தேடுதல்

மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ  

ஆசியத் திருஅவை, வறியோர், பிற மதங்களோடு நல்லிணக்கமாக இருக்க...

ஆசியா, அனைத்து மதங்களின் தொட்டிலாக, ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு கண்டமாக உள்ளது மற்றும், இக்கண்டத்தின் மண்ணின் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளோம் - கர்தினால் போ

மேரி தெரேசா: வத்திக்கான்

ஆசியத் திருஅவை, வறியோர், பிற மதங்கள், மற்றும், தான் வாழ்கின்ற கலாச்சாரத்தோடு நல்லிணக்கத்தில் வாழும் என்று தான் நம்புவதாக, FABC என்னும் ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பின் தலைவரான, மியான்மார் கர்தினால் சார்லஸ் மாங் போ அவர்கள் கூறியுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு உருவாக்கப்பட்டதன் ஐம்பதாம் ஆண்டு நிறைவைச் சிறப்பிக்கும் விதமாக, இம்மாதம் 12ம் தேதி தாய்லாந்தின் பாங்காக்கில் தொடங்கிய அக்கூட்டமைப்பின் பொதுப் பேரவை, இம்மாதம் 30ம் தேதி, அதாவது இஞ்ஞாயிறன்று நிறைவுபெறவுள்ளவேளை, வத்திக்கான் செய்திகளுக்குப் பேட்டியளித்த கர்தினால் போ அவர்கள் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஆசியாவிலுள்ள திருஅவைகளுக்கு தூய ஆவியார் கூறுவது என்ன?” என்பது குறித்து, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இப்பொதுப் பேரவையின் தொடக்க நிகழ்வுக்கு அனுப்பிய காணொளிச் செய்தியை மையப்படுத்தி தன் எண்ணங்களைப் பகிர்ந்துகொண்ட கர்தினால் போ அவர்கள், இரண்டரை வாரங்களாக நடைபெற்றுவரும் இப்பொதுப் பேரவையில் தூய ஆவியாரின் வழிநடத்துதலைத் தெளிவாக உணர முடிகின்றது என்று தெரிவித்துள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு
ஆசிய ஆயர் பேரவைகள் கூட்டமைப்பு

ஆசியா, ஆசிர்வதிக்கப்பட்ட கண்டம்

ஆசியா, அனைத்து மதங்களின் தொட்டிலாக, ஆசிர்வதிக்கப்பட்ட ஒரு கண்டமாக உள்ளது மற்றும், இக்கண்டத்தின் மண்ணின் பல்வேறு கலாச்சாரங்களிலிருந்து ஆசிர்வாதத்தைப் பெற்றுள்ளது, அதேநேரம், இராணுவமயம், அணுஆயுதமயம் என நிறைய சவால்களையும் எதிர்கொள்கின்றது எனவும் கூறியுள்ளார், கர்தினால் போ.  

ஆசியக் கண்டம், மிக அதிகமான ஏழைகளையும் பிறப்பிக்கிறது என்று கவலையோடு குறிப்பிட்ட கர்தினால், ஆசியா, அமைதியைக் கட்டியெழுப்புவது உட்பட பெரிய சவால்களைக் கொண்டிருக்கிறது என்றும், புதியவழி நற்செய்திப் பணிக்கு, அமைதியைக் கட்டியெழுப்புதல், உரையாடல் மற்றும், ஒப்புரவு ஆகியவை, புதிய சொல்லாடல்களாக உள்ளன என்றும், இவை மிகவும் அவசியமானவை என்றும் குறிப்பிட்டுள்ளார்.

தூய ஆவியார், அமைதி மற்றும், ஒப்புரவை நோக்கி வழிநடத்தி வருகிறார், FABC அமைப்பை உருவாக்கிய தந்தையரும், ஏழைகள், பிற மதங்கள், மற்றும், கலாச்சாரங்களோடு நல்லிணக்கத்தோடு வாழவேண்டிய பாதையை ஏற்கனவே காட்டியுள்ளனர், தற்போது சுற்றுச்சூழல் மற்றும் இயற்கையோடும் நல்லுறவோடு வாழவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என்று தன் பேட்டியில் தெரிவித்துள்ளார், யாங்கூன் பேராயரான கர்தினால் போ.

அனைத்து ஆசியர்களின் கடமை

ஆசியாவில் திருமுழுக்குப் பெற்றுள்ள அனைவரும் தங்கள் நாடுகளில் அமைதியைக் கட்டியெழுப்பும் பாதையில் நடப்பதற்குத் தூய ஆவியார் வழிநடத்துகிறார் என்றும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்குப் பிறகும், ஆசியாவில் நாம் இரண்டு விழுக்காட்டினராகவே இருக்கின்றோம் என்பது நமக்குச் சவாலாக உள்ளது என்றும் கூறியுள்ள கர்தினால் போ அவர்கள், நாம் சிறுபான்மையினராக இருந்தாலும், இப்பூமியின் உப்பாகவும், உலகின் ஒளியாகவும் இருக்கின்றோம் என்று ஆசியக் கத்தோலிக்கரை ஊக்கப்படுத்தியுள்ளார்.

ஆசிய ஆயர் பேரவைகளின் கூட்டமைப்பு நடத்துகின்ற இப்பொதுப் பேரவையின் இறுதியில் அறிக்கை ஒன்றையும் ஆயர்கள் வெளியிடவுள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

29 October 2022, 13:25