தேடுதல்

நல்லவற்றைச் செய்து நலம் தரும் இயேசு நல்லவற்றைச் செய்து நலம் தரும் இயேசு  

விவிலியத் தேடல்: திருப்பாடல் 34-7- தீயோரைத் தீவினையே சாகடிக்கும்

தீமையின் சுவர்களைத் தகர்த்தெறிந்துவிட்டு நன்மையின் சுவர்களைக் கட்டி எழுப்புவோம்.
திருப்பாடல் - 34- 7ஆம் பகுதி

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'உளம் நைந்தோரைக் காக்கும் கடவுள்!' என்ற தலைப்பில் திருப்பாடல் 34-இல் 18 முதல் 20 வரை உள்ள இறைவசனங்கள்  குறித்துத் தியானித்தோம். இவ்வார விவிலியத் தேடலில் அதனைத் தொடர்ந்து வரும் 21, 22 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானித்து இத்திருப்பாடலை நிறைவுக்குக் கொண்டுவருவோம். இப்போது இறைப்பிரசன்னதில் அவ்வார்த்தைகளை வாசிப்போம். தீயோரைத் தீவினையே சாகடிக்கும்; நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர். ஆண்டவர் தம் ஊழியரின் உயிரை மீட்கின்றார்; அவரிடம் அடைக்கலம் புகும் எவரும் தண்டனை அடையார் (வசனங்கள் 21, 22). மேற்கண்ட இந்த இரண்டு இறைவசனங்களில் தீயோரைத் தீவினையே சாகடிக்கும் என்றும், நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர் என்றும் இரண்டு சிந்தனைகளை நமக்கு முன்வைக்கின்றார் தாவீது அரசர்.

முதலாவதாக, தீயோரைத் தீவினையே சாகடிக்கும் என்ற வார்த்தைகள் குறித்த நமது தியானச் சிந்தனைகளைத் தொடங்குவோம். ஒரு காலத்தில் இரண்டு நாடுகளை இரண்டு மன்னர்கள் அருகருகே ஆட்சி செய்து வந்தனர். முதலாமவர் ஆர்யன் என்ற மன்னர். இவர் மிகப்பெரிய போர்வீராக இருந்தவர். மக்கள்மீது ஆழமான அன்பு கொண்டவர். மக்களின் தேவைகளை அறிந்து அவைகளை உடனுக்குடன் நிறைவேற்றி வந்தார். நீதி தவறாதவர். இதனால் மக்கள் இம்மன்னர் மேல் மிகுந்த அன்பு கொண்டிருந்தனர். அவருக்காகத் தங்கள் இன்னுயிரையும் இழக்க முன்வந்தனர். இரண்டாமவர், வைஷல் என்ற மன்னர். இவர் ஆர்யன் என்ற மன்னருக்கு நேரெதிரானவர். அதாவது, சுயநலக்காரர். மக்களின் நலனில் சிறிதும் அக்கறை இல்லாதவர். அவர்களின் துயரத்தில் மகிழ்ந்தவர். மக்கள் அனைவரையும் பொறாமைக்கண் கொண்டு பார்த்தவர். மக்கள் மேல் அதிகமான வரிகளைச்  சுமத்தியவர். பெருந்தன்மை குணமில்லாதவர். பழிக்குப் பழி வாங்கும் கொடியவர். அநீதியான முறையில் தீர்ப்புகள் வழங்கக்  கூடியவர். இத்தகைய தீச்செயல்களால் மக்களின் வெறுப்புக்கு அதிகம் ஆளாகியிருந்தார். இந்நேரத்தில் சுல்தான் என்ற மாபெரும் மன்னர் இந்நாடுகள்மீது போர் தொடுத்தார். இந்த இருநாட்டு மன்னர்களும் குறைந்த அளவேப் போர்வீரர்களைக் கொண்டிருந்தனர். அப்போது சுல்தான் படையின் போர்த்திறமையை அறிந்திருந்த ஆர்யன் மன்னரின் மக்கள் அனைவரும் அவருக்கு ஆதரவாக ஒன்றுதிரண்டு சுல்தான் படையினருக்கு எதிராகப் போரிட்டு அவர்களை முறியடித்து  வெற்றிகண்டனர்.

ஆனால் அதேவேளையில், வைஷல் மன்னரின் தீச்செயல்களால் மக்கள் அவருக்கு ஆதராவாகப் போரிட முன்வரவில்லை. இந்நிலையில் சுல்தான் படைகள் வைஷல் மன்னரை சுலபமாக வென்று அவரைச் சிறைபிடித்தனர். மக்களும் பெருந்துயருக்கு உள்ளாகினர். தனது தீச்செயல்களுக்கான தண்டனையை மன்னர் வைஷல் அனுபவித்தார். வினை விதைத்தவர் வினை அறுப்பார், திணை விதைத்தவர் திணை அறுப்பார் என்று நம் முன்னோர்கள் கூறியுள்ளனர். இதனை, தன்நெஞ் சறிவது பொய்யற்க பொய்த்தபின் தன்நெஞ்சே தன்னைச் சுடும் (குறள் 293) என்கின்றார் திருவள்ளுவர். ஒருவர் தன் நெஞ்சம் அறிவதாகிய ஒன்றைக் குறித்துப் பொய்ச் சொல்லக்கூடாது, பொய் சொன்னால் அதைக்குறித்துத் தன் நெஞ்சமே தன்னை வருத்தும் என்று இக்குறளுக்கு விளக்கம் தருகிறார் மு.வரதராசன்.

