்தின் முன்பாக உருக்கமுடன் செபித்தார். அந்நேரத்தில் கடவுளுக்கு, தான் என்றென்றும் அர்ப்பணிக்கப்பட்ட கன்னியாகவே இருப்பேன் என உறுதியளித்தார். இறைவேண்டல் மற்றும், சேவை மீது இவர் கொண்டிருந்த ஆர்வத்தைப் பார்த்த இவரது ஆன்ம குருவான அருளாளர் Giuseppe Nascimbeni அவர்கள், திருக்குடும்பத்தின் சிறிய அருள்சகோதரிகள் என்ற பெயரில் ஒரு சபையை உருவாக்கி, மரியா தொமேனிக்காவை அதன் இணை நிறுவனராகவும், முதல் தலைமை அன்னையாகவும் நியமித்தார். அதற்குப்பின்பு மரியா தொமேனிக்கா, “அன்னை அமலமரியின் மரியா” என்று அழைக்கப்படலானார்.

இறக்கும்வரை ஓர் அன்னையாக...

கடவுளின் மிகப்பெரிய மற்றும், பேருண்மையான திட்டத்திற்கு திருக்குடும்பம் என்னை இணை நிறுவனராக ஆக்கியது. குறைவான மதிப்புடைய மற்றும், அதிகம் அறியப்படாத என்னை, மாபெரும் செயல்கள் ஆற்ற கடவுள் தேர்ந்துகொண்டார். இந்த சபை கடவுளின் வேலையாகும், அதனால் அவரால் வழிநடத்தப்பட நான் அமைதியாக இருக்கிறேன். இவ்வாறு கூறியவர் அன்னை மரியா. இவர் எப்போதும் சிறியவராக, பாசமும் அமைதியும் நிறைந்தவராக விளங்கினார். இவர் 1934ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 2ம் தேதி இறைபதம் சேர்ந்தார். இவர் தலைமை வகித்த அச்சபை இன்று ஏறத்தாழ 1,200 உறுப்பினர்களைக் கொண்டு, உலகில் 150 துறவுக் குழுமங்களில், ஏழைகள், நோயாளிகள், வயதுமுதிர்ந்தோர் மற்றும், தேவையில் இருப்போருக்குப் பணியாற்றி வருகின்றது. அன்னை மரிய தொமேனிக்கா மாந்தோவானி அவர்களின் பரிந்துரையால் புதுமைகள் நடைபெற்றுள்ளன.

அன்னையரும் குழந்தைகளும்

1999ஆம் ஆண்டில் அர்ஜென்டீனா நாட்டின் Bahía Blanca என்ற ஊரில் பிறந்த குழந்தை லாரா பாஸ்காலின் தாய் களைப்பால் அயர்ந்து தூங்கியதால் அக்குழந்தை தரையில் விழுந்து மண்டை ஓட்டில் விரிசல் ஏற்பட்டது. அதனால் அக்குழந்தை பெருமூளையில் இரத்தப்பெருக்கால் அதிகமாகத் துன்புற்றது. மருத்துவர்கள் செய்வதறியாது திகைத்தனர். அருள்சகோதரி Lisantonia Perin அவர்கள், தங்கள் சபையின் இணை நிறுவனரின் துறவு உடையின் ஒரு சிறு பகுதியை அக்குழந்தையின் மீது வைத்து, அதன் பெற்றோருடன் சேர்ந்து செபித்தார். மூன்று நாள்கள் சென்று, குழந்தை லாரா, தனது தலைக்காயங்களிலிருந்து முழுவதும் குணமானாள். பின்னர் நான்கு ஆண்டுகள் சென்று, அக்குழந்தை உரோம் நகருக்கு வந்து தனக்கு குணமளித்தவர் அருளாளராக உயர்த்தப்படும் நிகழ்வில் கலந்துகொண்டார்.

இரண்டாவது புதுமை

2011ஆம் ஆண்டில், அர்ஜென்டீனாவில் லாரா குணமடைந்த அதே ஊரில், அன்னை மரிய தொமேனிக்கா மாந்தோவானி அவர்களின் பரிந்துரையால் Maria Candela Calabrese Salgado என்பவர் குணமடைந்துள்ளார். பிறவியிலேயே முதுகுத்தண்டு சரியான முறையில் அமையாததால் Maria Candela சக்கர நாற்காலியிலேயே வாழவேண்டியிருந்தது. ஒருநாள் காலையில் அச்சிறுமியின் கால்கள் மரத்துப்போயின. இரத்த ஓட்டம் இல்லாததால் கால் கறுப்பாகிவிட்டது. அவள் உடனடியாக மருத்துவமனைக்கு எடுத்துச்செல்லப்பட்டாள். பெருமூளையில் இரத்தப்பெருக்கு ஏற்பட்டது. அச்சிறுமி உடனே கோமா நிலைக்குச் சென்றுவிட்டாள். அவளது காலை எடுத்துவிடவேண்டிய நிலை உருவானது. அச்சமயத்தில், 1999ஆம் ஆண்டில், தன் மகள் லாரா அற்புதமாய் குணம்பெற்றதை நினைவுகூர்ந்த Rosana Margarita என்பவர், தனது மகளுக்குக் குணமளித்த அதே புனிதரின் திருப்பொருளைக் கொண்டுவந்து Maria Candelaவின் தலையணைக்கு அடியில் வைத்தார். மூன்று நாள்கள் சென்று, Maria Candela, தனது நரம்புப் பிரச்சனையிலிருந்து முழுவதும் குணடைந்தாள்.

ஒரு தாயின் இதயத்தோடு தன் வாழ்வை வாழ்ந்த புனித Maria Domenica Mantovani அவர்கள், பல்வேறு நிலைகளிலுள்ள அன்னையர்க்கு உதவி வருகிறார். தன்னலமற்ற தாயாக தன்னை அண்டிவரும் தாய்களுக்கு கடவுளின் இரக்கத்தைப் பெற்றுத் தருகிறார் என சந்தேகமின்றிக் கூறலாம். இப்புனிதர், எல்லாருக்கும் எல்லாமுமாக இருந்த ஓர் அன்னையாவார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2022, 08:54