தேடுதல்

முதல் திருத்தந்தை புனித பேதுருவின் அழைப்பை விவரிக்கும் கலை வடிவம் - உரோம் புனித பேதுரு பசிலிக்காவில் முதல் திருத்தந்தை புனித பேதுருவின் அழைப்பை விவரிக்கும் கலை வடிவம் - உரோம் புனித பேதுரு பசிலிக்காவில் 

திருத்தந்தையர் வரலாறு - திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டர் - 3

முதன் முறையாக ஒரு திருத்தந்தை, திருஅவைக்குச் சொந்தமாக இருந்த நிலப்பகுதிகளுக்கு எல்லாம் நேரடி நிர்வாகியாக இருந்தது, திருத்தந்தை 6ம் அலெக்சாண்டர் காலத்தில்

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்                           

அன்பு நெஞ்சங்களே! கடந்த இரண்டு வாரங்களாக திருத்தந்தையர் நிகழ்ச்சியில் திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டர் குறித்து நோக்கி வருகிறோம். நல்ல திறமையான நிர்வாகியாக இருந்தும், அவர் எங்ஙனம் தன் குழந்தைகள் மீது கொண்டிருந்த அளவற்ற பாசத்தால், திருத்தந்தை பதவியை களங்கப்படுத்தினார் எனவும் கண்டோம். இந்தக் கட்டத்தில் தன் மகன் Juanக்கு திருஅவையின்கீழ் இருந்த சில நகர்களைக் கொடுக்க விரும்பினார் திருத்தந்தை. இதற்கு கர்தினால் Piccolomini என்பவர் பயங்கர எதிர்ப்பு தெரிவித்தார். இப்படிப்பட்ட ஒரு நிலையில் 1497ஆம் ஆண்டு ஜூன் 16ம் தேதி அடையாளம் தெரியாத மனிதர்களால் அம்மகனின் உடல் தொண்டை துண்டிக்கப்பட்ட நிலையில் பல காயங்களுடன் டைபர் நதியில் கண்டெடுக்கப்பட்டது. இம்மகனின் மரணத்தால் திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டர் மிகவும் துயரமுற்றார். அத்துயரம் தாங்காமல் 3 நாட்கள் இரவும் பகலும் உண்ணாமல் உறங்காமல் துக்கம் கொண்டாடிய இத்திருத்தந்தை, அதற்குப் பின்னரும் தன் வழிகளை அவ்வளவாக மாற்றிக் கொள்ளவில்லை. திருஅவையில் நல்ல மாற்றங்களைக் கொண்டுவர வேண்டும் என முடிவெடுத்து, கர்தினால்கள் அவையைக் கூட்டினார். ஆனால் அதன் தீர்மானங்கள் எதுவும் செயல்படுத்தப்படவில்லை. இதற்கிடையில் இவரது மகள் Lucreziaவின் திருமணம் செல்லாது என அறிவித்தார் அத்திருத்தந்தை. Sforzaவுடன் இடம்பெற்ற Lucreziaவின் திருமணம், ஆண்மையற்ற தன்மையை காரணம் காட்டி செல்லாததாக அறிவிக்கப்பட்டு, பின்னர் Lucreziaவை நேப்பிள்ஸ் மன்னர் இரண்டாம் அல்போன்ஸோ அவர்களின திருமணத்திற்கு வெளியே பிறந்த மகன், Bisegliaவின் அல்போன்ஸோ என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டாள். இந்த நேரத்தில் பிரான்சில் இடம்பெற்ற சில நிகழ்வுகள், இத்தாலிய வரலாற்றிலும் பல தாக்கங்களைக் கொணர்ந்தன. 

