தேடுதல்

அரவணைக்கும் இயேசு அரவணைக்கும் இயேசு 

பொதுக் காலம் 27ம் ஞாயிறு : நம்பிக்கையே நங்கூரமாய்.....

யானைக்கு தும்பிக்கை பலமாய் இருப்பதுபோல, நாம் பெற்றுள்ள இறைநம்பிக்கை நாம் துயருறும் நேரங்களில் நமக்குப் பலமாய் இருக்கட்டும்.

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள் I. அப 1: 2-3; 2: 2-4 II. 2 திமோ 1: 6-8, 13-14 III. லூக் 17: 5-10)

ஞாயிறு சிந்தனை - 021022

ஓர் இரவு, மனிதர் ஒருவர் கனவொன்று கண்டார். அந்தக் கனவில் அவர் கடவுளுடன் கடற்கரையோரம் நடந்து கொண்டிருக்க, வானத்தில் அவரது வாழ்க்கையின் சில காட்சிகள் மின்னல் போல வந்து சென்றன. ஒவ்வொரு காட்சியிலும், மணலில் இரண்டு ஜோடி காலடி சுவடுகளைக் கவனித்தார் அந்த மனிதர். ஒன்று அவருடையது, மற்றொன்று கடவுளின் காலடிச் சுவடுகள். கனவில் பார்த்த கடைசி காட்சியின் சில நிமிடங்கள் அவர் கண் முன் தோன்றியபோது, மணலில் இருந்த காலடிச் சுவடுகளைத் திரும்பி பார்த்தார். பல சமயங்களில், அவரது வாழ்க்கையின் பாதையில், ஒரே ஒரு ஜோடி காலடிச் சுவடுகள் மட்டுமே இருந்தன. வாழ்க்கையில் மிகுந்த சவால்களும், மன வேதனைகளும் ஏற்பட்ட சமயங்களில் எல்லாம், அவர் ஒரே ஒரு ஜோடி காலடிச் சுவடுகள் மட்டுமே இருந்ததைக் கவனித்தார். அவருக்கு அது வருத்தமாக இருந்தது. அதைப் பற்றி கடவுளிடம் “நான் உங்களைப் பக்தியுடன் பின்பற்ற தீர்மானித்தபோது, நீங்கள் என் வாழ்க்கையில் எல்லா நேரங்களிலும் என்னைக் கைவிடாமல் வழிநடத்திச் செல்வதாகக் கூறினீர்கள்; ஆனால், என் வாழ்க்கையில் அதிகமான பிரச்சனைகள் ஏற்பட்ட நேரங்களில், ஒரே ஒரு ஜோடி காலடிச் சுவடுகளை மட்டுமே நான் பார்த்தேன். எனக்கு உங்களின் ஆதரவு மிகவும் தேவைப்பட்ட நேரங்களில், ஏன் என்னை விட்டு விலகி இருந்தீர்கள் என்பது எனக்கு புரியவில்லை” என்று கவலையுடன் கேட்டார். அதற்கு கடவுள், “என் அன்பு மகனே! நான் உன்னை அதிகம் அன்பு செய்கிறேன். சோதனைகளும் துன்பங்களும் உன்னைச் சூழ்ந்த காலங்களில், உன்னை நான்  கைவிட்டதில்லை. நீ பார்த்த ஒரே ஒரு ஜோடி காலடிச் சுவடுகள் உன்னுடையது அல்ல, அவைகள் என்னுடயவை. அந்நேரங்களில், நான் உன்னை என் கைகளில் சுமந்து கொண்டு நடந்து சென்றிருக்கிறேன்” என்று விளக்கினார்.

இன்று நாம் பொதுக்காலத்தின் 27ம் ஞாயிறைச் சிறப்பிக்கின்றோம். இன்றைய வாசகங்கள் கடவுளின் நற்செயல்களுக்காக நம்பிக்கையுடன் காத்திருக்க நம்மை அழைக்கின்றன. இவ்வுலகில் நிகழும் போர், வன்முறை, தீவிரவாதம், பயங்கரவாதம், அநியாயப் படுகொலைகள், ஏற்றத்தாழ்வுகள், அதிகாரவெறி, ஆணவச்செயல்கள், அடக்குமுறைகள், மனிதக் கடத்தல்கள், பெண்ணடிமைத்தனம், பாலியல் வன்மங்கள் ஆகியவை பல நேரங்களில் கடவுள்மீதான நமது நம்பிக்கையை இழக்கச் செய்கின்றன. ஏன் இப்படியெல்லாம் நடக்கின்றன? இதற்கொரு முடிவே இல்லையா? இவற்றையெல்லாம் கடவுள் கைகட்டி வேடிக்கைப் பார்த்துக்கொண்டு இருக்கின்றாரே? என்றெல்லாம் அங்கலாய்த்துப் புலம்பித் தவிக்கின்றோம். ஆனால், இவற்றையெல்லாம் கடவுள் வெறுமனே வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கவில்லை. மாறாக, நேரம் வரும்போது, அவற்றிற்கு இறைவன் முடிவு கட்டுகின்றார். ஆனால், அதற்காக நாம் பொறுமை காக்கவேண்டும் என்றும், முக்கியமாக, மிகுந்த நம்பிக்கையுடன் காத்திருக்கவேண்டும் என்றும் கடவுள் விரும்புகின்றார். இன்றைய முதல் வாசகத்தில் சிறிய இறைவாக்கினரான அபகூக்கு இத்தகையதொரு மனநிலையில் கடவுளிடம் புலம்பித் தீர்ப்பதை நம்மால் காண முடிகிறது. இப்போது அப்பகுதியை இறையொளியில் வாசிக்கக் கேட்போம்.

