தேடுதல்

பங்களாதேதேஷில்  இயேசு சபையினர் பங்களாதேதேஷில் இயேசு சபையினர் 

பங்களாதேஷில் இயேசு சபையினரின் முதல் பள்ளி

16ம் நூற்றாண்டில் பங்களாதேஷில் இயேசு சபை மறைபோதகர்களே முதன்முதலாக கிறிஸ்தவத்தைப் பரப்பியவர்கள்

மேரி தெரேசா: வத்திக்கான்

பங்களாதேஷ் நாட்டுச் சிறாரை, நல்ல குடிமகன்களாக உருவாக்கும் நோக்கத்தில், அந்நாட்டில் இயேசு சபையினர், தங்களின் முதல் பள்ளிக்கூடத்தைத் தொடங்கியுள்ளனர் என்று பீதேஸ் செய்தி கூறுகிறது.

தலைநகர் டாக்காவுக்கு அருகில், Gazipur மாவட்டத்தின் Kuchilabari நகரில் இக்கல்வி ஆண்டில் இயேசு சபையினர் தொடங்கியுள்ள புனித சவேரியார் பன்னாட்டு பள்ளியில் (St. Xavier's International School) தற்போது 34 மாணவர்கள் படித்து வருகின்றனர் என்றும், இப்பள்ளியில் 600 மாணவர்கள் வரை கல்வி கற்க வசதி உள்ளது என்றும் பீதேஸ் செய்தி தெரிவித்துள்ளது.

இப்பன்னாட்டு பள்ளியின் தலைமை ஆசிரியரான இயேசு சபை அருள்பணி Probash Rozario அவர்கள், இப்பள்ளி குறித்து பீதேஸ் செய்தியிடம் விளக்குகையில், ஏற்கனவே தொடங்குவதாய் திட்டமிடப்பட்டிருந்த இப்பள்ளிக்கூடம், பெருந்தொற்று பரவல் காரணமாகத் தள்ளிவைக்கப்பட்டிருந்தது என்றும், இப்போது அத்திட்டம் நிறைவேறியுள்ளது என்று கூறியுள்ளார்.

அண்மை ஆண்டுகளில், Motbari பங்குத்தள பகுதியில் சிறாருக்கு ஆங்கிலப் பள்ளியின் தேவை அதிகமாக இருந்தபோதிலும் அத்தகைய பள்ளி இதுவரை அங்கு இல்லை என்று கூறியுள்ள அருள்பணி ரொசாரியோ அவர்கள், "ஒரு தீ மற்ற தீயை எரியச் செய்கிறது" என்ற விருதுவாக்கோடு இப்பள்ளியைத் தொடங்கியுள்ளோம் என்று தெரிவித்துள்ளார்.

சிறார் நல்ல குடிமக்களாகவும், நாட்டுப்பற்று உள்ளவர்களாகவும் உருவாக அவர்களோடு உடன்பயணிக்க விரும்புகின்றோம் என்று அருள்பணி ரொசாரியோ அவர்கள் எடுத்தியம்பியுள்ளார். 

மேலும் இப்பள்ளியின் தொடக்க விழாவில் கலந்துகொண்ட அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவரும், டாக்கா பேராயருமான Bejoy N. D'Cruze அவர்கள், பங்களாதேஷில் திருஅவை கல்வித்துறையை மேம்படுத்த விரும்புகிறது, அதற்குச் சான்றாக இக்கல்வி நிலையம் விளங்குகிறது என்று கூறியுள்ளார். 

16ம் நூற்றாண்டில் பங்களாதேஷில் இயேசு சபை மறைபோதகர்களே முதன்முதலாக கிறிஸ்தவத்தைப் பரப்பியவர்கள். பின்னர் அந்நாட்டைவிட்டுச் சென்ற இயேசு சபையினர், 1994ஆம் ஆண்டில் பங்களாதேஷ் ஆயர்களின் அழைப்பின்பேரில் மீண்டும் அந்நாட்டில் தங்களின் பணிகளைத் தொடங்கினர்.

பங்களாதேஷில் 90 விழுக்காட்டினர் முஸ்லிம்கள். ஆயினும், அந்நாட்டில் ஒரு பல்கலைக்கழகம், 13 கல்லூரிகள், 200க்கு மேற்பட்ட உயர்நிலைப் பள்ளிகள், 500க்கும் மேற்பட்ட ஆரம்பப் பள்ளிகள், மற்றும் தொழிற்கல்வி நிறுவனங்களை கத்தோலிக்கத் திருஅவை நடத்துகின்றது. (Fides)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 September 2022, 14:14