தேடுதல்

பேரிடர் வெள்ளத்தால் தத்தளிக்கும் பாகிஸ்தான் மக்கள் பேரிடர் வெள்ளத்தால் தத்தளிக்கும் பாகிஸ்தான் மக்கள்  

பாகிஸ்தான் ஆயர்கள்: மக்கள் உதவிக்காக ஏங்குகின்றனர்

காலநிலை மாற்றம் ஏற்படுத்தி வருகின்ற பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுப்பதுபோல் தெரியவில்லை - ஆயர் Shukardin

மேரி தெரேசா: வத்திக்கான்

பாகிஸ்தானில் அண்மையில் இடம்பெற்ற வரலாறு காணாத வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, அரசு மிகச் சிறிய அளவிலே உதவி வருகின்றவேளை, அவ்வியற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டுள்ள இலட்சக்கணக்கான மக்களுக்கு உடனடி உதவிகளுக்கு மீண்டும் விண்ணப்பித்துள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

இம்மாதத் தொடக்கத்தில், ஐந்தாயிரத்துக்கும் அதிகமான மக்களுக்குத் தேவையான உணவு, மருந்து மற்றும் குடியிருப்பு வசதிகளை வழங்கியுள்ள, ACN எனப்படும் தேவையில் இருக்கும் திருஅவைகளுக்கு உதவுகின்ற பிறரன்பு அமைப்பு உட்பட, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு உதவி வருகின்ற அனைத்து பிறரன்பு அமைப்புகளுக்கும் நன்றியையும் தெரிவித்துள்ளனர் ஆயர்கள்.  

ACN அமைப்பு பாகிஸ்தான் ஆயர்களோடு நடத்திய இணையதள கருத்தரங்கில் முதலில் பேசிய, வெள்ளத்தால் கடுமையாய் பாதிக்கப்பட்டுள்ள சிந்து மாநிலத்தின் ஹைதராபாத் ஆயர் Samson Shukardin அவர்கள், அவ்வமைப்பினர் ஆற்றிய உதவிகள் குறிப்பிட்டுச் சொல்லும் அளவுக்கு உள்ளன என்று பாராட்டியதோடு, நன்றியும் தெரிவித்தார்.

காலநிலை மாற்றம், பெருமளவில் பாதிப்புக்களை ஏற்படுத்தி வருகின்றது எனவும், நீண்ட காலமாக நிலவும் இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு, பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுப்பதுபோல் தெரியவில்லை எனவும் கூறியுள்ள ஆயர் Shukardin அவர்கள், நாட்டில் பல பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன, ஆனால் அப்பகுதிகளில் இடர்துடைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள அரசிடம் திட்டம் எதுவுமில்லை என்று தெரிவித்துள்ளார்.

மேலும், கராச்சி பேராயர் Benny Travas அவர்கள் பேசுகையில், சிந்து மாநில அரசு, பாதிக்கப்பட்டுள்ள குடும்பங்களுக்கு தலா நூறு டாலர் மதிப்புடைய உதவிகளைச் செய்துள்ளது, ஆயினும், அம்மக்கள் இழந்திருப்பவைகளோடு கணக்கிடுகையில் அவ்வுதவி ஒன்றுமே இல்லை என்று கூறியுள்ளார். (ACN)

இந்த செய்தியை வாசித்ததற்கு நன்றி. நீங்கள் தொடர்ந்து எங்களது அண்மைச் செய்திகளைப் பெற விரும்பினால் “செய்தி மடல்” என்பதைத் தொட்டு பதிவுசெய்ய உங்களை அழைக்கின்றோம். இங்கே கிளிக் செய்யவும்

20 செப்டம்பர் 2022, 14:07