தேடுதல்

 கடவுளின் கரம் மனிதருக்கு உதவ  எப்போதும்  உண்டு கடவுளின் கரம் மனிதருக்கு உதவ எப்போதும் உண்டு 

விவிலியத் தேடல்: திருப்பாடல் 34-2- ‘நெருக்கடிகளில் கைவிடாத கடவுள்!’

நெருக்கடிகள் ஏற்படும் தருணங்களிலெல்லாம் தாவீதைப் போன்று நம்பிக்கையுடன் இறைத்தந்தையை நோக்கிக் குரலெழுப்பி மன்றாடுவோம்.
திருப்பாடல் - 34, பகுதி 2

செல்வராஜ் சூசைமாணிக்கம் - வத்திக்கான்

முன்பொரு காலத்தில் மன்னர் ஒருவர் ஆட்சி புரிந்து வந்தார். ஒரு நாள் அவர் மனதில், "கடவுள் இருக்கும் இடத்திற்கும், நமக்கும் எவ்வளவு தூரம் இருக்கும்?" என்ற கேள்வி எழுந்தது. உடனே அரசவையைக் கூட்டி அனைவரிடமும் இதற்கான பதிலைக் கேட்டார் மன்னர். அரசவையில் இருந்த யாருக்கும் இதற்கான விடை தெரியவில்லை. ஆகவே, இதற்கான விடையைத் தெரிந்து கொள்ள ஊருக்கு வெளியிலிருந்து ஒரு துறவி வரவழைக்கப்பட்டார். அந்தத் துறவியிடம், "கடவுள் எவ்வளவு தூரத்தில் இருக்கிறார் என்பது உங்களுக்குத் தெரியுமா?" என்று வினவினார் மன்னர். அதற்கு அந்தத் துறவி, "கடவுள் கூப்பிடுகிற தூரத்தில் தான் இருக்கிறார்" என்று பதில் அளித்தார். "அப்படியானால், கடவுளை அழைத்தால் உடனே வந்து விடுவார் அல்லவா?" என்று கேட்டார் மன்னர். "எந்த இடத்தில் கடவுள் இருப்பதாக நீ நினைக்கிறாயோ அதைப் பொறுத்தது" என்றார் துறவி. "புரியும்படி கூறுங்கள் துறவியாரே" என்று அந்த மன்னர் கேட்டுக் கொண்டார். “கடவுள் எவ்வளவு தொலைவில் இருக்கிறார் என்று நீங்கள் நினைக்கிறீர்களோ, அந்த நினைப்பிற்குத் தகுந்தவாறு உடனே வந்து கடவுள் அருள் புரிவார். எந்த இடத்தில் இருந்தாலும் உங்களின் குரல் கடவுளுக்கு நிச்சயம் கேட்கும். உள்ளத்தில் கடவுள் இருப்பதாக நினைத்து அழைத்தால் உடனே வந்து கடவுள் அருள்புரிவார்" அதிலும் குறிப்பாக, துயரத்தின் பிடியில் சிக்குண்டு, அனைவராலும் கைவிடப்பட்ட நிலையில் கடவுளை நோக்கி ஒரு ஏழைக் கூவி அழைக்கும்போது அவர் அந்த ஏழையின் குரலுக்கு உடனே செவிசாய்ப்பார். காரணம், கடவுள் ஏழைகளை ஒருபோதும் கைவிடுவதில்லை” என்று மன்னருக்கு விரிவாக எடுத்துரைத்தார் அந்தத் துறவி.

