தேடுதல்

அருளாளர்கள் ஜான் ஸ்கலாபிரினி,  Artemide Zatti புனிதர்களாக அறிவிக்கப்பட்ட திருப்பலி அருளாளர்கள் ஜான் ஸ்கலாபிரினி, Artemide Zatti புனிதர்களாக அறிவிக்கப்பட்ட திருப்பலி 

வழிசொல்லும் ஒளிச்சுடர்: புலம்பெயர்ந்தோரின் தந்தை, மகன்

புனித ஆயர் ஸ்கலாபிரினி அவர்களின் இறைவாக்குப்பண்பு, பிறரன்பு, புலம்பெயர்ந்தோர் மீது கொண்டிருந்த அன்பு, போதனைகள் ஆகிய அனைத்தும், ஒரு புனித ஆயரை நமக்குத் தந்துள்ளன

மேரி தெரேசா: வத்திக்கான்

பத்து வயது சிறுமி ஒருவள், கையில் தூக்குவாளியுடன், சிறிய உணவகம் ஒன்றிற்குச் சென்று, உணவக முதலாளியிடம், அண்ணா...! அம்மா பத்து இட்லி வாங்கி வரச் சொன்னாங்க...! காசு நாளைக்குத் தருவாங்களாம் என்றாள். "ஏற்கனவே கணக்கில் நிறைய பாக்கி இருக்கு.... அம்மாக்கிட்டே சொல்லுமா....இப்போ வாங்கிட்டுப்போ...என்று சொல்லி, இட்லி பார்சலையும், சாம்பார் நிறைத்த தூக்குவாளியையும் அந்த சிறுமியிடம் கொடுத்தார் அவர். சிறுமியும். "சரி... அம்மாகிட்ட சொல்றேன்... போயிட்டு வரேன் அண்ணே" என்றபடியே சென்றுவிட்டாள். இதைக் கவனித்துக்கொண்டிருந்த, அந்தக் கடையில் வாடிக்கையாய் சாப்பிடும் ஒருவர், முதலாளியிடம், "நிறைய பாக்கி இருக்கிறபோது ஏன் மறுபடியும் குடுக்குறீங்க?" என்று கேட்டார். அதற்கு அந்த முதலாளி,  அட சாப்பாடுதானே, நான் முதல் போட்டுத்தான் கடை நடத்துறேன். இருந்தாலும் இது மாதிரி குழந்தைகள் வந்து கேட்கும்போது மறுக்க மனசு வரல, அதெல்லாம் குடுத்துடுவாங்க, என்ன கொஞ்சம் லேட் ஆகும், எல்லாருக்கும் பணம் சுலபமாவா சம்பாதிக்க முடியுது? குழந்தை பசியால் கேட்டிருக்கும்.. அதான் அந்தக் குழந்தையை அனுப்பி இருக்காங்க, நான் கொடுத்தனுப்புவேன் அப்டிங்கற அவங்க நமபிக்கையை நான் பொய்யாக்க விரும்பல சார், நான் உழைச்சி சம்பாதிக்கிற காசு வந்துடும், ஆனா இப்போதைக்கு அந்தக் குடும்பம் சாப்பிடுதுல, அதுதான் முக்கியம். நான் உணவு தரவில்லை என்றால், அந்தக் குழந்தை, தன் தாய்க்காக திருடப் போகும், அல்லது அந்தத் தாய், தன் குழந்தையின் பசிக்காக, வேறு தவறுகள் செய்வார். அதனால், நான் என்ன நஷ்டப்பட்டாலும் சரி, நமது சமூகத்தில் சூழ்நிலையின் காரணமாக இயல்பாக நடக்கக்கூடிய இரண்டு தவறுகளைத் என்னால் தடுக்க முடிந்திருக்கிறது என்றார். மேலும் அந்த உணவக முதலாளி கூறினார் - எனக்கும் இதே மாதிரியன அனுபவம் உண்டு. நான் கும்பகோணத்தில் இருந்தபோது என்னுடைய இளமைப் பருவத்தில் ஒரு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. புட்டு விற்கும் ஒரு பாட்டியிடம் இதேபோல கடன் சொல்லி அவ்வப்போது என் பசியைப் போக்கிக்கொள்வேன். அப்பொழுது அந்தப் பாட்டியிடம், ஏன் பாட்டி, நான் கடனைத் திருப்பித் தராமல் ஓடிவிட்டால், என்ன செய்வாய் என்று கேட்டேன். அதற்கு அந்தப் பாட்டி, அட போப்பா, நீ பணம் தந்தால் அது எனக்கு இலாபக் கணக்கு. பணம் தராமல் ஓடிப் போய்விட்டால், அது என் புண்ணியக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்று சொல்லி மெய்மறக்க சிரித்தார்.

