தேடுதல்

திருத்தந்தை 3ம் பயஸ்.   திருத்தந்தை 3ம் பயஸ்.  

திருத்தந்தையர் வரலாறு – திருத்தந்தை 3ம் பயஸ்.

சியென்னாவின் பேராயராக 21ம் வயதிலேயே நியமிக்கப்பட்டதுடன், சிறிது காலத்திலேயே, கர்தினால் தியாக்கோனாகவும் உயர்த்தப்பட்ட, பின்னாள் திருத்தந்தை.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

அன்பு நெஞ்சங்களே! கடந்த மூன்று வாரங்களாக திருத்தந்தையர் வரலாற்றுத் தொடரில் திருத்தந்தை ஆறாம் அலக்ஸாண்டர் குறித்துக் கண்டோம். நிர்வாகத்தைப் பொறுத்தவரையில் மிகச்சிறந்தவராக விளங்கிய இத்திருத்தந்தை, தனிப்பட்ட வாழ்வில் கறைபடிந்தவராக, அதாவது தன் குழந்தைகள் மீது கொண்ட அளவற்ற பாசத்தால் திருத்தந்தை பதவியைத் தவறாகப் பயன்படுத்தினார் என்பதை விரிவாகக் கண்டோம். இத்திருத்தந்தைக்குப்பின் திருஅவையை வழிநடத்த தேர்வுச்செய்யப்பட்டவர்   திருத்தந்தை 3ம் பயஸ். இவரின் இயற்பெயர் Francesco Todeschini Piccolomini என்பதாகும். இத்தாலியின் சியென்னா  நகரில் 1439ம் ஆண்டு மே மாதம் 29ஆம் தேதி பிறந்தார் இவர். இதற்கு முந்தைய திருத்தந்தை 6ம் அலக்ஸாண்டர் எவ்வாறு தன் தாயின் சகோதரரான திருத்தந்தை 3ம் கலிஸ்துஸின் ஆதரவில் வளர்ந்து திருத்தந்தையானாரோ அதுபோல் இத்திருத்தந்தையும் தன் தாயின் சகோதரரான திருத்தந்தை 2ம் பயஸின் ஆதரவில் வளர்ந்து திருஅவைக்குள் பல பதவிகளை வகித்தார். அதனால்தான் திருத்தந்தையானபோது தன் மாமாவை கைளரவிக்கும் விதமாக 3ம் பயஸ் என்ற பெயரை எடுத்துக் கொண்டார். இவர் இளைஞராக இருந்தபோது இவரின் மாமாவான திருத்தந்தை 2ம் பயஸ் இவரை இத்தாலியின் பெருஜியாவிற்கு அனுப்பி சட்டம் படிக்க வைத்தார். இவர் சட்டத்தில் முனைவர் பட்டம் பெற்று திரும்பியவுடனேயே இவரின் சொந்த ஊரான சியென்னாவின் பேராயராக 1460ம் ஆண்டு,  அதாவது அவரின் 21ம் வயதிலேயே நியமிக்கப்பட்டார். அதுமட்டுமல்ல, அந்த வயதிலேயே கர்தினால் தியாக்கோனாகவும் உயர்த்தப்பட்டார்.    

 இவரைப்பற்றிக் கூறும் வரலாற்று ஆசிரியர்கள், இவர் பெரிய பதவிகளை வகித்தபோது இளமை தோற்றத்துடன் இருந்ததையே ஒரு குறையாகக் குறிப்பிடுகின்றனர். அதாவது, திருத்தந்தையின் பிரதிநிதியாகவும் கர்தினாலாகவும் 21ஆம் வயதிலேயேப் பலப் பணிகளை மேற்கொண்டது அவ்வளவு ஏற்புடையதாக இருக்கவில்லை என்பது அவர்களின் கண்ணோட்டம். ஆனால் இவர் அப்பழுக்கற்றவராக பல்வேறு திறமைகளை உள்ளடக்கியவராக இருந்தார் என்பதையும் அந்த வரலாற்று ஆசிரியர்கள் சுட்டிக்காட்டத் தவறவில்லை. இவர் இளவயதிலேயே பாப்பிறை இல்லத்தில் வளர்ந்ததால், தன் மாமாவான திருத்தந்தை 2ம் பயஸிடமிருந்து ஜெர்மன் மொழியையும் கற்றிருந்தார். ஆகவே இவர் கர்தினாலானவுடன் திருத்தந்தையால் ஜெர்மனிக்கு பாப்பிறை பிரதிநிதியாகவும் அனுப்பப்பட்டார். அங்கு தன் மொழித்திறமை கொண்டு பல வெற்றிகளையும் சாதித்தார், பின்னாள் திருத்தந்தையான 3ம் பயஸ். திருத்தந்தை 2ம் பயஸுக்குப்பின் வந்த திருத்தந்தையர்களான 4ம் சிக்ஸ்டசும் 6ம் அலக்ஸாண்டரும் ஆன்மீக விடயங்களைவிட உலக காரியங்களிலேயே அதிகக் கவனம் செலுத்தி வந்ததால், அத்திருத்தந்தையர்களின் காலத்தில் அவர்களிடமிருந்து ஒதுங்கியே இருந்தார் 3ம் பயஸ்.