கடந்த வார நமது விவிலியத் தேடலில், 'அச்சமகற்றும் இறைவனின் துணை!' என்ற தலைப்பில் திருப்பாடல் 34-இல் 1 முதல் 4 வரை உள்ள இறைவசனங்கள்  குறித்த நமது சிந்தனைகளைத் தொடங்கினோம்.  இவ்வார விவிலியத் தேடலில் அதனைத் தொடர்ந்து வரும் 5, 6 ஆகிய இரண்டு இறைவசனங்கள் குறித்துத் தியானிப்போம். இப்போது அவ்வார்த்தைகளை உள்ளத்தில் உள்வாங்குவோம். அவரை நோக்கிப் பார்த்தோர் மகிழ்ச்சியால் மிளிர்ந்தனர்; அவர்கள் முகம் அவமானத்திற்கு உள்ளாகவில்லை. இந்த ஏழை கூவியழைத்தான்; ஆண்டவர் அவனுக்குச் செவிசாய்த்தார்; அவர் எல்லா நெருக்கடியினின்றும் அவனை விடுவித்துக் காத்தார். (வசனங்கள் 5-6). இந்த மூன்று இறைவசனங்களிலும், நெருக்கடியான வேளையில் தன்னை நோக்கி கூவியழைக்கும் ஏழை ஒருவரின் குரலுக்குக் கடவுள் செவிசாய்க்கிறார் என்று நமக்கு எடுத்துரைக்கின்றார் தாவீது அரசர்.

இன்று நாம் வாழும் சூழலில் நெருக்கடி என்ற வார்த்தை அதிகம் பயன்படுத்தப்படுகிறது. எடுத்துக்காட்டாக உணவு நெருக்கடி, பண நெருக்கடி, பணிகளில் நெருக்கடி, உறவுமுறைகளில் நெருக்கடி, ஒன்றித்து வாழ்வதில் நெருக்கடி, உரிமைகளை நிலைநாட்டுவதில் நெருக்கடி என நமது வாழ்வில் நாம் சந்திக்கும் நெருக்கடிகளின் பட்டியல் நீண்டுகொண்டே போகிறது. சில மனிதரின் அதிகாரவெறியால் இன்று உலகில் எண்ணற்ற மக்கள் நெருக்கடிக்கு ஆளாக்கி வருகின்றனர். இன்று நாம் இருபெரும் நெருக்கடிகளைச் சந்தித்து வருகிறோம். முதலாவது, உக்ரைன் போர் இலட்சக் கணக்கான மக்களை புலம்பெயரச் செய்து அம்மக்களின் வாழ்வில் மிகப்பெரும் நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளது. இரஷ்யா - உக்ரைன் போர் தொடங்கியது முதல் இன்றுவரை 51 இலட்சம் மக்கள் வறுமையில் வீழ்ந்துள்ளனர். இரஷ்யா - உக்ரைன் போர் ஏற்பட்டதன் வழியாக உலகளவில் வறுமையில் இருக்கும் மொத்தம் மக்கள் தொகை 9 விழுக்காடாக உயர்ந்துள்ளது. கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் லாக்டவுன், வர்த்தகம் மற்றும் வேவைவாய்ப்புச் சரிவு ஆகியவற்றால் 12.5 கோடி மக்கள் வறுமையைச் சந்தித்துள்ள நிலையில், இரஷ்யா-உக்ரைன் போரால் 7.1 கோடி மக்கள் வறுமையை எதிர்கொண்டு மிகப்பெரும் நெருக்கடியைச் சந்தித்து வருகின்றனர்.  இரண்டாவதாக, இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி. இது, கோத்தபய இராஜபக்சே அரசின் ஒடுக்குமுறை சட்டங்களையும் இணைய தணிக்கையையும், அதன் இரத்தம் தோய்ந்த உள்நாட்டுப் போரில் பயிற்றுவிக்கப்பட்ட பாதுகாப்பு படைகளின் மோசமான ஒடுக்குமுறைகளையும் மீறி இன, மொழி, மத பேதமின்றி அனைத்துத் தொழிலாளர்களும், இளையோரும், கிராமப்புற ஏழை எளிய மக்களும் ஒன்றிணைந்து போராடி தங்களுக்கு ஏற்பட்டுள்ள நெருக்கடியைக் களைய முனைந்துள்ளனர். இப்பொருளாதார நெருக்கடியால் பாதிக்கப்பட்டுள்ள பொது மக்களில் ஒருவரான சிறீகாந்தன் என்பவர், ‘’நான் திருமணமாகி இரண்டு பிள்ளைகளுடன் வாழ்கின்றேன். எனக்கு நிரந்தரமான வேலையில்லை. மாதத்தில் 15 நாள்கள்தான் எனக்கு வேலை கிடைக்கும். அப்படி வேலைக்குச் செல்லும் நாள்களில் தினமும் 1300 ரூபாயிலிருந்து 1500 ரூபாய் வரைதான் சம்பளம் கொடுப்பார்கள். இன்றுள்ள விலைவாசி ஏற்றத்துக்கு இந்த வருமானத்துடன் வாழ முடியாது. அனைத்துப் பொருள்களும் விலை ஏறிவிட்டன. மூன்று வேளை உணவு என்பது சாத்தியமில்லாத ஒன்றாகிவிட்டது. அதிக நேரங்களில் உணவு மற்றும் பால்மா இல்லாமல் வாழ வேண்டிய நிலைக்கு எம்மை இந்த அரசு கொண்டு வந்துவிட்டது. எனது பிள்ளைகள் பட்டினியுடன்தான் பள்ளிக்குச் செல்கின்றனர்” என்று தனது வேதனையை வெளிப்படுத்தியுள்ளார். இவர்களின் நெருக்கடி நிலைகள் தீரவேண்டும் என்பதற்காக உலகெங்கினும் பலர் தங்களின் உதவிக் கரங்களை நீட்டியுள்ளதையும் நாம் காண்கின்றோம். மிகவும் சிறப்பாக, இந்த நெருக்கடி வேளைகளின்போது நமது திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தனது புதன் பொது மறைக்கல்வி உரைகளின்போதும், ஞாயிறு மூவேளை செப உரைகளின்போதும் இம்மக்களின் நலன்களுக்காகத் தொடர்ந்து இறைவேண்டல் செய்து வருகிறார் என்பதையும் நம் நினைவில் நிறுத்துவோம். உலக இறைமக்களோடு இணைந்து திருத்தந்தை எழுப்பிய இந்த இறைவேண்டல்களின் பயனாக உக்ரைனிலும், இலங்கையிலும் ஏற்பட்ட நெருக்கடிகள் ஓரளவுக்குக் குறைந்துள்ளதையும் நம்மால் காணமுடிகிறது.