   1498ஆம் ஆண்டு பிரான்ஸ் மன்னர் எட்டாம் சார்லஸ் 1498 ஏப்ரல் மாதம் மரணமடைய, அவரின் உறவினர் 12ம் லூயி மன்னரானார். இவர் ஏற்கனவே இளம் வயதில் 11ம் லூயியின் மாற்றுத்திறன்கொண்ட மகளை கட்டாயத்தின் பேரில் திருமணம் புரிந்திருந்தார். இப்போது அரச பதவிக்கு வந்தவுடன் முந்தைய மன்னரின் விதவையை மணந்தால்தான் அரசப் பகுதிகள் முழுவதும் தன் கைக்கு வரும் என எண்ணியதால், முன்னாள் மனைவி ஜேனை விலக்க திருஅவையின் அனுமதியைக் கேட்டார். திருஅவையும் அனுமதி வழங்கியது. இதனால் ஐரோப்பாவின் பல அரசுகள் திருத்தந்தைமீது கோபம் கொண்டன. ஆனால் கர்தினால்கள் அவை முழுவதும் திருத்தந்தையின் கட்டுப்பாட்டின்கீழ் இருந்ததால் இது குறித்து அவர் கவலைப்படவே இல்லை. இதற்கிடையில், கர்தினால் பதவியை ஏற்காத திருத்தந்தையின் மகன் சீசர்r, பிரான்ஸ் அரசவைக்குப் பயணம் மேற்கொண்டு, மன்னர் லூயியின் சகோதரி மகளை திருமணம் புரிந்தார். 1499ஆம் ஆண்டு மன்னர் லூயியும் சீசரும் மிலானுக்குள் புகுந்து, அங்கு திருத்தந்தையின் கட்டளைகளை ஏற்காமல் செயல்பட்டுவந்த கோமகன்களை தோற்கடித்தனர். அப்பகுதியைக் கைப்பற்றிய திருத்தந்தை, அங்கேயும் தன் உறவினர்களை நிர்வாகிகளாக நியமித்து பெயரை கெடுத்துக்கொண்டார்.

   இவ்வாறு உலக அதிகாரத்தில் கவனம் செலுத்துவதாக திருத்தந்தையின் நடவடிக்கைகள் வெளிப்படையாக தெரிந்துவந்த வேளையில் அவருக்கு இன்னொரு அடியும் விழுந்தது. இவர் மகள் Lucreziaவின் கணவரான Biseglia கோமகன் அல்போன்ஸோ, அடையாளம் தெரியாத 5 பேரால் தாக்கப்பட்டார். இதற்கு திருத்தந்தையின் மகன் சீசர்தான் காரணம் என அல்போன்ஸோ உறுதியாக நம்பி திரும்பித் தாக்க, சீசரின் மெய்காப்பாளர்கள் அவரைக் கொன்றனர். விதைவையான Lucreziaவை வத்திக்கானுக்கு அழைத்த திருத்தந்தை அவர் பொறுப்பில் திருப்பீட நிர்வாகத்தை விட்டுவிட்டு, தன் மகன் சீசர தலைமையில் கைப்பற்றப்பட்ட இடங்களை பார்வையிடச் சென்றார். அப்போது Lucreziaவின் வயது 23தான். இதற்கிடையில் இத்தாலியின் Ferrara நகர் கோமகன் இன்னொரு அல்போன்ஸோ என்பவருக்கு தன் மகளை 1501ஆம் ஆண்டு டிசம்பர் 30ம் தேதியன்று மறுமணம் செய்து கொடுத்தார் பாப்பிறை. திருமணம் ஒரு பெருவிழா போல் நடந்தது. தன் மகளை வைத்து அரசியல் சதுரங்கத்தில் உறவுகளைப் புதுப்பிக்க விரும்பிய திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டரின் கனவு பலிக்கவில்லை. ஏனெனில், இந்த மூன்றாவது திருமணத்தில் Lucrezia மிகவும் பிரமாணிக்கமுள்ளவராக, ஒரு புனித வாழ்வு வாழ்ந்தார் என்றும், தன் தந்தையின் திட்டங்களுக்கு தலையசைக்கவில்லை என்றும்  வரலாறு கூறுகிறது. 1519ஆம் ஆண்டு Lucrezia உயிரிழக்கும் வரை இது தொடர்ந்தது.

  இதற்கிடையில், திருத்தந்தையின் மகன் சீசர், இடங்களை ஆக்கிரமிப்பதைத் தொடர்ந்து கொண்டே சென்றார். 1502ல் Orsini குடும்பத்தினர் இவருக்கு எதிராகச் சதிசெய்து கொல்ல முயன்றனர். ஆனால் சீசர் அந்த சதியாளர்களைக் கொன்றார். இந்த சதித்திட்டங்களுக்கு மூளையாக இருந்த கர்தினால் Orsini பிடிக்கப்பட்டு Castle St.Angeloவில் சிறைவைக்கப்பட்டார். 12 நாட்களுக்குப்பின் அவர் பிணமாக கண்டெடுக்கப்பட்டார். அவர் இயற்கை மரணம் அடைந்தாரா அல்லது கொல்லப்பட்டாரா என்பது இதுவரை தெரியாத புதிர். Orsini குடும்பத்திற்கென இருந்தது எல்லாம் பறிக்கப்பட்டன. திருத்தந்தையர் வரலாற்றில் முதன் முறையாக ஒரு திருத்தந்தை திருஅவைக்குச் சொந்தமாக இருந்த நிலப்பகுதிகளுக்கு எல்லாம் நேரடி நிர்வாகியாக இருந்தது தற்போதுதான் என வரலாற்று ஆசிரியர்கள் கூறுகின்றனர். இவரின் கட்டுப்பாட்டின்கீழ் அனைத்துக் கர்தினால்களும் இருந்ததால் இவரை எதிர்த்துக் கேட்பவர்கள் எவரும் இல்லாமல் இவர் எதையும் ஆற்ற முடிந்தது. இதற்கிடையில், இத்தாலியின் நேப்பிள்ஸ் நகரில் பிரான்ஸ்க்கும் இஸ்பெயினுக்கும் இடையேயான போர் துவங்கியது. இவ்விருவரில் யாரை ஆதரிப்பது என குழம்பினார் திருத்தந்தை 6ம் அலக்ஸாண்டர்.