புலம்பெயர்ந்தோர்

இக்காலக்கட்டத்தில், போர், இயற்கைப் பேரிடர்கள், கலவரங்கள் போன்ற காரணங்களால் இலட்சக்கணக்கான மக்கள் தங்களின் வீடுகள், சொத்துக்கள் என எல்லாவற்றையும் விட்டுவிட்டு தரமான வாழ்வுதேடி வேறு நாடுகளுக்கு புலம்பெயர்ந்து வருகின்றனர். வழிப்பயணத்தில் சந்திக்கும் விபத்துக்களால் பலர் இறந்தும் போகின்றனர். பல இடர்களுக்கு மத்தியில் மற்ற நாடுகளில் தஞ்சம் தேடும் இவர்களில் பலர், வேலையின்றி, வயிற்றுப் பசியைப் போக்குவதற்காக  கையேந்தும் நிலையைக் காண முடிகின்றது. இத்தகைய புலம்பெயரும் மக்களின் வேதனைகள், பிரச்சனைகள், இன்னல்கள் ஆகியவற்றை அறிந்து அவர்களின் துயர்போக்க தன்னையே அர்ப்பணித்தவர் அருளாளர் ஜொவான்னி பத்திஸ்தா ஸ்கலாபிரினி (Giovanni Battista Scalabrini). இவர் ஆற்றிய பணி, திருஅவையின் வருங்காலத்திற்கு வித்திட்டுள்ளது என்றே சொல்லவேண்டும்.

புனித ஜான் பாப்டிஸ்ட் ஸ்கலாபிரினி

புனித ஜான் பாப்டிஸ்ட் ஸ்கலாபிரினி
புனித ஜான் பாப்டிஸ்ட் ஸ்கலாபிரினி

ஜொவான்னி பத்திஸ்தா அல்லது ஜான் பாப்டிஸ்ட் ஸ்கலாபிரினி அவர்கள், பிற்காலத்தில் நடக்கவிருப்பதை முன்கூட்டியே அறிகின்ற ஓர் இறைவாக்கு கண்ணோட்டத்தோடு ஆற்றிய செயல், இன்று திருஅவைக்கும் நமக்கும் மரபுரிமைச் சொத்தாக உள்ளது. இவரது இறைவாக்கு கண்ணோட்டம், வரலாற்று மற்றும், சமூகவியல் சார்ந்ததாய் மட்டுமன்றி, கிறிஸ்துவின் இறப்பு மற்றும், உயிர்ப்பிலுள்ள அவரது ஆழமான நம்பிக்கையினால் மனித வரலாற்றில் கடவுளின் எல்லையில்லா திட்டத்தை அவரால் பார்க்க முடிந்தது. புலம்பெயர்ந்தோர் மற்றும், குடியேற்றதாரர்களின் துன்பங்கள் வழியாக, சந்திப்பு மற்றும், கலாச்சாரங்களுக்கும், மனநிலைகளுக்கும் இடையே மோதல்கள் வழியாக ஒரு புதிய உலகு தயாராகி வருகின்றது என்பதில் இவர் உறுதியாய் இருந்தார். இப்புதிய உலகில் நாடுகளும், மக்களும், ஒரே மனிதக் குடும்பத்திற்கு உரியவர்கள் என்பதைக் கண்டுகொள்வார்கள். அப்புதிய உலகில் ஒரே சீரான தன்மை இருக்காது, மாறாக, மூவொரு கடவுளின் உருவில் பன்மையில் ஒன்றிப்பு இயலக்கூடியதே என்பதை அருளாளர் ஸ்கலாபிரினி அவர்கள் அறிந்திருந்தார்.