“ஆண்டவரே, எத்துணைக் காலத்திற்கு நான் துணை வேண்டிக் கூக்குரலிடுவேன்; நீரும் செவிசாய்க்காதிருப்பீர்? இன்னும் எத்துணைக் காலத்திற்கு வன்முறையை முன்னிட்டு உம்மிடம் அழுது புலம்புவேன்; நீரும் எம்மை மீட்காமல் இருப்பீர்? நீர் என்னை ஏன் கொடுமையைப் பார்க்கச் செய்கின்றீர், கேட்டினைக் காணச் செய்கின்றீர்? கொள்ளையும் வன்முறையும் என் கண்முன் நிற்கின்றன; வழக்கும் வாதும் எழும்புகின்றன. ஆண்டவர் எனக்கு அளித்த மறுமொழி இதுவே: “காட்சியை எழுதிவை; விரைவாய் ஓடுகிறவனும் படிக்கும் வண்ணம் பலகைகளில் தெளிவாய் எழுது. குறித்த காலத்தில் நிறைவேறுவதற்காகக் காட்சி இன்னும் காத்திருக்கின்றது; முடிவை நோக்கி விரைந்து செல்கின்றது. ஒருக்காலும் பொய்க்காது. அது காலந்தாழ்த்தி வருவதாகத் தோன்றினால், எதிர்பார்த்துக் காத்திரு; அது நிறைவேறியே தீரும்; காலம் தாழ்த்தாது. இதை நம்பாதவரோ உள்ளத்திலே நேர்மையற்றவராய் இருப்பர்; நேர்மையுடையவரோ தம் நம்பிக்கையினால் வாழ்வடைவர்.”

இறைநம்பிக்கையே மனித வாழ்வின் மையமாக அமைகிறது. இதுவே மனிதர் உயிர் வாழ்வதற்கும் அடிப்படையாக இருக்கின்றது. துன்பம், நோய், பிரிவு, வறுமை, புலம்பெயர்ந்து செல்லல், அனைவராலும் கைவிடப்பட்ட நிலை போன்ற கடினமான காலங்களில் ஒரு மனிதரை இறைவன்மீதும் தன்மீதும் ஆழமான அன்புகொள்ள செய்து வழிநடத்துவதும் நம்பிக்கையே! மூன்று வகையான நம்பிக்கைகள் இருக்கின்றன. தன் மீது நம்பிக்கை, உலகின் மீது நம்பிக்கை, இறைவன்மீது நம்பிக்கை. இவையனைத்தும் ஒன்றோடொன்று தொடர்புடயவை. ஆகவே, இவை மூன்றுமே ஆழமானதாகவும் திடமானதாகவும் இருக்க வேண்டும். கடவுள் நம்மைப் பாதுகாக்கின்றார் என்பதை அறிந்துணர்தலே நம்பிக்கையின் அடிப்படை அம்சமாகும். வாழ்க்கையை முன்னோக்கி நகர்த்த இந்த நம்பிக்கையே தேவையானதாகவும் போதுமானதாகவும் இருக்கின்றது. ஒருவரது வாழ்க்கையில் நம்பிக்கை மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது. இறை நம்பிக்கை கொண்டோருக்கு, கண்ணுக்குப் புலப்படாத சக்தி மிக உயர்ந்ததாகவும், இவ்வுலகப் பொருள்கள் யாவும் அர்த்தமற்றவையாகவும் தோன்றுகின்றன.