  இப்படிப்பட்ட ஒரு குழப்ப நிலையில் இருந்த திருத்தந்தை 6ம் அலெக்ஸாண்டர், 1503ஆம் ஆண்டு ஆகஸ்ட் 6ம் தேதி Adriano da Corneto என்ற கர்தினாலின் மாளிகையில் அவரோடு இணைந்து இரவு உணவருந்திவிட்டு வெளியிலேயே அதிக நேரம் செலவிட்டதால் குளிர்ந்த காற்று தாக்கி, அவ்விருவருக்கும் நச்சுக்காய்ச்சல் தொற்றிக் கொண்டது. 12ம் தேதி படுக்கையில் வீழ்ந்த திருத்தந்தை, 18ம் தேதி இறுதி அருளடையாளத்தைப் பெற்று மாலையில் மரணமடைந்தார். இவர் உடல் விரைவாக ஊதி அழுகத் தொடங்கியதைக் கண்டவர்கள், இவர் விஷம் வைத்து கொல்லப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகத்தை வெளிப்படுத்தினர்.

   1431ம் ஆண்டு சனவரி முதல் தேதி பிறந்து 1503ஆம் வருடம் ஆகஸ்ட் 18ம் தேதி இறந்த திருத்தந்தை ஆறாம் அலெக்சாண்டர் அவர்கள், தன் கடைசி காலம் வரை அதாவது 73 வயதிலும் மிகவும் துடிப்புடன், சோர்வின்றி செயலாற்றினார். ஆனால் இவரின் நிர்வாகம் குறித்துதான் பல கறைகள் உள்ளன. 

அண்மை இரண்டு வாரங்களாக நாம் வழங்கி வந்த திருத்தந்தையின் வாழ்க்கை வரலாறு குறித்து சிலர் எம்மிடம் தொலைபேசி வழியாகவும், நேரடியாகவும் பேசியபோது,  திருத்தந்தையரின் மறுபக்கத்தையும் எடுத்துக்கூற வேண்டியது கட்டாயமா எனக் கேட்டனர். வரலாற்றை எடுத்துரைக்கும்போது, உண்மைகளை மறைப்பது தவறு என்பது தெரிந்திருந்தபோதிலும், சில திருத்தந்தையர்களின் இருண்ட பக்கங்களை விவரிக்கவேண்டுமா என்பது அவர்களின் கேள்வியாக இருந்தது. உண்மைதான். ஆனால், வரலாற்றைப் பார்த்தோமானால் ஒழுக்க ரீதி வாழ்வில் கீழ்மை நிலையில் நின்ற திருத்தந்தையர்கள் இரண்டு மூன்று பேர்தான். அதாவது ஒரு விழுக்காட்டினரே. ஏறத்தாழ 99 விழுக்காட்டினரின் உயரிய குணங்களை எடுத்துரைக்கும்போது, ஒரு விழுக்காட்டினரின் இருண்ட பக்கத்தையும் காண்பிப்பது தவறில்லை என்றே எண்ணுகிறோம். ஏனெனில் வத்திக்கானின் நம்பகத்தன்மைக்கு பங்கம் விளைவிக்க முடியாது. வரலாற்றை மறைப்பதோ, நமக்குச் சார்பாக மாற்றியமைப்பதோ ஏற்புடையதல்ல. இந்த கண்ணோட்டத்திலேயே, இந்த நிகழ்ச்சியையும் நோக்கும்படி நேயர்களைக் கேட்டுக்கொள்கிறோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

19 October 2022, 15:06