சொந்த நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயரும் மக்கள் சொந்த நாடுகளை விட்டு வேறு நாடுகளுக்கு புலம்பெயரும் மக்கள்  

மனிதநேய வாயில்களை உருவாக்கும் Sant’Egidio அமைப்பு

புலம்பெயர்தலினால் தங்களது வாழ்வை இழந்த மக்களை நினைவுகூரும்விதமாக ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 3ஆம் நாள் தேசிய புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர நாள் இத்தாலியில் கொண்டாடப்படுகின்றது.

மெரினா ராஜ்- வத்திக்கான்

பாதுகாப்பான வாழ்க்கை வாழ விரும்பி ஐரோப்பாவை நோக்கி வரும் ஏராளமான புலம்பெயர்ந்தோரை வரவேற்று  மனிதநேய வாயில்களை உருவாக்கி மறுவாழ்வை ஏற்படுத்தும் பணியை Sant’Egidio அமைப்பு தொடர்ந்து செய்துவருகின்றது என்று அவ்வமைப்பின் புலம்பெயர்ந்தோர் துறை பொறுப்பாளர் Cecilia Pani தெரிவித்துள்ளார்.

அக்டோபர் 3 இத்திங்கள், இத்தாலியின் தேசிய புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்  நாளை முன்னிட்டு, தங்களது Sant’Egidio அமைப்பு குறித்த செய்திகளை வத்திக்கான் செய்தியாளரிடம் பகிர்ந்துகொண்டபோது இவ்வாறு கூறியுள்ளார் அவ்வமைப்பின் பொறுப்பாளர் Pani. 

ஒன்பது ஆண்டுகளுக்குமுன் Lampedusa தீவுக்கருகே கடலில் நிகழ்ந்த படகு விபத்தில் உயிரிழந்த ஏறக்குறைய 368 பேரை நினைவுகூரும் விதமாக உருவாக்கப்பட்ட இந்நாள், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்க்கு நல்ல பாதுகாப்பான வாழ்வினை உருவாக்கிக் கொடுக்க பல்வேறு முயற்சிகளையும் செயல்திட்டங்களையும் செய்துவருகின்றது எனவும், இன்று வரை இவ்வமைப்பினால் ஏறக்குறைய 5,000 பேர் ஐரோப்பாவிற்குள் பாதுகாப்பாக புலம்பெயர்ந்துள்ளனர் எனவும் தெரிவித்துள்ளார் Pani.

புலம்பெயர்தல் மற்றும் குடிபெயர்தலின்போது, 22,000 பேர் தங்களது வாழ்வை இழந்துள்ளனர் என்று கவலை தெரிவித்த Pani அவர்கள், 2016ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட Sant’Egidio அமைப்பின் புலம்பெயர்ந்தோர் பிரிவு, ஆப்ரிக்கா மற்றும் லெபனோன் நாடுகளிலிருந்து வரும் புலம்பெயர்ந்தோரை இத்தாலி மட்டுமல்லாது பிரான்ஸ், பெல்ஜியம், போன்ற நாடுகளுக்கும் பாதுகாப்பாக பயணிக்க உதவியுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

2013ஆம் ஆண்டு திருத்தந்தை லாம்பெதுசாவிற்கு மேற்கொண்ட திருப்பயணத்தை நினைவுகூர்ந்த Pani அவர்கள், திருத்தந்தை வலியுறுத்துவதுபோல புலம்பெயர்ந்தோரின் பாதுகாப்பு, வளர்ச்சி, ஒன்றிப்பு போன்றவற்றிற்காகத் தொடர்ந்து Sant’Egidio அமைப்பு உழைப்பதாகவும், புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்க்கு வேலை, பாதுகாப்பு, மொழி அறிவு போன்றவற்றைக் கொடுக்க வாய்ப்புகள் அந்தந்த அரசால் வழங்கப்பட வேண்டும் என வலியுறுத்தி வருவதாகவும் கூறியுள்ளார்.

இத்தாலி நாட்டில் வாழும்  புலம்பெயர்ந்தோர் மற்றும் குடிபெயர்ந்தோர்க்கு பிறக்கும் சிறார், தங்களது பள்ளி, கல்லூரி  மற்றும் மொத்த  வாழ்வையும் இத்தாலியிலேயே செலவிடுகின்றனர் எனவும், தங்களது பெற்றோரின் பூர்வீக நாடுகளைப் பற்றி அறியாத அச்சிறாருக்கு 18 வயதிற்கு முன்பாகவே இத்தாலியக் குடியுரிமைக் கொடுக்கப்பட  வேண்டும் எனவும், Sant’Egidio இதற்காகவும் உழைத்துவருகிறது எனவும் Pani அவர்கள் எடுத்துரைத்தார்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

04 October 2022, 14:07