இறைநம்பிக்கை ஒருவரை இவ்வுலகத் தீமைகளிலிருந்தும், குழம்பிய மனப்போக்கிலிருந்தும் விடுவித்து, கண்ணுக்குப் புலப்படாத கடவுளின் மேல் ஆழமான பற்றுகொள்ளச் செய்கிறது. ஒருவரின் வாழ்க்கை இறைநம்பிக்கையின் அடிப்படையில் அமையும்போது, அவர் பழியுணர்வு, வெறுப்பு இவற்றில் சிக்கிக் கொள்ளாமல் கடவுள் காட்டும் வழிகளைப் பின்பற்றுவார். தம் இறைநம்பிக்கையால் இவ்வுலகை ஆளக் கற்றுக்கொள்வார். இன்றைய இரண்டாம் வாசகத்தில் புனித பவுலடியார், "கிறிஸ்து இயேசுவிடம் நம்பிக்கையும் அன்பும் கொண்டு என்னிடம் நீ கேட்ட நலந்தரும் வார்த்தைகளை மேல்வரிச் சட்டமாகக் கொள். நமக்குள் குடிகொள்ளும் தூய ஆவியால் ஒப்படைக்கப்பட்ட நல்ல போதனையைக் காத்துக் கொள்" என்று திமொத்தேயுவுக்கு அறிவுரை வழங்குகின்றார். நற்செய்தி வாசகத்தில், “எங்கள் நம்பிக்கையை  மிகுதியாக்கும்” என்று திருத்தூதர்கள் ஆண்டவரிடம் கேட்டபோது,  “கடுகளவு நம்பிக்கை உங்களுக்கு இருந்தால் நீங்கள் இந்தக் காட்டு அத்தி மரத்தை நோக்கி, ‘நீ வேரோடே பெயர்ந்துபோய்க் கடலில் வேரூன்றி நில்’ எனக் கூறினால் அது உங்களுக்குக் கீழ்ப்படியும் என்று பதில்மொழி தருகிறார்.

தன் பிறந்த நாளை முன்னிட்டு மன்னர் ஒருவர் கோவில் ஒன்றில் அன்னதானம் செய்துகொண்டிருந்தார். அப்போது ஒரு ஏழை மனிதர் வந்து வரிசையில் நின்றார். அவரைப் பார்த்த பலர் முகம் சுளித்து ஒதுங்கி நின்றனர். இதை உணர்ந்த அந்த ஏழை, இவர்களுக்குத்தான் நம்மை பிடிக்கவில்லையே, வரிசையில் நிற்காமல் ஒதுங்கி நின்று எல்லோரும் அன்னதானம் பெற்றபின்பு நாம் வாங்கிக்கொள்வோம் என்று தள்ளி நின்றார். நேரம் போய்க்கொண்டே இருந்தது. இவர் தள்ளி நின்றதால் இவருக்குப் பின்னால் வந்தவர்கள் எல்லாரும் அன்னதானம் பெற்றுச் சென்றனர். சிலர் அன்னதானம் பெற்றுக்கொண்டு இவரை ஏளனம் செய்து சிரித்துவிட்டுப் போனார்கள். இவர் வாயைத் திறந்து எதுவும் சொல்லவில்லை என்றாலும் மனதிற்குள் ஒரு சோகம். எல்லோருக்கும் தரப்படும் அன்னதானம் நமக்கு கிடைக்க எவ்வளவு காத்திருப்பு? எவ்வளவு போராட்டம்? எவ்வளவு இழிச்சொல்? போன ஜென்மத்தில் என்ன பாவம் செய்தேனோ இப்படித் தவிக்கிறேனே? என்று தன் விதியை நொந்துகொண்டார். மாலை வரை காத்திருந்து காத்திருந்து, சரி நமக்கு இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல என்று நினைத்துக்கொண்டு, ‘அப்பனே ஆண்டவா…என்னை ஏனப்பா இப்படி ஒரு இழி பிறவியில் பிறக்கச் செய்தாய்’ என்று கோபுரத்தைப் பார்த்து மனதில் உள்ள தன் குமுறலைச் சொன்னார். பின்பு கோவில் அருகே உள்ள குளத்து நீரில் முகத்தைக் கழுவிவிட்டு படியில் சோர்வாக அமர்ந்தார்.

