தேடுதல்

பொதுக் காலம் 24ம் ஞாயிறு பொதுக் காலம் 24ம் ஞாயிறு  

பொதுக் காலம் 24ம் ஞாயிறு : ‘மனமாற்றமே மகிழ்வுக்கான வழி!'

காணாமற்போன மகனைப் போல மனம் உடைந்து, நொறுங்கிய உள்ளத்துடன் நம் இறைத்தந்தையை நோக்கித் திரும்பி வருவோம்.
ஞாயிறு சிந்தனை 11092022

செல்வராஜ் சூசைமாணிக்கம் : வத்திக்கான்

(வாசகங்கள்   I. விப   32: 7-11,13-14   II. 1 திமோ 1: 12-17    III. லூக் 15: 1-32)

பொதுக் காலத்தின் 24-ஆம் ஞாயிறு இன்று சிறப்பிக்கப்படுகிறது. இன்றைய வாசகங்கள், ‘மனமாற்றமே மகிழ்வுக்கான வழி’ என்ற உயரிய சிந்தனையை நமக்கு வழங்குகின்றன. இன்றைய முதல் வாசகத்தில், இஸ்ரயேல் மக்கள் கடவுளின் நன்மைத்தனத்தையும், இரக்கப் பெருக்கத்தையும் மறந்து தங்களுக்கான அழிவைத் தாங்களே தேடிக்கொள்ள முற்பட்ட நிலையில், மோசேயின் பரிந்துரையால் அவர்கள் புதுவாழ்வு பெறுகின்றனர். தொடக்க காலத்தில், திருஅவைக்கும் அதன் தலைவரான இயேசுவுக்கும் எதிராகச் செயல்பட்ட புனித பவுலடியார், அவரின் இரக்கம்நிறை அன்பால் புதுவாழ்வு பெற்றதை இரண்டாம் வாசகத்தில் எடுத்துரைக்கின்றார். பரிவிரிக்கம் கொண்ட தந்தையால் காணாமற்போன மகன் பெற்ற புதுவாழ்வுக் குறித்து விரிவாக எடுத்துரைக்கிறது நற்செய்தி வாசகம். இப்போது நற்செய்தி வாசகத்தை மையமாகக் கொண்டு நமது சிந்தனைகளை விரிவுபடுத்துவோம். இன்றைய நற்செய்தி வாசகம், காணாமற்போன ஆடு, காணாமற்போன திராக்மா, காணாமற்போன மகன் ஆகிய மூன்று நிகழ்வுகளைக் குறித்துப் பேசுகிறது. இந்த மூன்று நிகழ்வுகளிலும் ‘மகிழ்வு’ என்னும் செய்தி ஆழமாக வலியுறுத்தப்படுகிறது. முதலாவதாக, தான் வைத்திருந்த 100 ஆடுகளில் காணாமற்போன அந்த ஒரு ஆட்டை பல்வேறு சிரமங்களுக்கு மத்தியில் அந்த நபர் தேடிக்கண்டுபிடிக்கும்போது, உள்ளத்தில் அளவில்லாத மகிழ்வடைகின்றார். தான் பெற்ற மகிழ்வைப் பிறரோடுப் பகிர்ந்துகொள்கின்றார். இரண்டாவதாக, தான் வைத்திருத்த பத்துத் திராக்மாக்களுள் காணாமற்போன அந்த ஒரு திராக்மாவை மிகவும் நுணுக்கமாகத் தேடிக் கண்டுபிடித்து மகிழ்கின்றார் அந்தப்பெண். இந்நிறை மகிழ்வைத் தன் அண்டை வீட்டாரோடுப் பகிர்ந்துகொள்கின்றார். மூன்றாவதாக, காணாமற்போன மகன் திரும்பி வரும்போது, தந்தை அடையும் மகிழ்வையும், அதனை எல்லாருக்கும் தெரிவிக்கும் விதமாகப் பெரிய விருதுக்கு ஏற்பாடு செய்ய பணியாளர்களுக்குக் கட்டளை இடுவதையும் நாம் காண்கின்றோம்.