ஜான் பாப்டிஸ்ட் ஸ்கலாபிரினி அவர்கள்,1839ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ம் தேதி இத்தாலியின் கோமோ மாவட்டத்திலுள்ள Fino Mornasco என்ற ஊரில் பிறந்தார். இவர், 1857ஆம் ஆண்டில் தனது 18வது வயதில் அருள்பணித்துவ பயிற்சிக் கல்லூரியில் சேர்ந்தார். 1863ஆம் ஆண்டில் அருள்பணியாளராகத் திருப்பொழிவு செய்யப்பட்ட இவர், கோமோ நகரின் புனித பர்த்தலோமேயோ பங்குப்பணியாளராகப் பொறுப்பேற்றபோது மறைக்கல்வி கற்றுக்கொடுப்பதில் ஆர்வம் காட்டினார். இவர் தனது 36வது வயதில் 1876ஆம் ஆண்டில் பியாச்சென்சாவின் ஆயராக அருள்பொழிவு செய்யப்பட்டார். தனது ஆயர் பணி வாழ்வில் பல மேய்ப்புப் பணிகளை உருவாக்கியிருந்தாலும், புலம்பெயர்ந்தோர் மீது இவர் காட்டிய அக்கறை, அவர் காலத்து மற்ற ஆயர்களிடமிருந்து இவரை வித்தியாசப்படுத்திக் காட்டியது.

ஆயர் ஸ்கலாபிரினி அவர்கள், 1880ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலான் இரயில் நிலையத்தில், ஜெனோவா செல்வதற்காக, தூசிகள் மற்றும், புதர்களுக்கு இடையே பெருமளவில் காத்திருந்த ஏழை புலம்பெயர்ந்தோரின் துன்பநிலையைக் கண்ணுற்றதே அவர்களின் நலனுக்காகச் செயல்பட இவரைத் தூண்டியது. இம்மக்கள் ஜெனோவா சென்று அங்கிருந்து கப்பலில் அமெரிக்காவுக்குப் புலம்பெயர்வதற்காக காத்திருந்தவர்கள். அம்மக்கள் குறித்து இவ்வாறு விவரித்துள்ளார், Piacenza ஆயர் ஸ்கலாபிரினி.

“தங்கள் சொந்த கிராமங்களில் பல மகிழ்வான நினைவுகளோடு தொடர்புடைய இம்மக்கள், வீட்டு நினைவை உதறித்தள்ளி, கண்ணீரோடு தங்களின் கிராமத்திற்கு பிரியாவிடை சொல்லி, நாட்டைவிட்டே வெளியேறத் தயாராக இருந்தவர்கள்.அதிகபட்ச வரிகள் மற்றும் பல துயரங்களை எதிர்கொண்ட இம்மக்களுக்கு இதைத் தவிர வேறு வழி தெரியவில்லை. தங்களுக்கு உணவளித்த நாட்டைவிட்டு அந்நிய நாடு செல்லவிருந்த இவர்களுக்கு அங்கும் ரொட்டி கிடைக்கும், துயரங்கள் குறையும் என்ற நம்பிக்கையில் தாயகத்தைவிட்டுச் செல்வதற்கு இவர்கள் தயாராக இருந்தவர்கள்”

புலம்பெயர்ந்தோருக்கு ஆதரவாக....