அன்னதானம் கொடுத்து முடித்த பிறகு, மன்னர் அந்தப் படித்துறையில் காலாற நடந்து  வந்தார். அப்போது, “என்னப்பா…சாப்பிட்டாயா?” என்று அந்த ஏழையிடம் கேட்டார். கேட்பது மன்னர் என்று தெரியாமல் “ஊரே சாப்பிட்டது. என் தலையில் இன்று பட்டினி என்று எழுதியுள்ளது போல அய்யா” என்று விரக்தியாக, முகத்தை திருப்பாமல் குளத்துநீரைப் பார்த்தபடியே பதில் சொன்னார் அந்த ஏழை. அவர் கூறிய பதில் மன்னரின் மனதை உருக்கியது. “என் பிறந்தநாளில் ஊர் மக்கள் யாரும் பசியுடன் உறங்கச் செல்லக் கூடாது என்றுதானே நான் அன்னதானத்திற்கு ஏற்பாடு செய்தேன்? ஒரு அப்பாவி ஏழை இப்படி விடுபட்டுள்ளாரே என்று அவர் அருகில் சென்று அவர் தோளில் கை வைத்து ‘மன்னித்துவிடப்பா என்னை... ரொம்ப பசிக்கிறதா உனக்கு?” என்று கேட்க. குளத்து நீரில் தலையில் கிரீடம், முகத்தில் வாஞ்சை என்று மன்னர் தெரிய திடுக்கிட்டு எழுந்தார் அந்த ஏழை.  அரசே... நீங்கள் என்று தெரியாமல் அமர்ந்துகொண்டே பதில் சொல்லிவிட்டேன்… என்னை மன்னிக்க வேண்டுகிறேன்’ என்று பதறினார். அதனால் ஒன்றுமில்லை. சரி ‘வா… இன்று நீ என்னோடும் அரசியோடும் விருந்து உண்ணப்போகிறாய்” என்று அவரைப் பேசவிடாமல் இழுத்துச் சென்று அவரின் தேரில் ஏற்றிக்கொண்டு, அரண்மனைக்கு விரைந்தார் மன்னர். ‘போய் குளித்துவிட்டு, உடைமாற்றிக் கொண்டு வா... என்று தனக்கென்று வாங்கி வைத்திருந்த புதிய ஆடைகளில் ஒன்றை அவருக்குக் கொடுத்தார். சற்றுநேரம் கழித்து, குளித்துவிட்டுப், புத்தாடை அணிந்து வந்த அந்த ஏழைக்கு அறுசுவை விருந்து கொடுத்தார் மன்னர். சாப்பிட்டு முடித்ததும் அந்த ஏழையின் கையில் ஒரு குடம் நிறைய பொற்காசுகளைக் கொடுத்து, ‘இன்றிலிருந்து நீ ஏழை இல்லை…இந்தப் பணத்தை வைத்து நீ விரும்பும் தொழிலை நேர்மையாக செய்து கௌரவமாக வாழ்ந்துகொள்” என்று வாழ்த்தினார். அதுவரை அமைதியாக இருந்த ஏழையின் கண்ணில் தாரை தாரையாகக் கண்ணீர் கொட்டியது. “ஏனப்பா அழுகிறாய்?” என்று மன்னர் கேட்க. “நான் இதுநாள் வரை பிறவி ஏழை என்று மட்டும்தான் நினைத்திருந்தேன் அரசே, ஆனால், இந்தத் தருணம்தான் நான் ஒரு பிறவி முட்டாள் என்று புரிந்துகொண்டேன்” என்று சொன்னார்.“ஏன் அப்படிச் சொல்கிறாய்”என்று மன்னர் வினவ, “வாழ்க்கையில் இன்றுதான் முதல் முறையாக கோபுரத்தைப் பார்த்து என்னை ஏன் இப்படி வைத்திருக்கிறாய் என்று கடவுளிடம் கேட்டேன். கேட்ட சில நிமிடங்களில் உங்களை அனுப்பி என் தலையெழுத்தையே மாற்றிவிட்டார். கடவுளிடம் நாம் நம்பிக்கையுடன் வேண்டும்பொழுது, உங்களைப் போன்று பலர் வழியாக உதவக் காத்திருக்கிறார் என்பதை இன்றுவரைப் புரியாமல் ஒரு முட்டாளாகத்தானே இருந்துள்ளேன்” என்று சொல்லி அழுதார்.

ஆபிராகம், ஈசாக், யாக்கோபு, ரூத்து, யோபு, தாவீது, சாலமோன் போன்ற கடவுளின் எண்ணற்ற அடியார்கள் கடவுளை நம்பியதால் வாழ்வைப் பெற்றுக்கொண்டனர். குறிப்பாக யோபுவின் வாழ்வில் அத்தனைத் துயரங்களும் அடுக்கடுக்காய் அணிவகுத்து நின்றபோதும், கடவுள் மீது கொண்ட நம்பிக்கையில் நிலைத்து நின்றார். அதனால்தான் அவர் அனைத்தையும் திரும்பப் பெற்றுக்கொண்டார். தளராத நம்பிக்கையுடன் ஆண்டவர் இயேசுவை நாடித்தேடி வந்த அனைவரும் குணம் பெற்றனர் எனப் புதிய ஏற்பாட்டில் வாசிக்கின்றோம். ஆகவே, யானைக்குத் தும்பிக்கை பலமாய் இருப்பதுபோல, நமதுத் துயர நேரங்களில் நாம் பெற்றுள்ள இறைநம்பிக்கை நமக்குப் பலமாய் இருக்கட்டும். அதற்கான அருள்வரங்களை இந்நாளில் இறைவனிடம் கேட்டு மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

01 October 2022, 13:56