இன்றைய நற்செய்தியில் காணாமற்போன ஆடு, காணாமற்போன திராக்மா ஆகிய இரண்டு உவமைகளையும் மிகவும் சுருக்கமாகச் சொல்லிவிட்டு, காணாமற்போன மகன் பற்றிய உவமையைச் சற்று விரிவாகவே கூறுகின்றார் இயேசு. காரணம், இறைத்தந்தையின் சாயலாகவும் உருவாகவும் படைக்கப்பட்ட மனிதர், அவருக்கு எதிராகப் பாவங்கள் புரிகின்றபோது அது இருவருக்குமே, அதாவது, தந்தைக்கும் மகனுக்கும் இதயத்தில் பெருத்த வலியை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்டுவதற்காகத்தான் இயேசு இதனைப் பெரிதாக விரித்துரைக்கின்றார். காணாமற்போன ஆடு, காணாமற்போன திராக்மா ஆகிய இரண்டு உவமைகளிலும் அதனைக் கண்டுபிடிப்பதற்கான முயற்சி என்பது ஒருபக்கம் மட்டுமே அதாவது, அதன் உரிமையாளர்களால் மட்டுமே எடுக்கப்படுகின்றது. ஆனால், காணாமற்போன மகன் உவமையில் தேடுதல் முயற்சி என்பது இரண்டு பக்கமும் நிகழ்கிறது. அதாவது, தந்தையைக் காண மகனும், மகனைக் காணத் தந்தையும் முயற்சி எடுப்பதைப் பார்க்கின்றோம். மன்னிப்பு வேண்டி மகன் தந்தையைநோக்கி வரும் அதேவேளையில், மன்னிப்பு வழங்கி அவரை ஏற்றுக்கொள்ள தந்தையும் மகனை நோக்கி வருகின்றார்.

‘மீண்டும் தேடுதல்’ என்ற இந்த நிகழ்வில், வருந்துதல், திருந்துதல், திரும்புதல் ஆகிய மூன்று படிநிலைகள் காணாமற்போன மகனிடத்தில் வெளிப்படுவதைக் காண்கின்றோம். அவ்வாறே, காத்திருத்தல், ஏற்றுக்கொள்ளல், விருந்தளித்தல் ஆகிய மூன்று படிநிலைகள் தந்தையிடமும் வெளிப்படுவதைப் பார்க்கின்றோம். குறிப்பாக, காணாமற்போன மகன் அறிவுத்தெளிந்தவராய்த் தந்தையிடம் திரும்பி வந்து, ‘அப்பா, கடவுளுக்கும் உமக்கும் எதிராக நான் பாவம் செய்தேன்; இனிமேல் நான் உம்முடைய மகன் எனப்படத் தகுதியற்றவன்’ என்று கூறும்போது, அவரின் தந்தை அதுகுறித்து எந்தக் கருத்தையும் கூறாமல், அல்லது, அதைப் பெரிதாகக் காதில் வாங்கிக்கொள்ளாமல் அவர் தம் பணியாளரை நோக்கி, “முதல்தரமான ஆடையைக் கொண்டுவந்து இவனுக்கு உடுத்துங்கள்; இவனுடைய கைக்கு மோதிரமும், காலுக்கு மிதியடியும் அணிவியுங்கள்; கொழுத்த கன்றைக் கொண்டு வந்து அடியுங்கள்; நாம் மகிழ்ந்து விருந்து கொண்டாடுவோம். ஏனெனில், என் மகன் இவன் இறந்துபோயிருந்தான்; மீண்டும் உயிர் பெற்று வந்துள்ளான். காணாமற்போயிருந்தான்; மீண்டும் கிடைத்துள்ளான்’ என்று கூறுகின்றார். இதனால் தந்தை தன் இளைய மகனின் குற்றங்களை அறியவில்லை என்று நாம் நினைக்கக் கூடாது. மாறாக, அவர் எல்லாவற்றையும் அறிந்திருந்தும், அவற்றையெல்லாம் மன்னித்து மறந்தவராக, மகிழ்வுநிறை புதுவாழ்விற்குள் அவரை அழைத்துச் செல்கின்றார்.

