தேடுதல்

புனித ஜான் இலாத்தரன் பல்கலைக்கழகம் புனித ஜான் இலாத்தரன் பல்கலைக்கழகம் 

250 ஆவது ஆண்டைக் கொண்டாடும் இலாத்தரன் பல்கலைக்கழகம்

1773 ஆம் ஆண்டு திருத்தந்தை 14 ஆம் கிளமென்ட் அவர்களால் தொடங்கப்பட்ட புனித ஜான் இலாத்தரன் பல்கலைக்கழகம், எண்ணற்ற இறையியலாளர்களையும் முனைவர்களையும் தொடர்ந்து உருவாக்கி வருகின்றது.

மெரினா ராஜ் - வத்திக்கான்

உலக ஆயர்கள் மாமன்றம், இரண்டாம் வத்திக்கான் பொதுச்சங்கத்தின் நிறை பலன் எனவும், ஒருவர் மற்றவருக்கு செவிமடுப்பதன் வழியாக திருஅவைக்கு தூய ஆவி கூறுவனவற்றிற்குச் செவிமடுக்க முடியும் எனவும் புனித ஜான் லாத்தரன் பல்கலைக்கழகத்தின் 250வது ஆண்டு விழாவில் கூறியுள்ளார் கர்தினால் மாரியோ கிரெக் (MARIO GRECH).

அக்டோபர் 4, இப்புதனன்று உரோம் நகர் இலாத்தரன் பல்கலைக்கழகத்தின் 250வது ஆண்டு விழாவை முன்னிட்டு அதன் தொடக்க விழாவில் பங்கேற்ற, உலக ஆயர்கள் மாமன்றத்தின் செயலர் கர்தினால் மாரியோ கிரெக் அவர்கள், திருஅவை எதிர்பார்க்காத வகையில் இம்மாமன்றம் பல புதிய நிலைகளைத் திறந்து, பலன்தரும் செயல்களை ஆற்றியுள்ளது எனவும் எடுத்துரைத்துள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் வரைவு ஏடுகள், செவிமடுக்கும் திருஅவையில் வாழும் கடவுளின் மக்கள் ஒவ்வொருவரையும் சென்றடைய வேண்டும் என்னும் நோக்கத்தில் எல்லா தலத்திருவைகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளன என்றும், கடவுள் மற்றும் பிறருக்குச் செவிமடுக்கும் செயல்முறையின் வழியாக மாமன்றச் செயல்பாடுகள் தொடர்ந்து நடக்கின்றன என்றும் எடுத்துரைத்தார்.  

லாத்தரன் பல்கலைக்கழகம்

1773ஆம் ஆண்டு திருத்தந்தை 14 ஆம் கிளமென்ட் அவர்களால் தொடங்கப்பட்டு இறையியலாளர்களையும் முனைவர்களையும் உருவாக்கிய புனித ஜான் இலாத்தரன் பல்கலைக்கழகம், 1980ஆம் ஆண்டு திருத்தந்தை புனித இரண்டாம் யோவான் பவுல் அவர்களால், திருத்தந்தையரின் பல்கலைக்கழகம் எனவும் அழைக்கப்பட்ட சிறப்புடையது.

இப்புதன் காலையில் நடைபெற்ற திருப்பலியை, திருத்தந்தையின் உரோம் மறைமாவட்ட பிரதிநிதி, கர்தினால் Angelo De Donatis அவர்கள் சிறப்பித்தார். மேலும், திருத்தந்தை வலியுறுத்தும் அமைதி, மற்றும் பொதுவான இல்லமாகிய பூமியைக் காத்தல் என்னும் அடிப்படையில் புதிதாகத் தொடங்க இருக்கும் கல்வி முயற்சிகள் நடைபெறும் எனவும்,  தொழில்நுட்ப வகையில் மட்டுமல்லாது, மெய்யியல், இறையியல் வகையிலும் பயன்தந்து பணியாற்றும் எனவும், அப்பல்கலைக்கழக அதிபர் Vincenzo Buonomo தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

06 October 2022, 14:08