துன்புறும் வேளையில் அரவணைக்கும் இயேசு
துன்புறும் வேளையில் அரவணைக்கும் இயேசு

மன்னர் சவுலால் வஞ்சிக்ககப்பட்ட தாவீது நெருக்கடியான நிலைக்குத் தள்ளப்பட்டார். நல்லது செய்ய நினைத்த தாவீதுக்குப் பொல்லாப்புதான் வந்து சேர்ந்தது. இந்தச் சிறுவயதில் தான் செய்திட்ட இந்த இமாலய சாதனைக்காக, அதாவது, கோலியாத்தைக் கொன்றொழித்த அந்த வீரச் செயலுக்காக, மன்னர் சவுல் தன்னைக் குறித்து பெருமைகொள்வார் என்று எண்ணினார். ஆனால் விளைந்ததோ சிறுமை. காட்டிற்குள் ஓடிஒளியவேண்டிய நெருக்கடிக்கு ஆளானார். ஆனாலும் ஆண்டவரின் துணைகொண்டு அவர் கோலியாத்தை வென்றதால், அந்த நெருக்கடியான பேராபதிலிருந்து கடவுள் தன்னைக் காப்பாற்றுவார் என்று அவர் முழுமையாக நம்பினார். இந்த ஆழமான இறைநம்பிக்கை அவருடைய வார்த்தைகளில் வெளிப்படுவதைப் பார்க்கிறோம். இதன் காரணமாகவே, நீரே எனக்குப் புகலிடம்; இன்னலினின்று என்னை நீர் பாதுகாக்கின்றீர்;  உம் மீட்பினால் எழும் ஆரவாரம் என்னைச் சூழ்ந்தொலிக்கச் செய்கின்றீர் (திபா 32:7) என்றும், பசியுற்றனர்; தாகமுற்றனர்; மனச்சோர்வுற்றுக்  களைத்துப்போயினர். தம் நெருக்கடியில் ஆண்டவரைக் கூவியழைத்தனர்; அவர்களுக்குற்ற துன்பங்களிலிருந்து அவர்களை அவர் விடுவித்தார் (திபா 107:5,6) என்றும் வேறு சில திருப்பாடல்களிலும் எடுத்துரைக்கின்றார் தாவீது.