பழைய ஏற்பாட்டில், கோபக்கனலை வெளிப்படுத்துபவராக இறைத்தந்தை சில வேளைகளில் காட்டப்பட்டாலும், பெரும்பாலான நேரங்களில் தான் தேர்ந்துகொண்ட இஸ்ரயேல் மக்கள்மீது அவர் கனிவிரக்கம் நிறைந்தவராகவே வெளிப்படுத்தப்படுகிறார். குறிப்பாக, அவர் மிகுந்த பரிவிரக்கம் கொண்டவராகவும், சிதறடிக்கப்பட்ட ஆடுகளாகிய இஸ்ரயேல் மக்களைத் தேடிச்செல்லும் தலைச்சிறந்த ஒரு நல்லாயராகவும் நமக்கு  முன்னிறுத்தப்படுகிறார். அப்பகுதியை இப்போது தியானச் சிந்தனையுடன் வாசிக்கக் கேட்போம்.  நானே என் மந்தையைத் தேடிச் சென்று பேணிக் காப்பேன். ஓர் ஆயன் தன் மந்தையினின்று சிதறுண்ட ஆடுகளைத் தேடித் செல்வதுபோல, நானும் என் மந்தையைத் தேடிப் போவேன். மப்பும் மந்தாரமுமான நாளில் அவற்றை எல்லா இடங்களினின்றும் மீட்டு வருவேன். மக்களினங்களினின்று அவற்றை வெளிக்கொணர்ந்து, நாடுகளினின்று கூட்டிச்சேர்த்து, அவற்றின் சொந்த நாட்டிற்கு அழைத்து வருவேன். அவற்றை இஸ்ரயேலின் மலைகளிலும் ஓடையோரங்களிலும் நாட்டின் எல்லாக் குடியிருப்புகளிலும் மேய்ப்பேன். நல்ல மேய்ச்சல் நிலத்தில் அவற்றை மேய்ப்பேன். இஸ்ரயேலின் மலையுச்சிகளில் அவற்றின் மேய்ச்சல் நிலம் இருக்கும். அங்கே வளமான மேய்ச்சல் நிலத்தில் அவை இளைப்பாறும். இஸ்ரயேலின் மலைகளின்மேல் செழிப்பான மேய்ச்சல் நிலத்தில் அவை மேயும். நானே என் மந்தையை மேய்த்து, இளைப்பாறச் செய்வேன், என்கிறார் தலைவராகிய ஆண்டவர். காணாமல் போனதைத் தேடுவேன்; அலைந்து திரிவதைத் திரும்பக்கொண்டுவருவேன்; காயப்பட்டதற்குக் கட்டுப்போடுவேன்; நலிந்தவற்றைத் திடப்படுத்துவேன் (எசே 34: 11-16). புதிய ஏற்பாட்டில், இயேசு ஆண்டவரும் இறைத்தந்தையை பரிவிரக்கம் கொண்டவராக, தனது மாறாதப் பேரன்பால் பாவிகளை வாஞ்சையுடன் அரவணைத்துக் கொள்பவராக, வெளிப்படுத்துகின்றார். “உங்கள் தந்தை இரக்கமுள்ளவராய் இருப்பது போல நீங்களும் இரக்கம் உள்ளவர்களாய் இருங்கள்” (லூக் 6:36) என்றும், “நீங்கள் என் பெயரால் தந்தையிடம் கேட்பதை எல்லாம் அவர் உங்களுக்குத் தருவார் என உறுதியாக உங்களுக்குச் சொல்கிறேன்” (யோவா 16:23) என்றும், இயேசு கூறுவதைக் காண்கின்றோம்.  