தாவீதின்மேல் கொண்டிருந்த பொறாமை, காழ்ப்புணர்வு, பழிவாங்கும் எண்ணம் ஆகியவற்றால் மன்னர் சவுல் தனக்கான அழிவைத் தானே தேடிக்கொண்டார். அவர் அழிந்தது மட்டுமன்றி, அவருடைய படைவீரரும் அவருடன் சேர்ந்து அழிந்தனர். இதனால் பெலிஸ்தியரிடமிருந்து தப்பிச்செல்ல மக்கள் நாட்டைவிட்டு ஓடிவிட்டனர். கடவுளின் அடியவரான தாவீது என்ற ஒரு மனிதரைப் பழிவாங்குவதற்காக ஒட்டுமொத்த இஸ்ரயேல் இனத்தையும் சிதறுண்டு போகும்படிச் செய்தார் சவுல். பெலிஸ்தியர் இஸ்ரயேலுக்கு எதிராகப் போரிட்டனர்; பெலிஸ்தியருக்கு முன் இஸ்ரயேலர் புறமுதுகிட்டு ஓடினர்; பலர் கில்போவா மலையில் வெட்டுண்டு வீழ்ந்தனர். பெலிஸ்தியர் சவுலையும் அவர் புதல்வர்களையும் பின் தொடர்ந்து, அவர் தம் புதல்வர்களான யோனத்தான், அபினதாபு, மல்கிசுவா ஆகியோரை வெட்டிக் கொன்றனர். சவுல் இருந்த இடத்தில் போர் மிகவும் வலுத்தது; வில்வீரர் அவர் மீது குறி வைத்துத் தாக்க, அவரும் அந்த வில்வீரர்களால் பெரிதும் காயமுற்றார். அப்பொழுது சவுல் தம் படைக்கலன் தாங்குவோனை நோக்கி, “இந்த விருத்தசேதனமற்றோர் என்னைக் குத்திக் கொன்று எனக்கு அவமானத்தை வருவிக்காவண்ணம் நீ உன் வாளை உருவி என்னைக் குத்திக் கொன்று விடு,” என்றார். ஆனால், அவருடைய படைக்கலன் தாங்குவோன் மிகவும் அஞ்சியதால் அதற்கு அவன் இசையவில்லை. ஆதலால், சவுல் தம் வாளை எடுத்து, தாமே அதன்மீது வீழ்ந்து மடிந்தார். (1 சாமு 31:1-4).

தமிழ் இலக்கியத்தில் காணப்படும் பிரபந்தங்களில் சதகம் எனப்படும் பிரபந்தவகையும் உண்டு. பல உலக நீதிக் கருத்துக்களையும், எதார்த்தமாக நாம் உலகில் பார்ப்பதையும், உலக நடப்புகளையும், மக்களின் இயல்புகளையும், பொதுவாக உலகியல் உண்மைகளையும் சொல்லக்கூடிய பாடல்கள் நூறைக் கொண்டது சதகம். குமரேச சதகம், தண்டலையார் சதகம் ஆகியவை அவைகளில் மிகவும் பிரபலமானவை. அதில் தண்டலையார் சதகத்திலுள்ள ஒரு பாடல், மண்ணுலகில் பிறர் குடியை வஞ்சனையிற் கெடுப்பதற்கு மனத்தினாலே உன்னிடினும் உரைத்திடினும் அவன் தானே கெடுவன் என்பதுண்மையன்றோ தென்னவன் சோழன் பணியும் தண்டலைநீ ணெறியாரே தெரிந்து செய்யும் தன்வினை தன்னைச்சுட வோட்டப்பம் வீட் டைச்சுடவுந்தான் கண்டோமே என்று கூறுகிறது. ஒருவர் பிறர்குடியை வஞ்சனையாகக் கெடுப்பதற்கு மனதினால் நினைத்தாலும் அல்லது அவ்வாறு செய்வதாகக் கூறினாலும் கூட அவனே தானாகக் கெட்டுப்போவான் என்பது இப்பாடலின் கருத்து.

