தேடுதல்

‘உளம் நைந்தோரைக் காக்கும் கடவுள்!’ ‘உளம் நைந்தோரைக் காக்கும் கடவுள்!’  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 34-6 உளம் நைந்தோரைக்காக்கும் கடவுள்

உள்ளம் உடைந்தோர், நைந்த நெஞ்சத்தார், நேர்மையாளர்களாகிய நீதிமான்கள் ஆகிய அனைவரும் துன்புறுத்தப்பட்டாலும், கடவுளால் கைவிடப்படுவதில்லை.
திருப்பாடல் 34-6- உளம் நைந்தோரைக் காக்கும் கடவுள்!

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், ‘தீமை செய்வோரை வெறுக்கும் கடவுள்!' என்ற தலைப்பில் திருப்பாடல் 34-இல் 15 முதல் 17 வரை உள்ள இறைவசனங்கள்  குறித்துத் தியானித்தோம். இவ்வார விவிலியத் தேடலில் அதனைத் தொடர்ந்து வரும் 18 முதல் 20 வரையுள்ள இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை வாசிக்கக் கேட்போம். உடைந்த உள்ளத்தார்க்கு அருகில் ஆண்டவர் இருக்கின்றார்; நைந்த நெஞ்சத்தாரை அவர் காப்பாற்றுகின்றார். நேர்மையாளருக்கு நேரிடும் தீங்குகள் பல; அவை அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார். அவர்களின் எலும்புகளை எல்லாம் அவர் பாதுகாக்கின்றார்; அவற்றுள் ஒன்றும் முறிவுபடாது (வசனங்கள் 18-20).

மேற்கண்ட இறைவசனங்களில் இரண்டு காரியங்களைக் குறித்து பேசுகிறார் தாவீது அரசர். முதலாவது, உடைந்த உள்ளத்தாரையும், நைந்த நெஞ்சத்தாரையும் கடவுள் காப்பாற்றுகிறார் என்கின்றார். இரண்டாவதாக, நேர்மையாளருக்கு ஏற்படும் தீங்குகள் அனைத்தினின்றும் ஆண்டவர் அவர்களை விடுவிக்கின்றார் என்கின்றார். இப்போது முதல் வகையினராகத் தாவீது எடுத்துக்காட்டும் உடைந்த உள்ளத்தாரையும், நைந்த நெஞ்சத்தாரையும் குறித்து சற்று ஆழமாகச் சிந்திப்போம். சவுல் மன்னரால் நாட்டைவிட்டு வெளிய துரத்தப்பட்ட தாவீது, எண்ணிலடங்காதத் துயரங்களை அனுபவித்தார். அவர் மட்டுமன்றி, சவுலின் தீய எண்ணங்களால் நாட்டில் பலரும் துயரத்திற்கு உள்ளாகினர். அதனால்தான், துயருற்று வாழ்ந்து கொண்டிருந்த மக்களில், ஒடுக்கப்பட்ட ஏழைகள் மற்றும் நலிந்தோர் பலர் தாவீதிடம் தஞ்சம் அடைந்ததாக சாமுவேல் முதல் நூல் எடுத்துக்காட்டுகிறது. தாவீது அங்கிருந்து புறப்பட்டு அதுல்லாம் என்ற குகைக்குத் தப்பியோடினார்; அவருடைய சகோதரரும், அவர் தந்தை வீட்டாரும் இதைக் கேள்வியுற்று அங்கு அவரிடம் சென்றனர். ஒடுக்கப்பட்டோர், கடன்பட்டோர், சோர்வுற்றோர், யாவரும் அவரிடம் ஒன்று திரண்டனர்; அவர்களுக்கு அவர் தலைவரானார். இவ்வாறு, அவரோடு சுமார் நானூறு பேர் இருந்தனர் (1 சமு 22:1-2).