இவரைக் குறித்து எழுதும் சில வரலாற்று ஆசிரியர்கள், ஒரு நிமிடம் கூட சோம்பி உட்காராமல் எந்நேரமும் எதையாவது திட்டமிட்டு ஆற்றிக்கொண்டிருந்த திருத்தந்தை இவர் எனக் கூறுகின்றனர். காலை விடிவதற்கு முன்னரே இவர் எழுந்து படிக்க ஆரம்பித்து விடுவாராம். காலை நேரம் முழுவதும் செபத்தில் செலவிடுவார். நண்பகல் வேளையில் மக்களைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார். இச்சந்திப்பின் போது எந்த மனிதரும், எவ்வளவு ஏழ்மை நிலையில் இருந்தாலும் இவரைச் சந்திக்கலாம். இவர் உணவு விடயத்திலும் மிகவும் கட்டுப்பாடாக இருந்தார். இரு நாளைக்கு ஒரு வேளைதான், அதுவும் மாலையில்தான் உணவு உண்டார். இவர் திருத்தந்தையாக தேர்ந்தெடுக்கப்பட்டதே ஆச்சரியமான ஒன்றுதான். 1503ம் ஆண்டு ஆகஸ்ட் 18ந்தேதி திருத்தந்தை 6ம் அலக்ஸாண்டர் இறந்துவிட, அடுத்தத் திருத்தந்தையைத் தேர்ந்தெடுக்க கர்தினால்கள் கூட்டம் இடம் பெற்றது. முன்னாள் திருத்தந்தையின் காலத்தில் செல்வாக்குப் பெற்றவர்களாக விளங்கிய d'Amboise, Rovere, மற்றும் Sforza  என்ற மூன்று கர்தினால்களின் பெயர்களும் அடிபட்டன. இதில் யாரைத் தேர்ந்து கொள்வது என கர்தினால்களுக்குள் குழப்பம். ஒருவரைத் தேர்ந்துகொண்டால் மற்றவருக்கு வருத்தம். எனவே, பொதுவான ஒருவரைத் தேர்ந்தெடுக்கலாம் என முடிவெடுத்து கர்தினால் Piccolominiயை தேர்வு செய்தது கர்தினால்கள் அவை. அவரே திருத்தந்தை 3ம் பயஸ்.

தன் மாமா திருத்தந்தை 2ம் பயஸை கௌரவிக்கும் விதமாக 3ம் பயஸ் என்ற பெயரைத் தேர்வு செய்து 1503ம் ஆண்டு அக்டோபர் மாதம் 8ஆம்தேதி பொறுப்பை ஏற்றுக்கொண்டார் இவர். இவர் திருத்தந்தையாகத் தேர்வு செய்யப்பட்டப் பின்னர்தான், அருள்பணியாளராக திருநிலைப்படுத்தப்பட்டார் என்பதும் இங்கு குறிப்பிடப்படவேண்டியது. திருத்தந்தையாக இவர் முடிசூட்டப்பட்ட வழிபாடுகளும், அதைத் தொடர்ந்த கொண்டாட்டங்களும் இவருக்கு பெரும் களைப்பைத் தந்தன. 64 வயதே நிரம்பியவராக இருந்தாலும், இவர் மூட்டு வலியால் மிகவும் துன்புற்று, வயதான தோற்றத்தைக் கொண்டவராக இருந்தார். மிகச்சிறிய வயதிலேயே பாப்பிறை இல்லத்திற்குள் நுழைந்து, 21 வயதிலேயே திருஅவையில் பெரும் பொறுப்புக்களை ஏற்று, பல இடங்களுக்குத் திருத்தந்தையின் சார்பில் பயணம் மேற்கொண்டு உழைத்த இவர், 64 ஆம் வயதில் திருத்தந்தையானபோது, சோர்வடைந்த ஒரு மனிதராகவே இருந்தார். அக்டோபர் 8 ஆம்தேதி(1503)  திருத்தந்தையாகப் பொறுப்பேற்ற இவர், அடுத்த பத்து நாட்களே திருஅவை தலைமைப் பதவியை வகிக்க முடிந்தது. ஆம். அக்டோபர் 18ஆம் தேதி இவர் இறைபதம் சேர்ந்தார். அதாவது, 1503ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 22ஆம் தேதி கர்தினால்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இவர், 26 நாட்களில் இறைபதம் சேர்ந்தார்.

திருத்தந்தை 3ம் பயஸின் உடல் முதலில் புனித பேதுரு பசிலிக்காப் பேராலயத்திலேயே அடக்கம் செய்யப்பட்டது. பின்னர், இவரின் மாமா திருத்தந்தை 2ம் பயஸின் கல்லறை இருந்த S. Andrea della Valle என்ற கோவிலுக்கு மாற்றப்பட்டது.

அன்புள்ளங்களே! அடுத்தவாரமும் நாம், ஒரு திருத்தந்தையின் உறவினராக இருந்து, திருஅவைக்குள் பல பணிகளை ஆற்றி, பின்னர் தானும் திருத்தந்தையாக தேர்வு செய்யப்பட்ட திருத்தந்தை இரண்டாம் ஜூலியஸ் குறித்துக் காண்போம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

26 October 2022, 12:45