தேடுதல்

இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால்  Matteo Zuppi இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Matteo Zuppi  

அனைவரையும் உடன்பிறப்புக்களாக ஏற்கும் மனநிலை

முதியோருக்கு பாதுகாப்பையும் இளையோருக்கு வழிகாட்டுதலையும் வழங்கவேண்டிய சமுதாயத்தின் கடமையை வலியுறுத்திய கர்தினால் Zuppi.

கிறிஸ்டோபர் பிரான்சிஸ் - வத்திக்கான்

சேதமடைந்திருந்த இறைவனின் ஆலயத்தை சீராக்கியது மட்டுமல்ல, படைப்பனைத்தையும் உடன்பிறப்புகளாகக் கண்ட அசிசியின் புனித பிரான்சிஸ் அவர்களின் எடுத்துக்காட்டை பின்பற்ற கிறிஸ்தவர் ஒவ்வொருவருக்கும் கடமை உள்ளது என உரைத்தார், கர்தினால் Matteo Zuppi

அக்டோபர் 4, இச்செவ்வாய்க்கிழமை, திருஅவையில் சிறப்பிக்கப்பட்ட அசிசியின் புனித பிரான்சிஸ் விழாவையொட்டி, அவர் உடல் வைக்கப்பட்டிருக்கும் அசிசி நகர் புனித பிரான்சிஸ் பசிலிக்காவில் திருப்பலி நிறைவேற்றி மறையுரையாற்றிய இத்தாலிய ஆயர் பேரவைத் தலைவர் கர்தினால் Zuppi அவர்கள், நமக்கு அடுத்திருப்பவர் அனைவரையும் உடன்பிறப்புக்களாக ஏற்றுக்கொள்ளும் மனநிலையை புனித பிரான்சிசிடம் இருந்து கற்றுக்கொள்வோம் என விண்ணப்பித்தார்.

கோவிட் பெருந்தொற்று காலத்தில் இவ்வுலக மக்கள் எதிர்கொண்ட துயரங்களையும் தன் மறையுரையின்போது எடுத்துரைத்த இத்தாலிய பேரவைத்தலைவர், மனித குலத்தை –‘மற்றவர்’ என்று பிரித்துப் பார்க்காமல், 'நாம்' என்று அனைவரையும் இணைத்துப் பார்க்கும் பக்குவத்தை இந்த கோவிட் பெருந்தொற்று காலம் நமக்குத் தந்துள்ளது என அறிவித்தார்.

கோவிட் பெருந்தொற்றுக் காலத்தைத் தொடர்ந்து தற்போது, அச்சம், வன்முறை, விரோத மனப்பான்மைகள் மற்றும் போரால் இந்த உலகம் பாதிக்கப்பட்டுவரும் இவ்வேளையில், அன்பெனும் ஆயுதம் கொண்டு இவைகளை வெற்றி காணமுடியும் என புனித பிரான்சிஸ் அசிசி நமக்கு காண்பிக்கிறார் எனவும் எடுத்துரைத்த கர்தினால் Zuppi அவர்கள், பெருந்தொற்று காலத்தில் அச்சமுற்று நம்பிக்கையிழந்திருந்த மனித குலத்திற்கு, மருத்துவப்பணியாளர்கள், காவல்துறையினர், பிறரன்புப் பணியாளர்கள் என எண்ணற்றோர் தங்கள் சிறப்புப் பணிகள் வழியாக நம்பிக்கையை ஊட்டியது மட்டுமல்ல, தங்கள் உயிரையும் தியாகம் செய்து நம்மைக் காத்துள்ளனர் என உரைத்து அவர்களுக்கு தன் பாராட்டுக்களையும் வெளியிட்டார்.

நான் நோயுற்றிருந்தேன், என்னை காண வந்தீர்கள் என இயேசு கூறும் வார்த்தைகளுக்கு ஒப்ப, தியாக வாழ்வு வாழ்ந்து சென்றுள்ள இவர்கள், நாம் ஒவ்வொருவரும் ஒருவரையொருவர் சார்ந்து வாழ்கிறோம் என்ற புதிய வாழ்வுமுறையை நமக்குக் கற்றுத்தந்துள்ளனர் எனவும் கூறினார் கர்தினால் Zuppi

மற்றவர்களுக்கு உதவுவது என்பது, நாம் நம்மையே கண்டுகொள்ள உதவுகின்றது என்பதையும் சுட்டிக்காட்டிய கர்தினால், முதியோருக்கு பாதுகாப்பையும் இளையோருக்கு வழிகாட்டுதலையும் வழங்கவேண்டிய சமுதாயத்தின் கடமையையும் வலியுறுத்தினார்.

இரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்குவர திருத்தந்தையோடு இணைந்து நாமும் இறைவேண்டல் செய்வோம் என்ற விண்ணப்பத்தையும் விடுத்து தன் மறையுரையை நிறைவுச்செய்தார் கர்தினால் Zuppi.

அக்டோபர் 4ம் தேதி அசிசி நகர் பசிலிக்காவில் நிறைவேற்றப்பட்ட திருப்பலியில் இத்தாலிய அரசுத்தலைவர் செர்ஜியோ மத்தரெல்லா அவர்களும் கலந்துகொண்டார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2022, 13:45