தாவீதின் வழிமரபிலே உதித்த நமதாண்டவர் இயேசுவும், தனது பணிவாழ்வு முழுதும் உடைந்த உள்ளத்தாரையும், நைந்த நெஞ்சத்தாரையும் தேற்றி அவர்கள் அனைவரையும் இறைத்தந்தையின் மக்களாக்குகின்றார். “ஏழைகளே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், இறையாட்சி உங்களுக்கு உரியதே. இப்பொழுது  பட்டினியாய் இருப்போரே, நீங்கள் பேறு பெற்றோர்; ஏனெனில், நீங்கள் நிறைவு பெறுவீர்கள். இப்பொழுது அழுதுகொண்டிருப்போரே, நீங்கள் பேறுபெற்றோர்; ஏனெனில், நீங்கள் சிரித்து மகிழ்வீர்கள். மானிடமகன் பொருட்டு மக்கள் உங்களை வெறுத்து, ஒதுக்கிவைத்து, நீங்கள் பொல்லாதவர் என்று இகழ்ந்து தள்ளிவிடும்போது நீங்கள் பேறுபெற்றோர். அந்நாளில் துள்ளி மகிழ்ந்து கொண்டாடுங்கள்; ஏனெனில், விண்ணுலகில் உங்களுக்குக் கிடைக்கும் கைம்மாறு மிகுதியாகும் (லூக் 6: 20-23).

இரண்டாவதாக, நேர்மையாளருக்கு ஏற்படும் அனைத்துத் தீங்குகளிலிருந்தும் ஆண்டவர் அவர்களைக் காப்பாற்றுவார் என்ற தாவீதின் வார்த்தைகள் குறித்துச் சிந்திப்போம். இலங்கையின் சிறிய கிராமம் ஒன்றில் பிறந்து, தமிழ் மக்களின் விடுதலைக்காகத் தனது வாழ்வு முழவதையும் அர்பணித்தவர் டேவிட் ஐயா என அழைக்கப்படும் சொலமன் அருளானந்தம் டேவிட். ஆஸ்திரேலியா, வட ஆபிரிக்கா, பிரித்தானியா என்றெல்லாம் சுகபோக வாழ்கை கிடைத்திருந்தும் கூட, அங்கெல்லாம் தான் உழைத்து சேமித்த பணத்தை கொண்டு இலங்கை வந்து டாக்டர் இராஜசுந்தரம் அவர்களுடன் இணைந்து காந்தீயம் என்ற அமைப்பை உருவாக்கினார். வடகிழக்கில் குடியேற்றத்திற்கு எதிராக இரத்தம் சிந்தாத யுத்தம் ஒன்றை புரிந்தார். காந்தியத்தினூடாக மலையக பகுதிகளிலிருந்த தமிழ் மக்களை முல்லைத்தீவு கிளிநொச்சி மன்னார் வவுனியா ஆகிய மாவட்டங்களின் எல்லை பகுதிகளில் குடியேற்றினார். இந்தக் குடியேற்றங்கள் மட்டும் டேவிட் ஐயா அவர்களால் மேற்கொள்ளப்பட்டிருக்காமல் இருந்திருந்தால், இன்று வன்னியின் மக்கள் தொகை மிகவும் குறைவாகவே இருந்திருக்கும். இவருடைய பெரும் முயற்சியினாலேயே இங்குத் தமிழ் மக்களின் எண்ணிக்கை அதிகளவாக இருந்தது. இதன்காரணமாகவே சிங்கள அரசு இப்பகுதிகளை மிகவும் மூர்கத்தனமாகத் தாக்கி தமிழர்களைக் கொன்றொழித்தது. இவர் மாபெரும் இறைவாக்கினர் என்றே தமிழ் மக்களால் போற்றப்படுகிறார். டேவிட் ஐயா என்னும் இந்த நேர்மையாளர் தமிழ் மக்களின் நல்வாழ்விற்காக உழைத்தமைக்காக இவர் அனுபவித்த கொடுமைகளும் துயரங்களும் ஏராளம்! சிங்கள பேரினவாதத்தின் அட்டூழியச் செயல்களையும் தவறுகளையும் தட்டிக்கேட்டமைக்காக டேவிட் ஐயா, 02.08.1985 அன்று இரவு 10.30 மணியளவில் அண்ணாநகர் பேருந்துநிலையத்தின் பின்னால் வைத்து 4 இளைஞர்களால் அடித்து நொறுக்கப்பட்டு அரைப்பிணமாகத் தூக்கிவீசப்பட்டார். இக்கடத்தல் தன்மீது மேற்கொள்ளப்பட்ட கொலை முயற்சி என தனது Tamil Eelam Freedom Struggle (An inside Story) எனும் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் டேவிட் ஐயா. தெருவோரத்தில் குற்றுயிரும் கொலையுயிருமாக வீசி எறியப்பட்ட இவர், அவ்வழியே மிதிவண்டியில் வந்த நல்மனம் படைத்த ஒருவரால் காப்பாற்றப்பட்டார். தமிழ் மக்களின் நியாயமான போராட்டத்தை நியாயமான வழியில் வெல்லவேண்டுமென விரும்பினார் இவர். சிங்கள அரசால், இத்தகைய உண்மைப் போராளிகளின் கனவுகள் கலைக்கப்பட்டிருக்கின்றது. அவர்களது அறிவு, ஆற்றல், அனுபவங்களை தாங்கள் நேசித்த சமூகத்திற்கு பயனுள்ளதாக்க முடியாத அளவிற்கு உடல், உள்ள அளவில் அவர்கள் ஊனமாக்கப்பட்டிருக்கிறார்கள். மேலும், சிங்கள பேரினவாத்தின் தவறுகளைத் தட்டிக்கேட்ட எத்தனையோ நேர்மையான மனிதர்கள் தனிமைப்படுத்தப்பட்டிருக்கின்றார்கள் என்பதற்கெல்லாம் டேவிட் ஐயாவின் வாழ்வும் முடிவும் சிறந்த எடுத்துக்காட்டுகளாக அமைகின்றன.