ஒரு பாசமான குடும்பம். அக்குடும்பத்தின் தம்பதியினருக்கு அழகான ஒரு ஆண்குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த ஒருசில ஆண்டுகளிலேயே அதன் தாய் நோய்வாய்ப்பட்டு இறந்துபோனார். ஆனாலும், அந்த இளம் வயதிலும் மனம் தளராத அத்தந்தை மறுமணம் செய்துகொள்ள விருப்பாமல், இந்தக் குழந்தையை வளர்த்தெடுப்பதில் கண்ணும் கருத்துமாய் இருந்தார். ஒரு தாயின் அன்புக்கு மேலாகவே தன் தூய அன்பை அக்குழந்தையின் மீதுப் பொழிந்தார். இன்னும் சொல்லப்போனால், ‘எனக்கு ஒரு தாய் இல்லையே!’ என்று வருந்தாத அளவிற்கு அவன்மீது அன்பை வாரி வழங்கினார். அவன் வளர்ந்து இளைஞனானான். அப்போது தன்னையொத்த இளைஞர்களுடன் பழகத் தொடங்கினான். அவன் நட்பு வட்டாரம் சரியில்லாமல் போயிற்று. கூடா நட்பு கேடாய் முடியும் என்பதற்கிணங்க, அவன் வாழ்வு திசைமாறத் தொடங்கியது. கற்றுக்கொள்ளக்கூடாத அனைத்துக் கெட்டப் பழக்கவழக்கங்களையும் அந்த வயதிலியே கற்றுக்கொண்டான் அவன். இவைகள் அனைத்தும் அவனுடைய தந்தைக்குத் தெரியாமலேயே நிகழ்ந்தன. ஒருநாள் தனது தீய நண்பர்களின் பேச்சைக் கேட்டுத் தனது தந்தைக்குத் தெரியாமல், அவனுடைய எதிர்காலத்திற்காக அவர் சேமித்து வைத்திருந்த மொத்த பணத்தையும், பொருள்களையும் எடுத்துக்கொண்டு வேறு மாநிலத்திற்குச் சென்றான். தான் கொண்டு சென்ற அனைத்தையும் தன் தீய நண்பர்களுடன் செலவழித்தான். எல்லாம் செலவானதும், அவனுடைய தீய நண்பர்கள் அவனை விட்டுவிட்டு மாயமாய் மறைந்துபோனார்கள். யாரையுமே அறியாத அம்மாநிலத்தில் ஒரு சில இடங்களில் வேலை செய்து பொருளீட்ட நினைத்தான் அவன். ஆனால் அதுவும் முடியாமல் போனது. இறுதியாக, அவனுக்குச் சாக்கடையைச் சுத்தம் செய்யும் வேலை கிடைத்தது. நாற்றமடிக்கும் அந்தச் சாக்கடைத் தொழிலை செய்துகொண்டிருந்தபோதுதான் தன் தந்தையின் அளவிடமுடியா பேரன்பையும், நிறைவான பாசத்தையும் உணர்ந்தான். அறிவுத் தெளிந்தவனாய் அந்த அன்புத் தந்தைக்கு ஒரு கடிதம் எழுதினான்.