இந்த புலம்பெயர்ந்தோரின் துன்பங்களுக்குப் பதிலுறுக்கப் போதுமான வழிகளைத் தேடிய ஆயர் ஸ்கலாபிரினி அவர்கள், பல்வேறு முன்னெடுப்புக்களில் ஈடுபட்டார். இத்தாலிய புலம்பெயர்ந்தோர் குறித்த சட்டத்திற்காக விரிவான பரிந்துரைகளை இவர் வெளியிட்டார்.

1887ஆம் ஆண்டில் புனித சார்லஸ் மறைப்பணியாளர் துறவு சபை ஒன்றைத் தொடங்கினார். புலம்பெயர்ந்தோருக்கு உதவுவதற்கென்று புனித இரபேல் பொதுநிலையினர் இயக்கத்தை ஆரம்பித்தார். 1895ஆம் ஆண்டில் பெண்களுக்கென்று புனித சார்லஸ் பொரோமேயோ சபையை உருவாக்கினார். இயேசுவின் திருஇதய திருத்தூதர்கள் அமைப்பிற்கு மறைமாவட்ட அங்கீகாரம் அளித்து, 1900மாம் ஆண்டில் பிரேசில் நாட்டிலுள்ள இத்தாலிய புலம்பெயர்ந்தோருக்குப் பணியாற்ற அனுப்பி வைத்தார்.

இத்தாலிய புலம்பெயர்ந்தோர் வாழ்ந்த நிலையறிந்து, அவர்களைச் சந்திப்பதற்காக இவர் தனது 62வது வயதில் நோயாய் இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது 1901க்கும் 1904ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் அமெரிக்க ஐக்கிய நாடு, பிரேசில், அர்ஜென்டீனா, போன்ற நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டார். இவரது மனஉறதியும் விடாமுயற்சியும் இவர் ஆரம்பித்த புனித சார்லஸ் சபைகளின் மறைப்பணியாளர்களின் பணிக்கு வலுவூட்டின. இவர் ஆரம்பித்த துறவு சபைகள், ஸ்கலாபிரினியர்கள் என பொதுவாக அழைக்கப்படுகின்றனர்.

ஆயர் ஸ்கலாபிரினி அவர்களின் இறைவாக்குப்பண்பு, பிறரன்பு, புலம்பெயர்ந்தோர் மீது கொண்டிருந்த அன்பு, போதனைகள் ஆகிய அனைத்தும், ஒரு புனித ஆயரை நமக்குத் தந்துள்ளன, மேலும் புலம்பெயர்ந்தோர் அதிகரித்துவரும் நம் காலத்திற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டாய் விளங்குகிறார். ஸ்கலாபிரினி அவர்கள், 1905ஆம் ஆண்டு ஜூன் முதல் தேதி இறைபதம் சேர்ந்தார். 1997ஆம் ஆண்டு நவம்பர் முதல் தேதி இவரை அருளாளராக அறிவித்த திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்கள், இவருக்கு புலம்பெயர்ந்தோரின் தந்தை என்று பெயர் சூட்டினார். இத்தாலியிலேயே ஏழ்மையில் வாழ்ந்த மக்கள் குறித்து அரசுக்கு எடுத்துரைத்து வந்தார் இவர். கைதிகள், நோயாளிகள் மற்றும் காதுகேளாதவர்கள், வாய் பேசாதவர்கள் ஆகியோர் மீதும் தன் மேய்ப்புப்பணியில் அக்கறை காட்டினார். திருஅவை பொது வாழ்வில் பங்குகொண்டு உண்மை மற்றும், நீதிக்காக உழைப்பது அதன் கடமை என்பதையும் இவர் வலியுறுத்தி வந்தார்.