இறைவாக்கினர் எரேமியாவின் வாழ்வில், அவரின் நேர்மையான செயல்களுக்கு எதிராக இழைக்கப்பட்ட கொடிய துயரங்களையும் வேதனைகளையும் நமது திருவிவிலியத்தில் வாசிக்கின்றோம். அந்நாள்களில் தலைவர்கள் அரசனைப் பார்த்து, “இம்மனிதன் கண்டிப்பாய்ச் சாகவேண்டும்; ஏனெனில் இவன் இவ்வாறு பேசி இந்நகரில் எஞ்சியுள்ள போர் வீரர்களையும் மக்கள் அனைவரையும் மனம் தளரச்செய்து வருகிறான். இந்த ஆள் இம்மக்களின் அழிவைத் தேடுகிறானே அன்றி, நலனைத் தேடுவதில்லை” என்றார்கள். அதற்கு அரசன் செதேக்கியா, “நன்று. அவனை உங்களிடமே கையளிக்கிறேன். ஏனெனில் உங்களைப் பகைத்துக்கொண்டு அரசனால் எதுவும் செய்ய இயலாதே” என்றான். எனவே அவர்கள் எரேமியாவைப் பிடித்து, காவல்கூடத்தில் அரச மகன் மல்கியாவுக்குச் சொந்தமான பாழுங்கிணற்றுக்குள் கயிற்றில் கட்டி அவரைக் கீழே இறக்கிவிட்டார்கள். அக்கிணற்றில் தண்ணீர் இல்லை; சேறு மட்டுமே இருந்தது. எனவே எரேமியா சேற்றுக்குள் புதையத் தொடங்கினார். (எரே 38:4-6). அப்போது, எரோமியாவிற்கு நிகழ்ந்தது பற்றி கேள்வியுற்ற அரசவையோருள் ஒருவரான எபேது மெலேக்கு என்பவர், அரசரிடம் சென்று வேண்டிக்கொண்டதால் அவர் காப்பாற்றப்பட்டார்.