இறைவாக்கினரான எரேமியாவும் அவருடைய வாழ்வில் பல்வேறு நெருக்கடிகளையும், அச்சம் நிறைந்த மரணச் சூழல்களையும் எதிர்கொண்டார். ஆனாலும், கடவுளை மட்டுமே தனது அடைக்கலமாகக் கொண்டு எல்லாவிதமான நெருக்கடிகளிலும் மனவுறுதியுடன் இறுதிவரை நிலைத்து நின்றார்.  “ஆண்டவரே, உமக்கு எல்லாம் தெரியும்; நீர் என்னை அறிவீர்; என்னை நினைவுகூரும்; எனக்கு உதவியருளும்; என்னைத் துன்புறுத்துவோரை என் பொருட்டுப் பழிவாங்கும்; நீர் பொறுமையுள்ளவர்; என்னைத் தள்ளிவிடாதேயும்; உம்பொருட்டு நான் வசைமொழிகளுக்கு ஆளாகிறேன் என்பதை நினைவில் கொள்ளும்” என்று ஆண்டவரை நோக்கி முறையிடும் எரேமியாவிற்கு, நான் உன்னை அவர்கள்முன் வலிமை வாய்ந்த வெண்கலச் சுவராக்குவேன்; அவர்கள் உனக்கு எதிராய்ப் போராடுவார்கள்; ஆனால், உன்மேல் வெற்றி கொள்ள மாட்டார்கள்; ஏனெனில் உன்னை விடுவிக்கவும் காக்கவும் நான் உன்னோடு இருக்கிறேன், என்கிறார் ஆண்டவர். (எரே 15:15, 20) என்று அவருக்குப் பதில்மொழி கூறுவதையும் பார்க்கின்றோம்.

இறுதியாக நமதாண்டவர் இயேசு, கல்வாரியில் வீர மரணத்தைத் தழுவுவதற்கு முன்பாக கெத்செமணி தோட்டத்தில் தன்னை அனுப்பிய இறைத்தந்தையிடம் தனக்கு ஏற்பட்டுள்ள மரண நெருக்கடிப் பற்றி எடுத்துரைக்கின்றார். இயேசு, பேதுருவையும் செபதேயுவின் மக்கள் இருவரையும் தம்முடன் கூட்டிச் சென்றார். அப்போது அவர் துயரமும் மனக்கலக்கமும் அடையத் தொடங்கினார். அவர், “எனது உள்ளம் சாவு வருமளவுக்கு ஆழ்துயரம் கொண்டுள்ளது. நீங்கள் என்னோடு இங்கேயே தங்கி விழித்திருங்கள்” என்று அவர்களிடம் கூறினார். பிறகு அவர் சற்று அப்பால் சென்று முகங்குப்புற விழுந்து, “என் தந்தையே, முடிந்தால் இத்துன்பக் கிண்ணம் என்னை விட்டு அகலட்டும். ஆனாலும், என் விருப்பப்படி அல்ல, உம் விருப்பப் படியே நிகழட்டும்” என்று கூறி இறைவனிடம் வேண்டினார். (மத் 26:37-39).

இறைத்தந்தையின் உடனிருப்பில்தான் இயேசு சாவை வென்று உயிர்த்தெழுந்து, என்றென்றுமுள்ள வாழ்வில் தந்தையின் வலப்பக்கம் அமர்ந்துள்ளார் என்பதை நாம் அறிவோம். ஆகவே, கிறிஸ்தவ வாழ்வில் நெருக்கடிகள் என்பது மிகவும் தவிர்க்க முடியாதவை. அதிலும் குறிப்பாக, நாம் நேரிய வாழ்வு வாழ்வதற்கு முற்படும்போதெல்லம் நெருக்கடிகள் நம்மை அதிகம் வீழ்த்தவே செய்யும். அப்படிப்பட்ட நெருக்கடியான தருணங்களில் எல்லாம் தாவீதைப் போன்று, இறைத்தந்தையை நோக்கி குரெழுப்பி மன்றாடுவோம். அவர் நிச்சயம் நம் மன்றாட்டுகளுக்குச் செவிசாய்ப்பார். அதற்கான அருள்வரங்களுக்காக இந்நாளில் இறைவனை நோக்கி மன்றாடுவோம்.

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 செப்டம்பர் 2022, 12:45