பிறர்நலப் பணிக்கென்று தன்னை அர்ப்பணித்திருந்தவர் அரசி எலிசபெத்
மெரினா ராஜ்- வத்திக்கான்
இயேசுவின்மீது ஆழமான நம்பிக்கை கொண்டு, பிறரன்புப் பணிகள் செய்ய தன்னை அர்ப்பணித்து, எளிய மக்களோடு பழகும் உள்ளம் கொண்டவர் அரசி இரண்டாம் எலிசபெத் அவர்கள் என்று, அவரது மறைவு குறித்து உலகின் பல்வேறு கத்தோலிக்க ஆயர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
பிரித்தானிய நாட்டு புதிய அரசரும், மறைந்த அரசி இரண்டாம் எலிசபெத் அவர்களின் மூத்த மகனுமாகிய அரசர் மூன்றாம் சார்லஸ் அவர்கள், செப்டம்பர் 8 இவ்வியாழனன்று அரசி அவர்களின் மறைவு குறித்த அறிவிப்பினை வெளியிட்டதைத் தொடர்ந்து உலகின் பல்வேறு கத்தோலிக்க ஆயர்கள் தங்களது ஆழ்ந்த கவலைகளை இரங்கல் செய்திகளாக தெரிவிக்கையில் இவ்வாறு கூறியுள்ளனர்.
இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆயர் பேரவைத் தலைவரும், வெஸ்ட்மின்ஸ்டர் பேராயருமான கர்தினால் வின்சென்ட் நிக்கோல்ஸ் அவர்களும் அரசி இரண்டாம் எலிசபெத்தின் மரணத்தையொட்டி இரங்கல் செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளார்.
கானடா நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை, வட அயர்லாந்தின் Armagh பேராயர் Eamon Martin, நியுசிலாந்து நாட்டின் Aotearoa கத்தோலிக்க ஆயர், பிரித்தானிய பிரதமர் Liz Truss போன்ற பல தலைவர்கள் தங்களின் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.
மகத்தான தூண்டுதல்தரும் வாழ்வை வாழ்ந்தவர், பிறரன்புப் பணிகள் செய்ய தன்னை அர்ப்பணித்து அதைக் கறைபடாது செயல்படுத்தியவர் என்று கானடா நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவையும், நட்புறவும் நகைச்சுவையுணர்வும் கொண்டு எல்லாருடனும் எளிமையாக பழகும் உள்ளம் கொண்டவர் என்று Armagh பேராயர் Eamon Martin அவர்களும் தெரிவித்துள்ளனர்.
மேலும், கடினமான அரசியல், பொருளாதார, சமூக, மற்றும் குடும்பச் சூழல்களின்போது மாண்போடும் அமைதியோடும் செயல்பட்டு தீர்வுகாணும் அரசி அவர்களின் மறைவு நாட்டு மக்களுக்கு பெரும் இழப்பு என்றும் தெரிவித்துள்ளார் பேராயர் Eamon.
நியுசிலாந்தின் Aotearoaவில் வாழும் பெரும்பாலான மக்கள், நாட்டை சிறப்பாக ஆட்சி செய்த அரசி எலிசபெத் போல வேறு எந்த அரசரையும் இதற்குமுன் பார்த்ததில்லை என்றும், நாட்டின் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்திற்கு நிலையான காரணமாயிருப்பவர் அரசி என்றும், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர் பேரவை தெரிவித்துள்ளது
இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்