அருளாளர் ஸ்கலாபிரினி அவர்கள், புனிதராக அறிவிக்கப்படுவதற்கு ஒரு புதுமை தேவைப்பட்டநிலையில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அதற்கு விதிவிலக்கு அளித்து, அவர் புனிதராக அறிவிக்கப்பட அனுமதியளித்துள்ளார். ஸ்கலாபிரினி அவர்கள், உலகினர் அனைவர் இதயங்களிலும் புலம்பெயர்ந்தோரின் பாதுகாவலர் புனிதராக ஏற்கனவே போற்றப்பட்டுவருவதை முன்னிட்டு, அவர் புனிதராக அறிவிக்கப்படுவதற்கு திருத்தந்தை இசைவு அளித்துள்ளார்.

அருளாளர்கள் ஜான் பாப்டிஸ்ட் ஸ்கலாபிரினி, ஆர்த்தேமிதே சாத்தி (Artemide Zatti) ஆகிய இருவரையும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அக்டோபர் 09, இஞ்ஞாயிறு இத்தாலி நேரம் காலை 10.15 மணிக்கு வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் புனிதர்களாக அறிவித்தார்.  இவரது திருநாள், ஜூன் முதல் நாள் ஆகும். 

புனித Artemide Zatti (12 அக், 1880 – 15 மார்ச் 1951)

புனித Artemide Zatti
புனித Artemide Zatti

புனித Artemide Zatti அவர்கள், 1880ஆம் ஆண்டு அக்டோபர் 12ம் தேதி இத்தாலியின் ரெஜ்ஜியோ எமிலியா மாநிலத்தில் Boretto என்ற ஊரில் பிறந்தவர். இவருக்கு மூன்று சகோதரர்கள் மற்றும் நான்கு சகோதரிகள் இருந்தனர். குடும்பத்தின் ஏழ்மைநிலையால் 1889ஆம் ஆண்டில் பள்ளி செல்வதை நிறுத்தி, பக்கத்து வீட்டு செல்வந்த குடும்பத்தில் வேலைக்குச் சேர்ந்தார். இத்தாலியின் அப்போதைய பொருளாதாரச் சூழல், அக்குடும்பத்தை அர்ஜென்டீனா நாட்டுக்குப் புலம்பெயர வைத்தது. 1897ஆம் ஆண்டு பிப்ரவரி 9ம் தேதி, அர்ஜென்டீனாவின் புவனோஸ் அய்ரஸ் துறைமுகத்தை அடைந்த அக்குடும்பம், Bahía Blancaவில் குடியேறியது. இக்குடும்பத்திற்கு முன்னரே அந்நாடு சென்றிருந்த சாத்தியின் மாமா, ஓர் உணவகத்திலும், கல் தொழிற்சாலையிலும் வேலைசெய்து வந்தார். அந்நகரில் Carlos Cavalli என்ற அருள்பணியாளரைச் சந்தித்தார் சாத்தி. அவ்வருள்பணியாளர் சாத்தி அவர்களை, தொன்போஸ்கோவன் சலேசிய சபையில் சேருமாறு ஊக்கப்படுத்தினார். அதன் பயனாக 1900மாம் ஆண்டு ஏப்ரல் 19ம் தேதி சலேசிய சபையில் இவர் சேர்ந்தார். 1911ஆம் ஆண்டு பிப்ரவரி 11ம் தேதி சலேசிய சபையில் அருள்சகோதரராக இறுதி அர்ப்பணத்தைக் கொடுத்தார்.

