இரஷ்யாவின் அண்மைத் தாக்குதல்கள் போர் குற்றங்கள், EU கண்டனம்
மேரி தெரேசா: வத்திக்கான்
போரினால் சிதைக்கப்பட்டுள்ள உக்ரைனுக்காகச் செபிப்போம் என்று, அக்டோபர் 19 இப்புதனன்று வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் வழங்கிய பொது மறைக்கல்வியுரைக்குப்பின்பு திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அனைத்து திருப்பயணிகளிடம் கூறினார்.
உக்ரைனில் இடம்பெற்றுவரும் பயங்கரமான சித்ரவதைகள், மரணங்கள், மற்றும், அழிவுகள் நிறுத்தப்பட அந்நாட்டிற்காகச் செபிப்போம் என இப்புதனன்று திருத்தந்தை விண்ணப்பித்துள்ளவேளை, இதேநாளில் ஐரோப்பிய ஒன்றிய அவைத் தலைவரான Ursula von der Leyen அவர்களும், உக்ரைனில் இரஷ்யா நடத்திவரும் தாக்குதல்களுக்கு எதிரான தன் கண்டனத்தை வெளியிட்டுள்ளார்.
இப்புதனன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையில் இரஷ்யாவுக்கு எதிரான தன் கண்டனத்தை வெளியிட்டுள்ள der Leyen அவர்கள், உக்ரைனில் குடிமக்களின் உள்கட்டமைப்புகள்மீது நடத்தப்பட்டுள்ள இரஷ்யாவின் அண்மைத் தாக்குதல்கள், போர் குற்றங்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
இத்தாக்குதல்கள், ஏற்கனவே இடம்பெற்றுவரும் கொடூரமான போரில் புதியதொரு பகுதியாக உள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இரஷ்யா, உக்ரைனில் நடத்தியுள்ள அண்மைத் தாக்குதல்களுக்குப்பின், அந்நாட்டில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்கள் மற்றும், கிராமங்களில் மின்சாரம் இல்லாமல் மக்கள் துயருறுகின்றனர், உக்ரைனின் ஏறத்தாழ முப்பது மின்சக்தி நிலையங்கள் இரஷ்யாவால் சேதப்படுத்தப்பட்டுள்ளன, மற்றும், Dnipro, Mykolaiv, மற்றும், Zhytomyr நகரங்கள்மீது நடத்தப்பட்டுள்ள தாக்குதல்களில் பலர் இறந்துள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன.
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்