“அன்புள்ள அப்பாவிற்குப் பாவியான மகன் எழுதுவது.... அப்பா என்ற வார்த்தையை சொல்லக்கூட நான் தகுதி இல்லாதவன். உங்களின் நிறைந்த அன்பால் என்னைப் பாசமாக வளர்த்தீர்கள். அம்மா இறந்த பிறகு, அந்த இளம் வயதிலும் கூட மறுமணம் செய்துகொள்ளாமல் உங்கள் ஒட்டுமொத்த வாழ்வையே எனக்காகத் தியாகம் செய்தீர்கள். எனது தீய நட்பாலும், உங்கள் அன்பை உணராத நிலையாலும் சாக்கடையாகிப்போன எனது வாழ்வு தற்போது சாக்கடைத் தொழிலில்தான் கழிகிறது. அறிவுத் தெளிந்தவனாக, இப்போது மீண்டும் உங்களிடம் திரும்பி வந்து ஒரு புதிய வாழ்வைத் தொடங்க விரும்புகின்றேன். என்னை ஏற்றுக்கொள்வீர்களாக அப்பா...? நீங்கள் என்னை ஏற்றுக்கொள்வதாக இருந்தால், அதன் அடையாளமாக, நமது வீட்டிற்கு முன்னுள்ள வாகைமரத்தின் மேல் வெள்ளைக்கொடி ஒன்றைப் பறக்கவிடுங்கள். அதை நான் பார்க்கும்போது நீங்கள் என்னை மன்னித்து எற்றுக்கொண்டீர்கள் என்று நினைத்து உங்களிடம் வருவேன். ஒருவேளை, அம்மரத்தின்மீது வெள்ளைக்கொடி இல்லையென்றால் நீங்கள் என்னை ஏற்கவில்லை என்று அர்த்தம். அதற்குமேலும் நான் வாழ்வதற்கு விரும்பமாட்டேன். எங்காவது சென்று என் வாழ்வை முடித்துக்கொள்வேன்” என்று எழுதியிருந்தான். சில நாள்கள் கழித்து தான் கூறியவாறே தன் தந்தையை நோக்கி வந்தான் அம்மகன். வீட்டை நெருங்கும் வேளையில் வாகைமரத்தின்மீது வெள்ளைக் கொடி இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டே வந்தான். அப்போது அவனுக்கு மாபெரும் ஆச்சரியம் ஒன்று காத்திருந்தது. ஆம், ஒருகொடி அல்ல, அந்த வாகைமரம் முழுவதுமாக எண்ணற்ற வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டிருந்தன. தன்னை நோக்கி வந்த மகனை ஓடிச்சென்று கட்டியணைத்து முத்தமழைப் பொழிந்தார் தந்தை. அப்போது தந்தையை நோக்கி, “அப்பா, மரத்தின்மீது ஒரே ஒரு வெள்ளைக்கொடிதானே நான் கட்டச்சொன்னேன். எதற்கப்பா இத்தனைக் கொடிகளைக் கட்டி வைத்தீர்கள்” என்று கேட்டான். அதற்குத் தந்தை, “மகனே, நீ என்னைவிட்டுப் பிரிந்து சென்ற நாளிலிருந்து உன் வருகைக்காக வழிமேல் விழிவைத்துக் காத்துக்கொண்டிருந்தேன். அப்போது எனக்கு நீ அனுப்பிய உன்கடிதம் கண்டு பெருமகிழ்வு கொண்டேன். நான் ஒரே ஒரு கொடியைக் கட்டி வைத்து நீ அதைப் பார்க்காமல் போய்விட்டால் நான் என்ன செய்வது? உன்னை நான் மீண்டும் இழக்க விரும்பவில்லை. அதனால்தான் இத்தனைக் கொடிகளைக் கட்டிவைத்தேன்” என்றார் தந்தை.

நமது குற்றங்களுக்காகவும் பாவங்களுக்காகவும் நம்மைக் கடுமையாகத் தண்டிப்பவர் தாம்  யாவே கடவுள் என்றும், பாவத்தின் சம்பளமாக விளைந்த நோய்களிலிருந்தும் பாவங்களிலிருந்தும் ஒருபோதும் விடுதலை கிடையாது என்றும் கூறி மமதையோடு வாழ்ந்து வந்தனர் பரிசேயரும், சதுசேயரும், மறைநூல் அறிஞரும். ஆனால், இவர்களால் வெறுத்தொதுக்கப்பட்ட பாவிகள் அனைவரையும் தனது இரக்கம்நிறை மாறாதப் பேரன்பால் அரவணைத்துக் கொள்பவர்தான் இறைத்தந்தை என்று எடுத்துக்காட்டவே இந்த மூன்று உவமைகளையும் எடுத்துரைக்கின்றார் இயேசு. ஆகவே, காணாமற்போன மகனைப் போல மனம் உடைந்து, நொறுங்கிய உள்ளத்துடன் நம் இறைத்தந்தையை நோக்கித் திரும்பி வருவோம். உண்மையான மனமாற்றமே மகிழ்வான வாழ்விற்கு வழி என்பதை உணர்வோம். இக்கருத்தை உள்ளத்தில் ஏற்றுவாழ இந்நாளில் இறைவனிடம் மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

10 September 2022, 12:35