நோயாளிகள் பராமரிப்பு

சாத்தி அவர்கள், Bernal இல்லத்தில் காசநோயால் தாக்கப்பட்டிருந்த Ernesto Giuliani என்ற அருள்பணியாளரை, 1900மாம் ஆண்டு முதல் பராமரித்து வந்தார். அந்த அருள்பணியாளரும் 1902ஆம் ஆண்டில் இறந்தார். சிலநேரங்களில் Ceferino Namuncurá என்பவரையும் பராமரித்துவந்த சாத்தி அவர்களும், பின்னர் காசநோயால் தாக்கப்பட்டார். Videmaவில் ஓய்வில் இருந்தபோது அன்னை மரியாவிடம் வேண்டி அற்புதமாய் இவர் குணமடைந்தார். 1903ஆம் ஆண்டு மார்ச் 5ம் தேதி San Joséயில் இருந்த மருத்துவமனையில் வேதியப் பொருள் நிர்வாகம் இவரிடம் ஒப்படைக்கப்பட்டது. புதிய நாட்டில் மரைப்பணியாற்றுவதற்காக இஸ்பானியத்தைக் கற்றார் இவர். நோயாளிகளைச் சந்தித்தார். செவிலியர் படிப்பையும் முடித்தார். 1914ஆம் ஆண்டில் அர்ஜென்டீனா குடிமகனாகவும் இவர் மாறினார். "Flores del Campo" என்ற கிறிஸ்தவ வார இதழையும் இவர் வெளியிட்டார். இறுதியில் கல்லீரல் புற்றுநோயால் தாக்கப்பட்டு 1951ஆம் ஆண்டு மார்ச் 15ம் தேதி Videmaவில் இறைபதம் சேர்ந்தார். அவரது கல்லறை அந்நகரின் சலேசிய சபை சிற்றாலயத்தில் உள்ளது. தன் வாழ்வின் இறுதிவரை நோயாளிகளுக்குச் சேவையாற்ற தன்னை அர்ப்பணித்திருந்தவர் புனித சாத்தி.

அருளாளர் சாத்தி குறித்து திருத்தந்தை பிரான்சிஸ்

மேலும், இவர் புனிதராக அறிவிக்கப்படும் நிகழ்வை முன்னிட்டு, அக்டோபர் 08, சனிக்கிழமையன்று, வத்திக்கானின் திருத்தந்தை புனித ஆறாம் பவுல் அரங்கில் ஏறத்தாழ ஆயிரம் திருப்பயணிகளைச் சந்தித்து உரையாற்றிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஆர்த்தேமிதே சாத்தி அவர்கள், ஏழைகளின் உறவினர், அநாதைகள், நோயாளிகள், பூர்வீகஇன மக்கள் ஆகியோரில் இயேசுவைப் பார்த்தவர் என்று புகழ்ந்து கூறியுள்ளார். சாத்தி அவர்கள், எப்போதும் மிதிவண்டியில், வெள்ளை அங்கி அணிந்து, மருந்துகள் பை மற்றும், கையில் செபமாலையுடன் எப்போதும் சென்று நோயாளிகள் மற்றும் ஏழைகளுக்கு உதவியவர் என்றும் திருத்தந்தை கூறினார். அக்காலத்தில் உலகெங்கிலுமிருந்து புவனோஸ் அய்ரஸ் சென்ற புலம்பெயர்ந்தோர், வசதியான பகுதிகளில் குடியேறாமல், கம்யூனிஸ்டுகள், பொதுவுடமை வாதிகள், அருள்பணியாளர்களைக் கொலைசெய்வோர் வாழ்ந்த பகுதிகளில் குடியேறினர், இவர்கள் மத்தியில் “இதயங்களின் மாபெரும் ஆசிரியர்களான” சலேசிய சபையினர், சலேசிய சபையினர் மறைப்பணியாற்றினர் எனவும் திருத்தந்தை கூறினார்.

Zatti அவர்கள், 2002ஆம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி வத்திக்கானின் புனித பேதுரு வளாகத்தில் திருத்தந்தை புனித 2ம் யோவான் பவுல் அவர்களால் அருளாளராக அறிவிக்கப்பட்டார். இவரது பரிந்துரையால் புதுமை ஒன்று நடைபெற்றுள்ளதையடுத்து, 2022ஆம் ஆண்டு அக்டோபர் 9ம் தேதி ஞாயிறன்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இவரை புனிதராக அறிவித்தார். இவரது திருநாள் நவம்பர் 13ம் தேதி சிறப்பிக்கப்படுகிறது.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

09 October 2022, 11:23