ஆக, ஒரு நீதிமானாக, நேர்மையாளராக, கடவுளின் உண்மையான அடியாராக விளங்கிய தாவீது அரசர், சவுலால் பல்வேறு பாடுகளை அனுபவிக்கின்றார். இது அவருடைய எதிரிகளால் நிகழ்ந்திருந்தால் கூட அவைகளை தாவீது அரசர் முறியடித்திருந்திருப்பார். ஆனால், யாருக்காகத் தனது உயிரைப் பணயம் வைத்து கோலியாத்தைக் கொன்று இஸ்ரயேல் மக்களைக் காப்பாற்றினாரோ, அவரால்தான் தனக்கும், தன்னைச் சார்ந்தவர்களுக்கும் ஆபத்து என்ற நிலை வந்தபோதுதான் இந்தளவுக்குக் கலக்கமடைகிறார் தாவீது. இயேசுவின் வாழ்விலும் இதே நிலைதான். மூப்பர்கள், தலைமைக் குருக்கள், பரிசேயர், சதுசேயர், மறைநூல் அறிஞர், சட்டவல்லுநர் ஆகிய தனது இனத்து மக்களாலேயே, தான் எதிரியாகப் பாவிக்கப்பட்டு, வதைத்தொழிக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். ஆனால் நீதிமானும் நேர்மையாளருமான இயேசு தனது இறைத்தந்தையால் என்றென்றுமுள்ள வாழ்வுக்கு எழுப்பப்பட்டார். புனித பவுலடியாரும் இயேசுவின் நற்செய்திக்குச் சான்று பகரும்பொருட்டு தான் அனுபவித்த இன்னல்களையெல்லாம் பட்டியலிடுகின்றார். "நாங்கள் எல்லாச் சூழ்நிலைகளிலும் இன்னலுற்றாலும் மனம் உடைந்து போவதில்லை; குழப்பமுற்றாலும் நம்பிக்கை இழப்பதில்லை; துன்புறுத்தப்பட்டாலும் கைவிடப்படுவதில்லை; வீழ்த்தப்பட்டாலும் அழிந்துபோவதில்லை. இயேசுவின் வாழ்வே எங்கள் உடலில் வெளிப்படுமாறு நாங்கள் எங்குச் சென்றாலும் அவருடைய சாவுக்குரிய துன்பங்களை எங்கள் உடலில் சுமந்து செல்கிறோம். இயேசுவின் வாழ்வு சாவுக்குரிய எங்கள் உடலில் வெளிப்படுமாறு உயிரோடிருக்கும்போதே நாங்கள் அவரை முன்னிட்டு எந்நேரமும் சாவின் வாயிலில் நின்று கொண்டிருக்கிறோம். சாவின் ஆற்றல் எங்களிலும் வாழ்வின் ஆற்றல் உங்களிலும் வெளிப்படுகிறது (2 கொரி 4:8-12). ஆக, உள்ளம் உடைந்தோர், நைந்த நெஞ்சத்தார், நேர்மையாளர்களாகிய நீதிமான்கள் ஆகிய அனைவரும் துன்புறுத்தப்பட்டாலும், துயர நிலைக்கு ஆளானாலும் கடவுள் அவர்களை என்றுமே கைவிடுவதில்லை என்ற நம்பிக்கை செய்தியைத் தருகின்றார் தாவீது அரசர். எனவே, நாமும் தாவீதின் இத்தகைய மனநிலையைக்கொண்டு இறைநம்பிக்கையையுடன் வாழ்வோம். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் வேண்டுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

18 October 2022, 09:22