தலிபான் தலைவர்கள் சிறுமிகள் கல்வி கற்க அனுமதிக்கவேண்டும்
கிறிஸ்டோபர் பிரான்சிஸ்: வத்திக்கான்
பெண் குழந்தைகளின் நலவாழ்வு, மற்றும், வளர்ச்சிக்காக முதலீடு செய்வது, நம் பொதுவான வருங்காலத்திற்கு முதலீடு செய்வதாகும் என்று, பெண் குழந்தைகள் உலக நாளுக்கென்று வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளார், ஐக்கிய நாடுகள் நிறுவனத்தின் தலைமைப் பொதுச் செயலர் அந்தோனியோ கூட்டேரஸ்.
அக்டோபர் 11, இச்செவ்வாயன்று, பெண் குழந்தைகள் பத்தாவது உலக நாள் சிறப்பிக்கப்பட்டதை தன் செய்தியில் குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், உலகெங்கும் சிறுமிகளின் வாழ்வு மற்றும் அவர்களின் சாதனைகளை நினைவுகூர, இவ்வுலக நாள், அழைப்புவிடுக்கின்றது என்று கூறியுள்ளார்.
சிறுமிகள், தங்களின் மனித உரிமைகளைப் புரிந்துகொள்ள உணர ஆதரவளிக்குப்படும்போது, வன்முறையின் அச்சுறுத்தலின்றி வாழ்வதற்குரிய உரிமை உட்பட அவர்கள் பாதுகாப்பாகவும், தாங்கள் எதிர்கொள்ளும் உரிமை மீறல்களை துணிவுடன் வெளியிடவும் சக்தி பெறுவார்கள் என்று, கூட்டேரஸ் அவர்கள் தன் செய்தியில் பதிவுசெய்துள்ளார்.
இந்நிலையில், அவர்கள் தங்களுக்காகவும், தங்களின் குழுமங்கள், மற்றும், சமுதாயங்களுக்காகவும் சிறந்ததோர் உலகை உருவாக்க முடியும் என்று குறிப்பிட்டுள்ள கூட்டேரஸ் அவர்கள், சிறுமிகள் கல்வி கற்க வாய்ப்பளிக்கப்படும்போது அவர்களால் நலமான, செயல்திறன்மிக்க மற்றும், நிறைவான வாழ்வை வாழமுடியும் என்று தெரிவித்துள்ளார்.
கல்வி வாய்ப்பு மறுக்கப்படுவது உட்பட சிறுமிகள் எதிர்கொள்ளும் மிகப்பெரும் சவால்கள் பற்றியும் குறிப்பிட்ட ஐ.நா. தலைமைப் பொதுச் செயலர், சிறுமிகள் கல்வி கற்க அனுமதிக்கப்படவேண்டும் என்று, தலிபான் தலைவர்களையும் கேட்டுக்கொண்டுள்ளார்.
கடந்த பத்து ஆண்டுகளில் அரசுகள், கொள்கை அமைப்பாளர்கள், பொதுநல அமைப்புகள் போன்ற பலரும், உலக அளவில் சிறுமிகளின் குரல்கள் கேட்கப்பட வாய்ப்பளிக்கப்படுவது உட்பட, அவர்களின் வாழ்வு மேம்பட அதிகமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், அவை இரட்டிப்பாக்கப்படவேண்டும் என, இவ்வுலக நாளில் விண்ணப்பிக்கின்றேன் என்று கூட்டேரஸ் அவர்கள் கூறியுள்ளார்.
மேலும், உலக அளவில் அறுபது கோடி வளர்இளம் சிறுமிகள், தங்களுக்கு கொடுக்கப்படும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி அவ்வப்போது தங்களின் திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர், இவர்கள், தங்களின் சமூகங்களில் மாற்றம்கொணரும் உந்துசக்திகளாக இருக்கமுடியும் என்று ஐ.நா. கூறியுள்ளது.
"நமது இப்போதைய நேரம்: நமது உரிமைகள், நம் எதிர்காலம்" என்ற தலைப்பில் அக்டோபர் 11, இச்செவ்வாயன்று, பெண் குழந்தைகள் பத்தாவது உலக நாள் சிறப்பிக்கப்பட்டது. (UN)
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்