'தன்வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்'. இந்தப் பழமொழிக்குப் பின்னணியாக ஒரு கதை உண்டு. பட்டினத்தார் எல்லாவற்றையும் விட்டுவிட்டு துறவியாக மாறியவர். தொடக்கத்தில் அவர் அதே ஊரில் இருந்துகொண்டு மண்டபங்களில் தங்கியும் வீடுவீடாகப் பிச்சையெடுத்தும் திரிந்தார். அந்த ஊரில் தனவணிகர்கள் மிகவும் செல்வாக்காக இருந்தனர். அவர்களிடையே பெரும் வணிகராகப் பல கப்பல்கள், வணிகச்சொத்துக்கள் ஆகியவற்றுடன் பெரும் செல்வந்தராக விளங்கியவர் பட்டினத்தார். அவர் குபேரனுடைய அவதாரம் என்றும் சொல்வர். அவர் பிச்சையெடுத்துத் திரிந்தது அவருடைய உறவினர்களுக்கு மிகவும் அவமானமாக இருந்தது. குறிப்பாக அவருடைய தங்கைக்கு அது அறவே பிடிக்கவில்லை. தங்கையின் வீட்டில் சம்பந்தம் செய்ய வந்தவர்களும்கூட தங்கையின் பிள்ளைக்குத் தாய்மாமனாகிய பட்டினத்தார் பிச்சையெடுப்பதைக் கருத்தில்கொண்டு சம்பந்தத்தையும் தட்டிக் கழித்துவிட்டனர். ஆகவே பட்டினத்தாரைக் கொன்றுவிட தங்கை திட்டமிட்டாள். ஒருநாள், "அண்ணா, உனக்கு மிகவும் பிடித்த அப்பம் சுட்டு வைத்திருக்கிறேன். வந்து சாப்பிட்டுவிட்டுப் போ" என்று வீட்டிற்கு அழைத்தாள். அந்த அப்பத்தில் நஞ்சை கலந்துவிட்டாள். அப்பத்தைக் கையில் வாங்கிய மாத்திரத்தில் அதில் நஞ்சு கலந்திருப்பது பட்டினத்தாருக்குத் தெரிந்துவிட்டது. உடனே, "தன் வினை தன்னைச் சுடும்; ஓட்டப்பம் வீட்டைச் சுடும்" என்று சொல்லியவாறு அப்பத்தைத் தங்கையின் வீட்டின் கூரைமீது வீசி எறிந்தார். உடனே வீட்டுக்கூரை தீப்பற்றி எரிந்தது. அதிலிருந்து இப்பழமொழி ஏற்பட்டது (டாக்டர் எஸ்.ஜெயபாரதி).

தாவீதுக்கு உதவிய பல குருக்களையும், அவர்தம் நண்பர்களையும் மன்னர் சவுல் கொன்றதால், அவரின் மொத்த குடும்பமும் அழிந்துபோனது (1 சாமு 31:8-10). சவுல் என்ன விதைத்தாரோ, அதனையே அறுவடை செய்துகொண்டார்.

'நேர்மையாளரை வெறுப்போர் தண்டனை பெறுவர்' என்பதை இரண்டாவது கருத்தாக முன்வைக்கின்றார் தாவீது. நேர்மையாளரான தாவீதை வெறுத்த சவுல் மன்னரின் முடிவு அகோரமாக அமைந்தது என்பதைக் கண்டோம். இறைவாக்கினர்களான எசாயா, எரேமியா, ஆமோஸ், யோவேல், ஓசேயா போன்ற நேர்மையாளர்களின்  சொற்களைக் கேளாத இஸ்ரயேல் இனத்து மன்னர்களெல்லாம் அழிந்து மடிந்தார்கள் என்பதையும் நாம் அறிய வருகிறோம். நேர்மையாளரான இயேசுவைக் காட்டிக்கொடுத்த யூதாசு இஸ்காரியோத்து தூக்குப் போட்டுக் கொண்டான் என்பது நமக்குக் கொடுக்கப்படும் செய்தி (மத் 27:5).

பிரபாகரன் என்ற ஒற்றை மனிதரைப் பழிதீர்க்க வேண்டும் என்பதற்காக ஒன்றுமறியா அப்பாவித் தமிழர்களை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்த இராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே, பொன்சேகா, யூதாஸின் வழியில் தன் சொந்த தமிழினத்தைக் காட்டிக்கொடுத்த கருணா, டக்ளஸ் தேவனாந்தா ஆகியோரின் துரோகச் செயல்களால், இன்று ஒட்டுமொத்த இலங்கையும் பொருளாதார நெருக்கடியில் சிக்கிச் சீரழிந்து வருகிறது. தீமையின் வேர்களான இராஜபக்சே, கோத்தபய ராஜபக்சே ஆகிய இருவரும் தன் சொந்த மக்களாலாலேயே நாட்டைவிட்டு துரத்தியடிக்கப்பட்டுள்ளனர். இன்றைய உலகில் பல்வேறு இடங்களில் நிகழ்ந்து வருவதும் இதுதான். வாளெடுத்தவர் வாளால் மடிவர் என்று நமதாண்டவர் இயேசு கூறியது போன்று தீமையை விதைத்தவர் அந்தத் தீமையாலேயே அழிவர் என்பது நாம் காணும் உண்மை. அதனால்தான் தீயோரைத் தீவினையே சாகடிக்கும் என்கிறார் தாவீது. ஆகவே, தீமையின் சுவர்களைத் தகர்த்தெறிந்துவிட்டு நன்மையின் சுவர்களைக் கட்டி எழுப்புவோம். அதற்கான அருள்வரங்களை இறைவனிடம் இந்நாளில் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

25 October 2022, 11:38